சன்னிதியில் விழ வேண்டும்அறியாத சிறுவனின் புரியாத நெஞ்சினில்
    அம்மைநின் ஆர்பாட்டமா? உன்றன்
    அன்புக்கு நான் வாட்டமா?
மறவாமல் உன்பெயர் சரியாய் மொழிந்திட
    மாற்றிவிட்டாய் ஏற்றமா? மனதில்
    மல்லிகைத் தேரோட்டமா?
வறுமையின் நோயிலும் வாழ்க்கையின் பாயிலும்
    வாடிக் கிடக்கின்றவன் - வெறும்
    வார்த்தை சுமக்கின்றவன்!
பிறந்ததை அன்றியோர் செய்தவறு தெரியாத
    பித்தாய் அலைகின்றவன்! - உன்னைப்
    பின்னால் தொடர்கின்றவன்!


கடமைகள் யாதென்று கல்லாதவன் நெஞ்சைக்
    கல்லாக்கி வாழ்கின்றவன் - எண்ணம்
    கழுவாமல் வீழ்கின்றவன்
உடமைகள் என்றிந்த போகத்தை நம்பியே
    உடலோம்பி வாழ்கின்றவன் - அதற்
    குத்திகள் காண்கின்றவன்
மடநெஞ்சின் வார்த்தையை முழுதாக நம்பியே
    மரியாதை பேர்க்கின்றவன் - மௌன
    மதிவேலை அறியாதவன்!
திடமான உன்னையே பற்றத் தெரிந்தவன்
    தீபோல கவிசொல்பவன் - கண்ணில்
    தீபமிட்டே செல்பவன்!

இயல்கின்ற சக்தியாய் இருக்கின்ற தெய்வம்நீ
    இருப்பதே வீணென்று நான் - உன்றன்
    இசைபாட வாழ்கின்ற நான்
முயல்கின்ற வினையன்றி பிறிதொன்றை அறியாமல்
    மூச்சுப் பிடிக்கின்ற நான் - என்முன்
    முறுவல்கள் செய்கின்ற நீ!
தயவான கரம்கொண்டு தாள்சேர்ந்த பக்தர்க்குத்
    தண்ணருள் காட்டிடும் நீ - உன்றன்
    தாளிலோர் புல்லென்று நான்
வியப்பான நிலையம்ம! நானும்நீ என்கையில்
    வீழ்ந்தே கிடப்பதும் நீ - பார்த்து
    விளையாட் டிழைப்பதும் நீ!

எனக்கென்ன வேணுமோ எல்லாமும் உன்செயல்
    எதையிங்கு நான்வேண்டிட - உன்றன்
    எழிலன்றி எதைவேண்டிட
மனத்துன்னை வைத்தொரு மலராக வாழ்ந்திடும்
    மரியாதை நிலைவேண்டுவேன் - பின்னர்
    மனம்தீர வழிவேண்டுவேன்
தினமொற்றை வேடமாய்த் திறனற்ற நாடகம்
    தீர்கின்ற நிலைவேண்டுவேன் - சொல்லித்
    தேற்றிடக் கவிவேண்டுவேன்
உனையிந்தப் பாலகன் உரிமைகள் மிஞ்சியே
    உள்ளத்தின் துள்ளல்களால் - கொஞ்சம்
    உளறலாய் இவைவேண்டுவேன்!

புகழுக்குள் வீழாத நெஞ்சுவேண்டும் இதழில்
    புன்னகை நிற்க வேண்டும் - சூழும்
    புதிர் பார்த்து கற்க வேண்டும்
நிகழ்கின்ற மாற்றத்தை ஏற்கவேண்டும் என்றன்
    நினைவில் நீ பூக்க வேண்டும் - உன்றன்
    நிழலுயிர் ஆக்க வேண்டும்!
சுகமென்ற சோம்பலைத் தள்ளவேண்டும், நேரச்
    சுவைதனைக் கொள்ள வேண்டும்! - கொஞ்சம்
    சுறுசுறுப் போங்கவேண்டும்!
சகமென்றும் வாழ்த்திட வாழவேண்டும் அதிலும்.
    சரியாக வாழ வேண்டும் - உன்றன்
    சன்னிதியில் வீழ வேண்டும்!!

-விவேக்பாரதி
07.04.2019

Comments

Popular Posts