கண்ணீர் வெள்ளம்


அன்பே இதயத்தின் ஆணி இயக்ககமே 
இன்பே இல்லாமல் இங்கே கருகுகிறேன்! 
எதுதான் என்குற்றம்? எப்போதும் போலுன்னில் 
பொதுவாய் நானிருப்பேன் எனநினைத்தல் குற்றமதோ? 
உன்னை முழுதாய் உலகமாக மொத்தமாய் 
எண்ணி வாழ்வதுதான் என்னுடைய தவறாமோ? 
எனக்குன் மனத்தில் எவருக்கும் இல்லாத 
தனியிடம் இருக்குமெனச் சிந்தத்தல் பிழையாமோ? 
நீயாய் எனைத்தினமும் அழைப்பாய் எனநினைத்து 
ஓயாமல் காத்திருக்கும் உள்ளம்தான் என்பிழையோ? 

ஒன்றும் விளங்கவில்லை உயிமட்டும் ரத்தமெழ 
நின்று கதறி நிலைதாழ்ந்து வீழ்கிறது! 
கவிதை இருக்கிறது கைத்தேற்றி காப்பாற்ற 
செவிகள் இல்லையே சேதிகளை நான்சொல்ல! 
சிலபொழு துன்னால் தனிமை ஆனதற்கே 
அலையாய்ப் பேரலைகாய்க் கண்ணீர் பொங்குதடி! 
பலநாள் நானுன்னைப் பார்க்காமல் பேசாமல் 
உலகத்தில் வாழ்வதெலாம் உளம்நினைத்தால் கதறுதடி!
 
தேனே திரவியமே நீயின்றி என்வாழ்க்கை 
வீணே என்பதெலாம் பழையகதை நீயறிவாய்! 
ஒப்புக்குச் சொன்ன வார்த்தையென நினைத்தாயோ? 
எப்போதும் எல்லாரும் போல மறந்திடுவேன் 
என்றே நினைத்தாயோ? என்போல பித்தனைநீ 
முன்பு கண்டாயோ? நானறியேன்! என்னைப்பார்
நீவருவாய் எனக்காத்து நீண்டிருக்கும் இவ்விடத்தில் 
நாவறட்சி ஆகி நான்மயங்கி வீழும்வரை 
உனக்காய் எழுத உயிர்நினைக்கும் வார்த்தைகளைக் 
கணக்காய் எழுதியேயென் காலம் கழிக்கின்றேன்! 
உன்னோடு நான்பேச உள்ளத்தில் உள்ளதெலாம் 
என்னோடு மட்டுமே எழுதி அழித்திருப்பேன்!
 
எல்லாம் அறிந்திருந்தும் என்னன்பே உன்னுடைய 
சொல்லை வழங்காமல் சுணங்க வைப்பதென்ன 
நாடகமா என்காதல் நலத்தைச் சோதிக்க 
ஆடுகின்ற விளையாட்டா? ஆழ மனத்துள்ளே 
சிரித்தபடி இருப்பாயோ? சீரழிந்து நான்கதற 
விரித்துக்கை ஏந்தியெனை வீதியிடை விட்டாயோ? 
என்னாசை அத்தனையும் என்னோடு வைக்காமல் 
உன்னோடு திணிப்பதனால் உரிமையில் சினந்தாயோ?
 
அம்மா தாங்கவில்லை அன்பே என்னோடு 
சும்மா வேனும் சிலவார்த்தை பேசாயோ 
பாலை வனத்தில் படுதுயரம் படுமென்னை 
கோலக் கரம்கொண்டு கொஞ்சம் தழுவாயோ? 
உடலை நனைக்கின்ற உப்புக் கண்ணீரை 
உடனே துடைத்தெனக்கு உன்முத்தம் இடுவாயோ? 

