என் இசைக்கவிக்கு

இது உன் பிறந்தநாள் என்று சொல்வதா
இசையுங் கவிதையும் பிறந்த தென்பதா?
எதுவா கிலுமுன் எதிரே சமம்தான்
அதனால் சொல்வேன் இசைக்கவி வாழ்க!

பிடறி விரித்தொரு சிங்க மென்னவே
பீடுறு கவிதைகள் பாடல் பற்பல
கடலும் மணலும் வளியும் அதிர்ந்திடக்
கர்ஜனை செய்கிற சிங்கம் அல்லவா!

மறு கணத்திலோர் குழந்தை என்னவே
மனம் அழிந்ததோர் ஞானி ஆகவே
அற முணர்த்திடும் ஆசை சேர்த்திடும்
அம்பிகை மடிப் பிள்ளை அல்லவா

நகை தெறித்திடும் விகடப் பேச்சுகள்
நாசுக் காயதில் நுழைத்த தத்துவம்
பகை முறித்திடும் அன்பில் படைபலம்
பாட்டுப் பாடும் கவிஞன் அல்லவா

உனை எனக்கெனத் தந்த காளியை
உலகனைத்தையுந் தந்து வாழ்த்துவேன்
எனை உயர்த்திட எண்ணு வோர்களில்
எப்போதும் என் அப்பன் அல்லவா!

கலைமா மணியே கவிதைப் புயலே
ககனம் அதிர இசைக்குங் குயிலே
இலைநான் சருகென நினைக்கா தென்னை
இதயக் கூட்டில் வைத்த மரமே!

பரா சக்தியின் ஆனந்தக் காட்சி
பாரோர்க் கெல்லான் அன்பின் கூட்டு
தரா தலத்தையே அசைக்கும் பாட்டு
தண்மை மாறா உண்மை நெஞ்சம்

யாவும் இப்போ திருக்கிற தைப்போல்
யாண்டும் கொண்டு யவ்வணம் கண்டு
மேவும் வசந்தம் எய்தி வாழ்க!
மேலோர் விண்ணோர் மலர்தூ விடவே!!

-விவேக்பாரதி
30.03.2019

Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

மாதங்களில் அவள் மார்கழி

கவிதை ஆண்டாள் - 1