எம் வரதராசன் வாழ்கமரபுக்குப் புதுச்சோலை அமைந்து வைத்த
    மாண்புடைய ஓர்நெஞ்சம் கற்றோர் போற்றும்
வரதரெனும் வள்ளலவர் பிறந்த நாளில்
    வாக்கென்னும் பொன்கொண்டு வாழ்த்து கின்றேன்
தரமுடைய தமிழ்நூற்கள் நுணுகிக் கற்றுத்
    தாராள மாயறிவை வளர்த்த மேதை
சிரத்தையுடன் தமிழ்மகளைக் காதல் கொள்ளும்
    சிறப்பான எம்வரது வாழ்க வாழ்க


தந்தையென வழிகாட்டும் பாசம் ஓர்பால்
    தாயெனவே அமுதூட்டும் நேசம் ஓர்பால்
சொந்தமெனத் தோள்கொடுக்கும் நட்பும் ஓர்பால்
    சொல்லுவதில் புதிர்போடும் குறும்பும் ஓர்பால்
விந்தைமிகு வினைசெய்யும் வீச்சும் ஓர்பால்
    விளையாட உடன்சேரும் ஆசை ஓர்பால்
எந்தநிலை வந்தாலும் தலைதா ழாத
    ஏற்றத்தை ஏந்துகிற வீரம் ஓர்பால்

எல்லாமே பாவலர்கண் அமைந்த பண்பாம்
    எழுத்தென்னும் நாடாளும் மன்னன்! சொல்லும்
சொல்லாலே சவுக்கடிகள் வீசும் தீரர்!
    சொல்முடிவில் சுட்டிருந்தால் மருந்தும் செய்வார்!
கல்லாமல் பலபேர்கள் பட்டம் போட்டுக்
    காசுக்கு விலைபோகும் உலகம் தன்னில்
வல்லாண்மை பலவாய்த்த போதும் செல்வ
    வழக்கத்தில் வழுக்காத வரதர் வாழ்க!

தலைமைகள் என்பதெலாம் பொறுப்பே அன்றி
    தம்பட்டம் செய்கின்ற பகட்டே அல்ல
நிலையாக இஃதுணர்ந்த வேலைக் காரர்
    நிறைகனிகள் பலவார்க்கும் சோலைக் காரர்
வலைமீதில் பலர்வீழ்ந்து கிடக்கும் நேரம்
    வலையாலும் முகநூலில் சேவை யாலும்
உலகத்தில் பலவிடங்கள் கண்ட எங்கள்
    உத்தமனார் மாவரத ராசன் வாழ்க

எத்தனைதான் தடைவரினும் எதிர்க்கும் நெஞ்சம்
    எப்போதும் மாறாத புன்சி ரிப்பு
பொத்துவரும் தமிழமுதாய்க் கவிதை வெள்ளம்
    பொழுதுக்கும் இறைவன்தாள் நினைக்குஞ் சிந்தை
வித்தகமாய்ப் பலசெயல்கள் செய்யக் கீர்த்தி
    வெற்றியெனும் திருமகளின் நட்பும் சேர
இத்தரையில் மரபுதமிழ் உள்ள மட்டும்
    இனிதாய எம்வரத ராசன் வாழ்க!!

-விவேக்பாரதி
07.04.2019

Comments