வரிக்கு வரியெழுதி வழிகின்ற கண்ணீரைச்
சரிசெய்யப் பார்க்கின்றேன் சளைக்காமல் அத்துளிகள் 
வார்த்தைக்கு வார்த்தை தொண்டை வழியிறங்கி 
பேர்த்துச் சிரிக்கின்ற பேரிடரை என்சொல்வேன்? 

ஐயோ காதலி ஆளில்லா வீதியிலே 
மெய்யாய் அலைகின்றேன் மேற்பார்வை நீபார்த்துக் 
காதல் கரம்தீண்டிக் கண்ணிமையால் இமைமூடி 
பாதை சரிசெய்து பாகேட்க வேண்டுகிறேன்! 
உன்னைவிட் டாலெனக்கும் உலகத்தில் கதியேது? 
மின்னல்வெட் டும்பார்வை மிரட்டுகின்ற மின்மினியே 
கொஞ்சப் பலனிருக்குக் கேட்டது கிடைக்குமென
வஞ்ச மனம்சொல்லும்! வாக்காலே கெஞ்சுகின்றேன்! 

ஒருவார்த்தை நீபேசு ஓடோடி உள்ளத்தைச் 
செருப்பாக நான்தருவேன் செய்யணியாய் நான்வருவேன்!
ஆசைப் பார்வைகளை அளிவின்றி நீசிந்து 
பாச மனத்தை பாயாக்கித் தான்விரிப்பேன்! 
காதலா என்றொரு கனிவுக் குரல்பேசு 
சாதலைத் தாண்டியும் ஜென்மம் தரித்திருப்பேன்!
 
பூமணம்போல் கூந்தல் புதுமணத்தால் எப்போதும் 
நான்மயங்க வைக்கின்ற நளின உடலழகே, 
அன்பும் அக்கறையும் அதட்டலும் இல்லாமல் 
இன்பம் மட்டுமே இருப்பதனால் என்னபயன்? 

உன்மேல் இத்தனைப் பித்தாகி இருக்கின்ற 
என்னை அறிந்திருந்தும் ஏதோ ஒருதொலைவில் 
நீவைத்துப் பார்ப்பாயா? அதற்குப் பதிலாக 
தீவைத்தால் அப்போதே திசையாகிப் போவேனே! 
பேசும் இடம்விட்டுப் பிரித்தாயா? பதிலுக்கு 
நாச விஷம்தந்தால் நயந்து குடிப்பேனே! 
நீநிற்கும் திசைநோக்கி நீட்டி அமர்ந்தபடி 
ஊன்நிற்க உயிர்நிற்க உள்ளம் பதைக்கின்றேன்! 

மணிநேரம் சென்றாலும் மனத்தில் உனையெண்ணி 
அணிகவிதை சாற்றாமல் அடுத்தெனக்கு வேலையென்ன? 
உத்யோகம் வாழ்க்கை உயரெண்ணம் இருந்தாலும் 
சத்தியமாய் உனையன்றி சாரும் தொழிலென்ன? 
கிடைத்தற்கு அரிதான பொக்கிஷமே! என்னுடைய 
மடமை பொறுக்கின்ற மாண்பினமே! நீயெல்லால் 
எங்கே செல்வேன்? எவருக்கு எனைப்பிடிக்கும்? 
மங்கா மணிவிளக்கே மரியாதை மறந்தேனா? 
என்பிழையைச் சொல்வாய் எடுத்துறைப்பாய் அறிவிலிநான் 
உன்பிழை. பிழை பிழையென்று அறைந்திடுவாய் 

அப்போ தேனும் அடியேன் மனந்திருந்தி 
ஒப்பும் உனக்குள் ஒடுங்குவேனோ எனப்பார்ப்போம்! 
காதல் கனவே கனவில் நிஜவுருவே 
ஏதும் நீயின்றி எனக்கு இயங்கவில்லை 
நீவருக நீவருக நீவருக வந்திங்குத் 
தீவிரமாய் எழுதுமெனைத் திட்டி உயிர்தருக 

