Posts

Showing posts from July, 2019

காதல் நிமிடம்...

Image
எந்த ஒரு கணத்தில் இந்த மழைத் துளிகள் இதயம் திறந்து விதையில் விழுந்து கதைகள் எழுகிறதோ! இந்தத் தருணமென மலர்கள் விரிகிறதை அளந்து சொல்லும் வழியும் உலகில் அடங்கிக் கிடக்கிறதோ? அதனைப் போலே உன்னுடன் நான் இணைந்த தருணமடி! நீயும் நானும் நாமாய் ஆகி கலந்த நிமிடமடி!! -விவேக்பாரதி  28.06.2019

மஹா சிவராத்திரி

Image
நீல நிறத்துடன் ஜால மளித்திட நீளர வத்தினை மேனி அணிந்தொரு கால மெனப்புவி சூடு மொளித்தலம் கால்ந டம்புரி காளனே! - உன்   கோல மனைத்திலும் கூட நிறுத்திடும் கோவில் உமைதரும் பாட லெடுத்துன தால நிறத்தினை அன்பு முகத்தினை அர்ச்சிப்பேன் திரி சூலனே! ஞான நதிக்கரை ஓரம் விடுத்தெனை ஞால மனைத்தையும் பாட விசைத்திடும் கானம் தொடுத்திடும் நாவலர் பாலொரு காதல் வளர்த்திடு மீசனே - அஞ்   ஞான மகற்றினை வாழ்வு கொடுத்தனை ஞாய முணர்த்தினை கூடு விலக்கிட நானு முனைத்தொழ வேணு மெனத்துதி நாட்டுகி றேனுமை நேசனே! காளை யசைந்திட வேத மொலித்திடக் காசினி மீதினில் பூதங்கள் ஆடிடத் தோளை நிமிர்த்தியொர் தோகை பலத்துடன் தோன்றி நடித்திடும் தேவனே! - இது   வேளை மனத்தினை வென்று முடித்திடு வேதனை யாவையும் கொன்று குவித்திடு நாளை எனக்குனை காட்டிடு மீட்டிடு நல்லம ரர்தொழும் கோவனே! நீயும் உனக்கென நானும் எனக்கதை நீளும் சவுக்கியம் நித்ய நிறைக்கதை! ஓயும் வனத்துடை நீழல் வளர்த்தொரு ஒண்டமிழ் பேசுக நாதனே! - உயிர்   காயும் உனக்கெனக் கவிதை சிரித்திடும் காலம் மறந்துளம் கான மிசைத்

வடபழனி அந்தாதி

Image
வடபழனி முருகன் சன்னிதியில் நின்றிருந்தோம். சட்டென்று அவர்முகம் என் பக்கம் திரும்பி, "பத்து வெண்பா எழுதுடா, அந்தாதியா! 'உலகம் முழுவதும்'ன்னு தொடங்கு." என்றார். அவ்வளவு பக்கத்தில் காட்சிகொடுத்த முருகனே சொன்னதுபோல் இருந்தது. சன்னிதியை விட்டு வெளிவரும்போது கையில் பூவைக் கொடுத்து "உலகம் முழுவதும்" என்று அழுத்திச் சொன்னார். பிரகாரம் சுற்றும்போது உடனே உதிர்ந்தன இவ்வெண்பாக்கள்... உலகம் முழுவதும் உள்ளத்தில் வைத்தே இலகுறக் காக்கும் இறைவன் - மலர்ப்பதம் தேடிவரு வார்க்கருள் தேனைக் குழை த்தளித் தாடிக் களிக்கும் அழல்! அழல்விழியன் தீயில் அவதரித்த வேலன்! பழத்தில் கதைசொன்ன பாலன் - எழிலே வடிவாய்ப் பெயராய் வரமாய் அமைந்த பிடிவேல் பிடித்த பரம்! பரசக்தி தந்த பலமான வேலைத் தரைசக்திக் கொள்ளவே தாங்கி - சுரன்மாயச் சேவல் கொடிபிடித்தான்! சேர்க்கைப் பலம்தந்து, தாவல் அடக்குந் தமிழ்! தமிழ்நாடு கண்ட தனிப்பெருந் தெய்வம்! அமிழ்தத் தடாகத் தரும்பு - கமழ்மாலை வள்ளிதெய் வானையுடன் வண்ணமயில் மேவிவந்து துள்ளுந்தெய் வீகத் துணை! துணையே வருக தொடர்பே வருக இணையே வருக இ

