நீ நிழல்

 
மகிழ்வாய் இருந்த ஒருகணத்தில்
    மாலைத் தென்றல் நீயானாய்
சுகமாய் இருக்கும் வேளைகளில்
    சுவையாய் இசையாய் நீயானாய்
அகலா திருக்கும் துன்பத்தில்
    அழுகை தாங்கும் தோளானாய்
அகிலாய் நெஞ்சை நானேற்ற
    அதிலே ஒளியாய் வாழ்சிவனே!


புரியா திருக்கும் வாழ்க்கைதனில்
    புதிராய் விடையாய்ப் புதுப்புதிதாய்ப்
பொருளாய் அருளாய் வரும்சிவனே
    போகம் யோகம் தரும்சிவனே
இருளாய் இருப்ப துன்நீதான்
    இதயம் திறந்தால் அதிலொளிநீ
கரும்பாய் இனிக்கும் கதைகளும்நீ
    கவிதை களும்நீ என்சிவனே!

அப்பா என்றே சொல்லெடுத்தால்
    அந்தச் சொல்லை முடிக்குமுன்னே
தப்பா தென்றன் எதிர்நின்று
    தாழா தென்னைக் காப்பவன்நீ
குப்பு றக்க விழுந்தெழுந்து
    குட்டிக் கரணம் பலவடித்து
எப்போ தும்நின் துணைதேடி
    ஏங்கும் குழந்தை நான்சிவனே!

தந்தை ஆனால் தாயுள்ளம்
    தன்னை வார்க்கும் திருவுள்ளம்
விந்தை கொண்ட விரிவுள்ளம்
    வீரம் தாங்கும் பெருவுள்ளம்
பந்த யத்தில் விளையாடும்
    பாலன் உள்ளும் படருள்ளம்
சந்தைத் தெருவில் திரிமூடன்
    சாரும் நீழல் நீசிவனே!!

-விவேக்பாரதி
17.02.2019

Comments

Popular Posts