வானப் பார்வை


மேல்வந்து பாரடா!ஆ கழுகுப் பார்வை
    மேதியில் எல்லாமே சின்னத் தூசு
நூல்நோக்கம் மிகக்கொண்ட சான்றோர், ஞான
    நுணுக்கங்கள் உய்த்துணர்ந்த ஞானி யர்கள்
பால்நோக்கும் செம்பாகம் கழுகுப் பார்வை!
    பாருக்குள் துன்பமிலா நிலைதான் வேண்டில்
மேல்வந்து பார்க்கின்ற மனந்தான் வேண்டும்!
    வெறும்பார்வை உலகத்தை ரசிப்ப தில்லை!


காற்றைப்போல் நாம்வாழக் கற்றுக் கொண்டால்,
    கவலைதரும் துன்புநமை நலித்தி டாது!
வேற்றானா நம்மனத்தைக் காயம் செய்ய?
    வெல்வதுநம் நம்பிக்கை என்றே தோன்றும்!
ஏற்றாமல் பட்டங்கள் வானம் ஏறா!
    எரியாத தீக்குச்சி இருட்டை நீக்கா!
தோற்காமல் மனப்போக்கில் வீழ்ந்தி டாமல்
    தொடர்ந்தியங்க நம்தேவை கழுகுப் பார்வை!

ஈசர்க்கும் அரிதாகும் அல்லா யேசு
    எவருக்கும் புதிதாகும் மானி டர்க்குத்
தேசென்றே அமையுமிந்தக் கழுகுப் பார்வை
    தேடும்கண் கள்போதும் திறக்கும் வானம்!
பேசற்கு மிகவினிமை வானின் வண்ணம்
    புல்லரிக்கும் விதமருமை வானம்! நந்தம்
மாசற்ற எண்ணத்தால் மேலே பார்த்தால்
    மாபெரிய வான்கோள்கள் நம்கைப் பந்தே!

கடன்தொல்லை, உறவுக்குள் சண்டை, பூசல்,
    காசில்லை, காசுண்டு, திருட்டின் அச்சம்,
உடல்வருத்தம் ஊர்ப்பகைமை பலவாய்ச் சொல்லி
    உள்ளத்தில் குறும்பார்வை மட்டும் வைப்பார்!
உடலத்தைத் தூரத்தில் வைப்ப தற்கும்
    உளம்தாண்டி பேதமிலா திருப்ப தற்கும்
விடையாகும் பறவைகளின் வானப் பார்வை!
    வீதிக்கும் வானுக்கும் தூரம் இல்லை!!

-விவேக்பாரதி
21.04.2019

Comments

Popular Posts