தமிழ் எனும் தாய்

Image
மொழியென்று சொல்வோரின் மொழியான வள்செம்மை     முழுமைக்கு வடிவானவள் - வாழ்வில் வழியென் றணைப்போர்க்கு வழியான வள்!தெய்வ     வல்லமைக் குயர்வானவள்! எழிலென்று நம்வாழ்வில் நிறைவாள வள்நமை     எழுதென்று முனைவாளவள் தழலுள்ள மாந்தர்க்குக் கவியான வள்!அம்மை     தமிழென்னும் முதலானவள்!  பழமைக்கும் பழையவள் புதுமைக்கும் புதியவள்    புதிரென்ற வயதனவள் - நாடும் பத்தர்க்கும் இறையவள் பகுத்தறி வென்கின்ற    பலருக்கும் வழியானவள்! முழுமைக்குச் சான்றென முளைத்தாளவள் நிலையில்     மூன்றுடன் திளைத்தாளவள் - நின்று முதுமைக்குள் ஆளாகி பழமொழிகள் வீழ்கையில்    முருகுடன் சிரிப்பாளவள்! தழலொற்றைக் கையனின் தடதட உடுக்கையின்    தாளத்தில் வந்தாளவள் - எந்தத் தடைவந்த போதிலும் செவிபாய்ந்து நெஞ்சினில்    தண்ணின்பம் பொழிவாளவள்! எழிலெங்கள் செம்மொழி என்றிந்த வையகம்    ஏத்தப் பிறந்தாளவள் - கையில் ஏந்தியே பிள்ளைபோல் மாந்திடத் தேன்தரும்    எம்மன்னை தமிழானவள்! துணைவேண்டி நிற்போரைத் தூக்கிவைப் பாள்மனந்     துள்ளிடச் சொல்கொடுப்பாள் - வந் தணையெனச் சொல்லுமுன் அணைத்திருப் பாள்சுவை     அமிழ்தைக் கொட

அன்பு விஜய் ப்ரகாஷுக்குப் பிறந்தநாள்

Image
அன்புள்ள விஜய் பிரகாஷ்க்கு...  கனவு காணத் தெரிந்தவன்! கண்ணீரையும் கவிதையாக்கத் தெரிந்தவன்! தன் நீள வாட்ட முடியின் அசைவுகளில் நம்மை நிறுத்திப்போடத் தெரிந்தவன்! எப்போதும் சிரிப்புக்கு உறவானவன்! உருண்டு புரண்டு இசைகேட்பவன்! ஓரமாக அமர்ந்து சிந்திக்கும் ஸீன் போடத் தெரியாத சமகால எழுத்தாளன்! தவறாமல் வானம் ரசிப்பவன்! தரைமீது தேவதைகளைப் பார்ப்பவன்! வாசித்தலில் மூச்சு விடுபவன்! சினிமா டேப்புகளில் இதயம் வைத்தவன்! "ஏமாற்றம் என்னைப் பாதிக்காது ஏனென்றால் என் பாதை எனக்கானது மட்டுமே" என்று எனக்குக் கற்றுக் கொடுத்தவன்! ஆள் பார்க்காமல் காதலிப்பவன்! அளவு பார்க்காமல் அன்பு செய்பவன்! நிறைய பேசுபவன்! நிறைவாய்! இன்று பிறந்தநாள் கொண்டாடும் எங்கள் விஜய்! பச்சைகளின் காதலன்! பிங்க் சுடிதார்களின் ரசிகன்! உலக சினிமா வெறியன்! உள்ளூர்ச் சினிமாக்காரன்! விஜய்! உனக்கான வாழ்த்தை கைப்பட எழுதவில்லை! பச்சை மை கிடைக்க நான் என்ன பள்ளி பிரின்ஸிபாலா? அல்ல மாவட்டக் கலெக்டரா? நீ நிறைய எழுத வேண்டும்! உனக்கான பேனாவில் இனி உணர்ச்சிகளோடு உலகம் பிறக்கட்டும்! கணப்பொ

