தேசம் வாழ்க


அச்ச மின்றி தேசம் காக்கும்
    ஆண்மை யாளர் ஆதலால்
இச்சை தன்கு டும்பம் நீங்கும்
    இரும்பு வேலி ஆதலால்
துச்ச மென்று தேகம் தந்து
    துணையி ருப்பர் ஆதலால்
பச்சை யூணி யைந்த வேர்ப்ப
    டைகள் தம்மை வாழ்த்துவோம்!


நம்பு கின்ற மக்கள் வாழ
    நாடு காப்பர் ஆதலால்
எம்பி தோளின் வன்மை யாலே
    எல்லை மீட்பர் ஆதலால்
அம்பும் வாளும் குண்டும் வைத்து
    அரண்ப டைப்பர் ஆதலால்
கும்பிட் டிந்த நாட்டு வீரர்க்
    கூட்டம் தம்மை வாழ்த்துவோம்!

சூழ்ச்சி யாலும் பொய்க ளாலும்
    சூழ்ந்தி ருப்பர் ஆதலால்
வீழ்ச்சி ஒன்று நேரின் முன்னம்
    வந்து கொள்வர் ஆதலால்
பாழ்ச்சி ரிப்பும் பகட்டு மற்ற
    பண்பு கொள்வர் ஆதலால்
வாழ்க வாழ்க சேனை வீரர்
    வாழ்க வென்று வாழ்த்துவோம்!

எல்லை காக்கும் சக்தி மைந்தர்
    இல்லை என்றால் நாமெலாம்
தொல்லை தீர்ந்து நாளும் போதும்
    தூக்கி டத்தான் முடியுமா?
கல்லை ஒத்த வைர நெஞ்சர்
    கடமை யின்றி நாமெலாம்
நல்ல செல்வம் வீடு வாசல்
    நலம் வளர்க்க ஏலுமா?

தேச பக்தி கொண்ட மக்கள்
    தேகம் இற்று வீழ்கிறார்
நாச மிந்தச் செய்தி கேட்டும்
    நாமு றங்கி ஆழ்வமோ?
வீச டாவுன் நேர்மை வாளை
    வீழ்த்தும் பொய்ம்மை வீழ்ந்திடும்
பேச டாநீ பேசப் பேசப்
    பெருமை தேசம் வாழ்ந்திடும்!!
 
-விவேக்பாரதி
16.02.2019

Comments

Popular Posts