தமிழ் எனும் தாய்
மொழியென்று சொல்வோரின் மொழியான வள்செம்மை
    முழுமைக்கு வடிவானவள் - வாழ்வில்
வழியென் றணைப்போர்க்கு வழியான வள்!தெய்வ
    வல்லமைக் குயர்வானவள்!
எழிலென்று நம்வாழ்வில் நிறைவாள வள்நமை
    எழுதென்று முனைவாளவள்
தழலுள்ள மாந்தர்க்குக் கவியான வள்!அம்மை
    தமிழென்னும் முதலானவள்! 


பழமைக்கும் பழையவள் புதுமைக்கும் புதியவள்
   புதிரென்ற வயதனவள் - நாடும்
பத்தர்க்கும் இறையவள் பகுத்தறி வென்கின்ற
   பலருக்கும் வழியானவள்!
முழுமைக்குச் சான்றென முளைத்தாளவள் நிலையில்
    மூன்றுடன் திளைத்தாளவள் - நின்று
முதுமைக்குள் ஆளாகி பழமொழிகள் வீழ்கையில்
   முருகுடன் சிரிப்பாளவள்!

தழலொற்றைக் கையனின் தடதட உடுக்கையின்
   தாளத்தில் வந்தாளவள் - எந்தத்
தடைவந்த போதிலும் செவிபாய்ந்து நெஞ்சினில்
   தண்ணின்பம் பொழிவாளவள்!
எழிலெங்கள் செம்மொழி என்றிந்த வையகம்
   ஏத்தப் பிறந்தாளவள் - கையில்
ஏந்தியே பிள்ளைபோல் மாந்திடத் தேன்தரும்
   எம்மன்னை தமிழானவள்!

துணைவேண்டி நிற்போரைத் தூக்கிவைப் பாள்மனந்
    துள்ளிடச் சொல்கொடுப்பாள் - வந்
தணையெனச் சொல்லுமுன் அணைத்திருப் பாள்சுவை
    அமிழ்தைக் கொடுத்திருப்பாள்!
அணங்கென்று வையத்து மாந்தர்கள் சொல்லுமோர்
    அன்பிற் சிலிர்த்திருப்பாள்! - அவளை
வணங்கித் தொடங்கிடும் காரியம் யாவிலும்
    வாழ்வாள் தமிழெனுந்தாய்!!

-விவேக்பாரதி
12.05.2019

Comments

  1. மிக்க நன்று. தமிழ்த் தாய் தங்களை ஆட்கொண்டுள்ளாள்.

    ReplyDelete

Post a Comment

Popular Posts