என்னைவிட என்மேல் காதல்மேல் காதல் 
வென்று வளர்த்தநீ வெதும்பிக் கிடப்பாயே... 
வெதும்பல் ஏதுக்கடி வேகமாக முன்வந்து 
கதவைத் திற காற்றுபோல் நான்வருவேன், 
கண்ணைத் திற காட்சியாக நான்வருவேன், 
எண்ணத்தைத் திற எழுத்தாக நான்வருவேன், 
செவிகளைத் திற செவ்விசையாய் நான்வருவேன் 
தவிப்பை நீக்கிடவுன் தாள்திறவாய் பைங்கொடியே!
 
மனமிறங்க மாட்டாயா மறுபடியும் உன்வாழ்வில் 
எனையிழுக்க மாட்டாயா? எழுத்துமட்டும் இல்லையெனில் 
என்ன ஆவேன் எப்படி உயிர்மாய்வேன்? 
ஒன்றும் விளங்கவில்லை உள்மட்டும் கனக்கிறது!
எப்படி எல்லாம் புலம்புகிறேன், என்கவிதை 
அர்ப்பத்தைக் கேட்கவேனும் ஆதரிக்க வேண்டுமெனை! 
நேசமதே கேட்கின்றேன் நெஞ்சத்தை நீபார்க்க 
யாசகந்தான் கேட்கின்றேன்! யௌவனமே! பெண்மகளே! 
அழவைத்துப் பார்ப்பதிலே ஆனந்தம் உனக்கில்லை 
தொழவைத்துப் பார்க்கின்றாய்! தொழுவேன் தொழுதெழுவேன்! 
கண்ணீர் வற்றுதடி கண்ணிரண்டும் தீயாகி 
கைவிரலை நோவுதடி! கன்னியை நினைந்துருகும்  
சிந்தை வலிக்குதடி! சிரமமடி காத்திருத்தல் 
முந்தி வந்தெனக்கு முத்தமழை நூறிட்டு 
வாழ்விக்க வேண்டுகிறேன்! வசந்தமே! வாள்விழியே 
தாழ்விக்க நினைத்தாலும் தலைகுணிவேன் உனக்காக! 

வரிவரம்பைத் தாண்டியிந்த வாக்கியங்கள் செல்வனபோல் 
வலிவரம்பைத் தாங்கியென் மனமிங்கே சென்றதடி! 
வலிபொறுக்க வில்லை அதனால் கதறுகிறேன் 
மலரினத்து இதழழகி மனமிரங்கி எனைமீட்பாய்!
 
அந்தோ தனிமையிலே அழியும் நிலைநீக்க 
இந்தோ ஒருசேதி இனிதே விடுத்திடுவாய் 
கொட்டித் தீர்த்தவற்றைக் கோழை மனமழுது 
கட்டி முடித்தவற்றைக் கார்மழையாய் நான்பொழிவேன்! 
சீக்கிரமே நீயழைக்கும் சிறப்பிங்கு நேராதா? 
ஜாக்கிரதை ஒருவேளை சொல்லும் தீர்ந்திடலாம்! 
நெஞ்சம் கனக்கிறதே நெருப்பாகக் கண்சுடுதே 
தஞ்சம் எனச்சேர்ந்து தருணம் பலவாச்சு 
இன்னும் இரங்காயோ? இந்தியமண் பெண்தானே 
கெஞ்சிப் பார்த்தாச்சு கொஞ்சிப் பார்த்தாச்சு 
அஞ்ச அதட்டி அரசிட்டும் தோற்றாச்சு! 
காலடியில் வீழ்ந்து கதறினாலும் பயன்வரலாம் 
ஓலமிடும் என்நெஞ்சு ஒருபோதும் தணியாதே!!

#மௌனமடி நீயெனக்கு 

-விவேக்பாரதி 
05.05.2019   

Comments

Popular Posts