படி! படி! படி!படி படி படி - அது
பக்குவமாக்கும் படி
படி படி படி - அந்தப்
பாதையில் நிற்கும் படி!

படி! படி! படி!

உள்ளே தைக்க ஊன்றிப் படி
    உணர்வை இழந்து மூழ்கிப் படி
பிள்ளை போல புதிதாய்ப் படி
    பிதற்றல் இன்றி தெளிவாய்ப் படி

மனதை வருடும் மெதுவாய்ப் படி
    மாற்றம் நிகழ்த்தும் வகையாய்ப் படி
உனக்கே உன்னைக் காட்டப் படி
    உண்மை எதுவோ அதனைப் படி

காலம் தாண்டும் கவிதை படி
    கணக்கா வழக்கா எதையும் படி
நாளும் படி!நீ நன்றைப் படி
    நடுவைப் படி!பின் முனைகள் படி!

யார்சொன் னாலும் நீயாய்ப் படி
    யானை போலே நிறுத்தப் படி
நேர்சிந் தனைகள் நிறைவாய்ப் படி
    நெற்றி வியர்க்கும் உழைப்பாய்ப் படி

வாசகன் போலே வளர்ந்து படி
    வார்த்தை சேரும் வலுவாய்ப் படி
யாசகன் போலே எல்லாம் படி
    எதற்கிப் பிறவி? அதற்காய்ப் படி!

படி! படி! படி!

-விவேக்பாரதி
15.04.2019

Comments

Popular Posts