இலைதரும் சேதியாதென்று தெரியாத நடுவீதி தனிலென்னை
    யாரிங்கு விட்டதோ தெரியாதடி!
யாழ்கொண்டு நான்பாடும் சோகத்தின் கீதத்தை
    யார்காதில் கேட்பாரோ தெரியாதடி!
போருக்கு மத்தியிலும் புன்முறுவல் மறவாத
    போகத்தை மட்டும்நான் கேட்பேனடி
புல்லாங்கு ழல்போல புயல்காற்றை நான்வாங்கிப்
    புளகாங்கி தத்தோசை தருவேனடி!


விழிப்பாதை வழியோடித் துளியாகும் கண்ணீரின்
    விசையென்ன சூடென்ன அறியாயடி!
வீணான நெஞ்சத்தில் தேனாலே பாயாசம்
    விதிசெய்வ தாருக்கு? விளங்காதடி!
பழித்தாலும் புகழ்ந்தாலும் பலகாலம் இகழ்ந்தாலும்
    பழக்கங்கள் ஒருநாளும் மாறாதடி
பரசக்தி பக்தியினில் பற்றுள்ள ஆடவனைப்
    பதம்பார்க்க எவ்வாளும் முயலாதடி!

அதிகார உயிர்நாடி அடிவாழ்தல் எனும்கொள்கை
    ஆழமாய் நெஞ்சத்தில் பதித்தாலுமே
அடிவாங்கும் போதுள்ளில் அழலாக வரும்கோபம்
    அதுவாகத் தீய்ப்பதார் காண்பாரடி!?
புதிர்க்காட்டின் நடுவிலொரு பூக்கூடை விற்றாலும்
    புரிகின்ற தொழிலுக்குப் பயனேதடி?
புறப்பட்டு மிதிபட்டு வருகின்ற இலைத்துண்டு
    புறமேந்தித் தரும்சேதி எனக்காயடி!!

-விவேக்பாரதி
25.02.2019

Comments

Popular Posts