நகைச்சுவை நானூறு - ஐம்பது பைசா

Image
அன்றொருநாள் பழம்வாங்க இனியன் சென்றான்     அங்கிருந்த கடைக்காரர் ஒருப ழத்தை இன்றுமுதல் இரண்டுருபாய் என்று சொன்னார்     இனியனதைக் கேட்டவுடன் பேரம் பேசி ஒன்றரைரூ பாய்க்கிதனைத் தாரும் என்றான்     ஒன்றரைரூ பாய்க்குத்தோல் மட்டும் என்றார் நன்றந்த ஐம்பதுபை சாப்ப ழத்தை     நமக்கிங்கு தந்திடுக எனக்கேட் டானே!! -விவேக்பாரதி 09.05.2019

நகைச்சுவை நானூறு - பாவங்கள்

Image
மருந்துக் கடைக்குத் தமிழா சிரியர் மருந்தைத் தமக்காய் வாங்கச் சென்றார்! "என்பா வங்கள் எறியும் மருந்தை உண்பேன் தந்தே உதவுக” என்றார்! மருந்துக் காரர் மதியால் குழம்பித் திருந்தச் சொல்க ஐயா என்றதும் ஆங்கில மெனக்கோ அறவே பிடிக்கா(து) ஈங்கென் செய்யச் சொல்லித் தொலைக்கிறேன் "எறித்ரோ மைசின்" என்றார் மருந்துக் காரர் மல்லாந் தாரே!! என் பாவங்கள் எறியும் மருந்து - எறி throw my sin. -விவேக்பாரதி 08.05.2019

நகைச்சுவை நானூறு - என்ன வெயில்...

Image
மதியம் சரியாய்ப் பன்னிரண்டு - வெயில்     மண்டை பிளக்கும் ஒருவேளை! கொதிக்கும் வெப்பம் நீங்கிடவே - நான்     குளிர்பா னக்கடை சென்றிருந்தேன்! அதற்குள் பார்த்தால் பெருங்கூட்டம் - உள்     அமரக் கூட இடமில்லை, விதியே என்று தனித்தவன்நான் - உள்     வீற்றிருந் தவர்கள் காதலர்கள்! உடனே என்றன் கைப்பேசி - தனில்     உரத்த குரலில் "டேய்!மச்சான் கடையில் உன்னாள் இன்னொருத்தன் - சேர்ந்த     காட்சி கண்டேன்" எனச்சொன்னேன் உடனே காலி ஐந்திருக்கை - இடம்     ஒதுங்கக் கண்டேன்! மனதுக்குள் அடடா என்ன வெயிலென்று - நான்     அமர்ந்தேன் ஜூஸும் குடித்தேனே!! -விவேக்பாரதி 07.05.2019

