அரசனும் அரசியும்


மன்னவன் நானுனக்கு - அடி 
    மாதரசே நீ அரசியடி! 
என்னரும் பைங்கிளியே - நீ 
    என்முன்பு வந்திடும் போதினையே 
இன்னமும் வேண்டுகிறேன்! - என் 
    இதய அறைகளில் எதிரொலியாய் 
உன்னுடை நாமமடி! - எனை 
    உதறிவிட் டாலென்ன நான்புரிவேன்! 

பூக்களின் ராணியடி - நீ 
    புள்ளினம் பேசிடும் ஓசையடி 
பாக்களின் தேனியடி - எனைப் 
    பாவலன் ஆக்கிய தேவியடி 
சீக்கிரம் நீவரவும் - என் 
    ஜீவன் ஒளிபெற வைத்திடவும் 
தீக்கிறை யாகிமனம் - ஒரு 
    திண்ண தவத்தை இயற்றும்நிதம்! 

கோபத்தில் மூத்தவளே - எனைக் 
    கோல மொழியில் சிறையெடுத்தே 
ஆபத்தை நீக்கிவைத்தாய் - அடி 
    ஆசைவைத்தாய் மிகப் பாசம்வைத்தாய்! 
தாபத்தை நீகளைந்தாய் - என் 
    தமிழைக் கவிதையை எளிமைசெய்தாய் 
தூபத்தைப் போல்மனத்தில் - நீ 
    துணையெனவே நின்று சுடரவைத்தாய்! 

காதலைச் செய்யவந்தாய் - என் 
    கவிதைகள் கேட்டு ரசிகையென
நீதிறம் ஏற்றிநின்றாய்! - இன்று 
    நேற்றல்லடி நம் காதலது 
காதங்கள் தூரங்களும் - பல 
    காலங்கள் வாழ்ந்து சிறந்ததுவாம்! 
நீதிகள் சொல்லியவை - இதில் 
    நீயும் நானுமொரு காதலர்கள்! 

என்னை இணைந்ததுவும் - எனது 
    இன்பங்கள் என்று வளர்ந்ததுவும் 
மின்னை நிகர்த்ததுவும்! - எழில் 
    மீட்டி எனையுன்னில் வளர்த்ததுவும் 
உன்னை தொழுவதுவும் - நான் 
    உள்ளத்தில் இன்று கதறுவதும் 
இன்றைய செயலில்லையே - அவை 
    இனிதில் எழுதிய சாத்திரமாம்! 

ஆசைக் குகந்தவளே - எனது 
    ஆழம் அகலம் அறிந்தவளே 
நேசத் தமிழ்மகளே! - எனை 
    நேற்றுடன் நாளைக்கும் சேர்பவளே! 
கூசும் நிலாச்சுடரே - எனைக் 
    குறியுடன் வாழ்ந்திடச் செய்பவளே! 
பூசைக் குரியவளே! - உன் 
    புன்னகை யாலெனை ஆள்பவளே! 

உன்றனை மெச்சுகிறேன்! - நீ 
    உள்ளத் திருப்பவள் என்பதில்தான் 
என்பிழை நான்மறந்தேன்! - உன் 
    ஏவலில் செய்தி புதியதுற்றேன்! 
என்னிலை மாறிடவும் - நான் 
    எதிலும் நிலையற்று வாழுகின்ற 
இன்னலைத் தீர்ந்திடவும் - என் 
    இறைவி அளித்திட்ட சீதனமே! 

கோடிக ளாய்க்கவிதை - எனைக் 
    கொட்டவும் வைக்கின்ற அற்புதமே! 
ஓடிடும் நேரங்களாய் - எனை 
    ஓசைக்குள் மாட்டிய சொற்பதமே! 
நாடி நரம்பிலெல்லாம் - எனில் 
    நன்கு விளங்கிடும் காதலியே 
பாடுகிறேன் உனையே - பக்கம் 
    பார்த்தருள் செய்திட வேண்டுகிறேன்! 

மெல்லிய இதழ்வேண்டும் - எனை 
    மேயும் இருவிழி அவைவேண்டும் 
சொல்லரும் மனம்வேண்டும் - உடன் 
    சொக்கப்பொன் தேகமும் வரவேண்டும்! 
அல்நிறக் குழல்வேண்டும் - அதில் 
    ஆக்கிய போதை மணம்வேண்டும் 
வல்லவள் வரவேண்டும் - என் 
    வாழ்க்கை நிறையும் வளம்வேண்டும்! 

புத்தமுதம் தரவும் - நீ 
    புளகம் கொடுக்கத் தழுவியெனை 
நித்தம் வதம்செயவும் - உடல் 
    நீளம் அளந்துநின் முத்தங்களால் 
ஒத்தனம் தந்திடவும் - மனம் 
    ஓங்கி இசைந்திடும் காதலியே 
இத்தனையும் தரவே - இந்த 
    இணையத் தறைமிக சிறியதடி!!

#மௌனமடி நீயெனக்கு

-விவேக்பாரதி 
19.04.2019

Comments

Popular Posts