தென்றலே மெதுவாக வீசுதென்றலே மெதுவாக வீசு - எங்கள்
    தேய்பிறை முழுநிலா ஆனதைப் பேசு!
அன்பினை நெஞ்சோடு பூசு - நீ
    ஆடிவந் தேநிதம் மேனியைக் கூசு!


யாருக்கும் கிட்டாத வெண்ணிற அப்பளம்
    யாரோடும் சொல்லாமல் வான்சென்றது
தேருக்குள் சக்கரம் இருப்பதைப் பார்த்துளோம்
    தேரேயோர் சக்கர வடிவென்றது!

வானுக்கு விளக்கேந்தி வளமகள் வருகிறாள்
    வஞ்சியைக் காணவே நாடுகின்றோம்
ஏனிந்த நாணமோ விளக்கத்தை நீட்டியே
    எங்கே மறைகிறாள் தேடுகின்றோம்!

(தென்றலே மெதுவாக வீசு)

குளிரென்ற நிலைவந்து குவியலாய் உருமாறி
    குன்றாகி வானிலே நிலவானது
வெளிரென்ற கன்னமோ வென்பஞ்சுக் கிண்ணமோ
    விழியோரம் கருநீலம் உருவானது!

விண்ணுக்குள் வெண்ணிலா கண்ணுக்குள் அந்நிலா
    விடுகதை என்பதா விடையென்பதா?
எண்ணத்தில் பாடலாய் எழுத்துக்குள் ஜீவனாய்
    ஏறினாள் இந்நிலா கவியின்விழா!!

(தென்றலே மெதுவாக வீசு!!)

-விவேக்பாரதி
19.04.2019

Comments

Popular Posts