இரவில் ஒரு சலனம்

Image
 Starry night - Vincent Van gogh மனது கேளாமல் துடிக்கும் விழுப்புண்ணில்     மருந்தை யார்பெய்வது? - இதில் எனக்கு தான்துன்பம் எதற்குத் தீப்பந்தம்?     எவரிதைச் செய்வது? - ஒரு கணக்கு தெரியாமல் வழக்கு புரியாமல்     காயம் குதிபோடுது - அதை அணைக்க வழியில்லை அடக்கத் துணிவில்லை     அழுகை வழியானது! அடங்கி வாழாமல் அதிர்ந்து வீழ்கின்ற     அசட்டுத் துணிவுள்ளது - அது தொடங்கும் சிலவாட்டம் தொடரும் முன்னாலே     தோற்று பின்வாங்குது - மனம் மடங்கி வாழ்கின்ற வழியில் சிறுகாற்று     மனதை விடுவித்தது - அது தடங்கள் தெரியாமல் திசைகள் அறியாமல்     தரையில் விளையாடுது! அமர ஒருபுள்ளி நகர ஒருகோடு     அறிவில் நான்வைக்கிறேன் - விதி அமைத்த வழிதன்னை அழித்துத் தூளாக்கி     அதிர்ந்து சிரிக்கின்றது - இது சமயம் எனவுள்ளம் பழைய துணிபோர்த்தி     சலனம் செய்கின்றது - ஒரு குமுறல் அதனாலே பணிகள் முன்வந்து     குணிந்து விழவைக்குது! உளத்தில் தாளிட்ட உயர்ந்த பொழுதிங்கு     உலுக்க அழுகின்றது - வெளித் தளத்தில் மனம்சென்று மயக்கம் பலகண்டு     சரிந்து வலிகண்டது - அதன் விளக்க

வானப் பார்வை

Image
மேல்வந்து பாரடா!ஆ கழுகுப் பார்வை     மேதியில் எல்லாமே சின்னத் தூசு நூல்நோக்கம் மிகக்கொண்ட சான்றோர், ஞான     நுணுக்கங்கள் உய்த்துணர்ந்த ஞானி யர்கள் பால்நோக்கும் செம்பாகம் கழுகுப் பார்வை!     பாருக்குள் துன்பமிலா நிலைதான் வேண்டில் மேல்வந்து பார்க்கின்ற மனந்தான் வேண்டும்!     வெறும்பார்வை உலகத்தை ரசிப்ப தில்லை! காற்றைப்போல் நாம்வாழக் கற்றுக் கொண்டால்,     கவலைதரும் துன்புநமை நலித்தி டாது! வேற்றானா நம்மனத்தைக் காயம் செய்ய?     வெல்வதுநம் நம்பிக்கை என்றே தோன்றும்! ஏற்றாமல் பட்டங்கள் வானம் ஏறா!     எரியாத தீக்குச்சி இருட்டை நீக்கா! தோற்காமல் மனப்போக்கில் வீழ்ந்தி டாமல்     தொடர்ந்தியங்க நம்தேவை கழுகுப் பார்வை! ஈசர்க்கும் அரிதாகும் அல்லா யேசு     எவருக்கும் புதிதாகும் மானி டர்க்குத் தேசென்றே அமையுமிந்தக் கழுகுப் பார்வை     தேடும்கண் கள்போதும் திறக்கும் வானம்! பேசற்கு மிகவினிமை வானின் வண்ணம்     புல்லரிக்கும் விதமருமை வானம்! நந்தம் மாசற்ற எண்ணத்தால் மேலே பார்த்தால்     மாபெரிய வான்கோள்கள் நம்கைப் பந்தே! கடன்தொல்லை, உறவுக்குள் சண்டை, பூசல்

மார்வெல் பெண்ணுக்கு...

