நான் வேண்டும் குழந்தை


(தெருவில் விளையாடும் ஒரு குழந்தையைக் கண்டு எழுதியது. பொருத்தமான படத்தை செய்து வைத்திருந்த நண்பர் ரமேஷ் அவர்களுக்கு நன்றி.)

இதைப்போல் எனக்கொரு குழந்தை வேண்டும் 
    இறைவனிடம் நான் வேண்டுகிறேன்
புதுமைச் சிரிப்பும் புயல்போல் குறும்பும் 
    புரியும் மழலை வேண்டுகிறேன்! 

முத்து பற்களில் முகைபோல் அவிழும் 
    முல்லைச் சரத்தை வேண்டுகிறேன்! 
தத்தித் தத்தி விளையா டுகிற
    தங்கச் சிலையை வேண்டுகிறேன்! 

அம்மை சக்தி பதத்தை அவளுக் 
கருகில் இருக்கும் படைகளையும் 
பொம்மை போலக் கண்டு சிரிக்கும் 
பொக்கிஷத்தை வேண்டுகிறேன்

கொழுக்கு முளுக்கென கொஞ்சித் திரியும் 
    கோபுரச் சிலையை வேண்டுகிறேன் 
இழுத்தும் முத்தம் கொடுக்கும் உன்றன் 
    இம்சைத் தனத்தை வேண்டுகிறேன்! 

கூப்பிட் டாலுடன் குறும்புப் பார்வை 
    கொடுக்கும் உன்னை வேண்டுகிறேன்! 
காப்பிட் டதனைக் காப்பேன் அழகுக் 
    கவிதை சூட்டி நான்மகிழ்வேன்! 

சேட்டை செய்தால் ரசிப்பேன்! மழலைச் 
    செம்மை கண்டு கவியெடுப்பேன் 
பாட்டால் அவளை அர்ச்சனை செய்வேன் 
    பார்த்துப் பார்த்துக் கண்மலர்வேன்!

–விவேக்பாரதி 
22.06.2019 

Comments

Popular Posts