உனக்காக நான்கொண்ட காதலை - இந்த     உலகத்தில் எதைக்கொண்டு சொல்லலாம் - என்று மனத்துள்ளில் நினைக்கின்ற போதினில் - வந்து     மார்வெலே கண்முன்பு தோன்றிடும் - இந்த தினந்தன்னில் பிரபலமும் மார்வெலே - இளைய     தென்றலாய் நிறைவதும் மார்வெலே - அதில் கணக்காக என்காதல் சொல்கிறேன் - அந்தக்     கதையோடு கேளடி காதலி! தோரனின் புயலுடைப் பானென - உனக்குத்     தோணும்போ தேகரம் சேருவேன்! - வந்து ஆரெனைத் தாக்குவும் ஏலுமோ - இருப்     பரனுடை மனிதனாய் மாறுவேன் - எறும்பு வீரனாய் உள்க்கையில் தாங்குவேன் - என்     வித்தைக்கு உரியநீ ரோமனாஃப் - எந்த நேரமும் முன்சென்று பார்க்கிறேன் - அந்த     நேர்த்தியன் வித்யாசன் போலவே! தலைவனின் கைக்கொண்ட கேடயம் - உன்     தலைமுடி மணமுன்றன் ஆயுதம் - பச்சை நிலையுடை மூர்க்கனும் நானடி - எனை     நிலையாக்கும் காமாவும் நீயடி - சின்னச் சிலையுள்ள கிளிண்டென்று பார்வையால் - என்னைச்     சிதறவே வைக்கிறாய் கண்மணி - விரல் ஒலிகொள்ள நீயும் சொடுக்கடி - பாதி     உயிருனது ஆகுமே காதலி! லோக்கிபோல் குறும்புகள் செய்கிறேன் - எனை     லௌகீக சிறையொன்று வைக்கிறாய்! - உலகம் ஆக்கிய ஓதினன் காத

மார்வெல் பெண்ணுக்கு...

Image
உனக்காக நான்கொண்ட காதலை - இந்த     உலகத்தில் எதைக்கொண்டு சொல்லலாம் - என்று மனத்துள்ளில் நினைக்கின்ற போதினில் - வந்து     மார்வெலே கண்முன்பு தோன்றிடும் - இந்த தினந்தன்னில் பிரபலமும் மார்வெலே - இளைய     தென்றலாய் நிறைவதும் மார்வெலே - அதில் கணக்காக என்காதல் சொல்கிறேன் - அந்தக்     கதையோடு கேளடி காதலி! தோரனின் புயலுடைப் பானென - உனக்குத்     தோணும்போ தேகரம் சேருவேன்! - வந்து ஆரெனைத் தாக்குவும் ஏலுமோ - இருப்     பரனுடை மனிதனாய் மாறுவேன் - எறும்பு வீரனாய் உள்க்கையில் தாங்குவேன் - என்     வித்தைக்கு உரியநீ ரோமனாஃப் - எந்த நேரமும் முன்சென்று பார்க்கிறேன் - அந்த     நேர்த்தியன் வித்யாசன் போலவே! தலைவனின் கைக்கொண்ட கேடயம் - உன்     தலைமுடி மணமுன்றன் ஆயுதம் - பச்சை நிலையுடை மூர்க்கனும் நானடி - எனை     நிலையாக்கும் காமாவும் நீயடி - சின்னச் சிலையுள்ள கிளிண்டென்று பார்வையால் - என்னைச்     சிதறவே வைக்கிறாய் கண்மணி - விரல் ஒலிகொள்ள நீயும் சொடுக்கடி - பாதி     உயிருனது ஆகுமே காதலி! லோக்கிபோல் குறும்புகள் செய்கிறேன் - எனை     லௌகீக சிறையொன்று வைக்கிறாய்! - உலகம் ஆக்கிய ஓதின

வானுக்கு மேல்

Image
வானுக்கு மேல்வந்து பாருங்களேன்! இங்கு வண்ணங்கள் இல்லையோர் வேற்றுமை இல்லை நானென்றும் நீயென்றும் போட்டிகள் இல்லை நாடில்லை கோடில்லை நாடகம் இல்லை! காலுக்குக் கீழ்கோடி மேகம் மிதக்கும் காற்றுக்கு நாம்தோழன் லீலை இனிக்கும் மேலுக்கும் கீழுக்கும் சண்டை இல்லாமல் மென்மனம் குழந்தையாய்த் தாவிக் குதிக்கும்! அமைதியாம் வீட்டிற்கு வாசல் திறக்கும் ஆனந்தம் நெஞ்சத்தில் ஊஞ்சல் அமைக்கும் சுமைநீங்கப் பெறும்போது சொர்க்கம் திறக்கும் சுறுசுறுப் பாய்ரத்த நாளம் துடிக்கும்! யாருக்கும் கிட்டாத காட்சி கிடைக்கும் யவ்வணம் நம்மோடு சேர்ந்தே சிரிக்கும் பாருக்குள் ஒருவிந்தை வானம் திறக்கும் பார்பார்பார் வாவென்று மேகம் அழைக்கும் வானத்தை நமக்காக தேவன் படைத்தான் வானத்தின் அடிவாழ நம்மைப் படைத்தான் ஞானத்தில் உயர்ந்தோர்க்கு வானம் மனத்துள் நம்போன்ற ரசிகர்க்கு மனமே அதற்குள்! மேலேறு வதுபோல ஆட்டம் நடக்கும் மெச்சினால் சிலநொடியில் தரையும் நகைக்கும் காலுண்டு காலில்லை நாமே பறப்போம் ககனத்தின் நிலைகண்டு கவிதை படிப்போம்! இந்த வானுக்கு மேல்வந்து பாருங்களேன்!! -விவேக்பாரதி  11.04.2019

தமிழ்வளர்த்த சான்றோர் - 5

Image
இரண்டு மாதங்களுக்குப் பின் மீண்டும் விழாக்கோலம் பூண்டது தமிழ் வளர்த்த சான்றோர் என்ற தொடர் நிகழ்ச்சியின் மேடை. தமிழ்நாடு கண்ட தமிழ்ச் சான்றோர்களது வாழ்வையும் வாக்கையும் படம்பிடித்துக் காட்டும்வண்ணம் கடந்த ஐந்து வருடங்களாக மாதம்தோறும் நடந்துவருகின்ற நிகழ்ச்சி, தமிழ் வளர்த்த சான்றோர்.  விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் முதல்வரான முனைவர் வ.வே.சு வும், மூத்த பத்திரிகையாளர் சுப்புவும் கிருஷ்ணகான சபாவுடன் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியின் 59 ஆவது கூட்டம் இன்று நடைபெற்றது. இன்று முனைவர் வ.வே.சு பேசிய தலைப்பு, “பல்துறை வித்தகர், இதழியல் அறிஞர் தமிழ்வாணன்”. அவருடன் அருகிருந்து மேடையைப் பகிர்ந்து கொண்டது தமிழ்வாணனின் மகன் எழுத்தாளர் லேனா தமிழ்வாணன்.  நேரம் தவறாமல் சரியாக ஆறரை மணிக்குத் தொடங்கிய நிகழ்வில் குமுதம் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் எஸ்.ஏ.பி அண்ணாமலையின் மகன் டாக்டர் ஜவஹர் பழனியப்பன், இல.கணேசன், வி.எஸ்.வி ரமணன் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்வாணனின் குடும்பத்தினர், கல்கண்டு பத்திரிகையின் பழைய வாசகர்கள், இலக்கிய உலகத்து ஆளுமைகள் என்று அரங்கம் முழுக்கவும் நிறைந்திருந்தது.  தம்முடைய நல்ல

காதல் பைத்தியம்

Image
நீ போகும் சாலையில் நிலவை மெழுகிப் பாதை அமைக்கிறேன் ஒளிரும் ஒவ்வொரு தடமும் உன் பாதச் சுவடாக! நீ உணரும் தென்றலில் மலரைக் குழைத்து சாந்து சமைக்கிறேன்! உன் ஒவ்வொரு மணத்தையும் மலர்கள் வாங்கிக் கொள்வதாக! அப்படித் திரும்பிப் பார்க்காதே! உயிர் ஒருகணம் ஆண்டவனாகிறது! மனம் ஒருகணம் யாசகனாகிறது! உடல் ஒருகணம் மிருகமாகிறது! காதல் ஒருகணம் பைத்தியமாகிறது!! -விவேக்பாரதி 22.07.2019