மார்வெல் பெண்ணுக்கு...
உனக்காக நான்கொண்ட காதலை - இந்த
    உலகத்தில் எதைக்கொண்டு சொல்லலாம் - என்று
மனத்துள்ளில் நினைக்கின்ற போதினில் - வந்து
    மார்வெலே கண்முன்பு தோன்றிடும் - இந்த
தினந்தன்னில் பிரபலமும் மார்வெலே - இளைய
    தென்றலாய் நிறைவதும் மார்வெலே - அதில்
கணக்காக என்காதல் சொல்கிறேன் - அந்தக்
    கதையோடு கேளடி காதலி!

தோரனின் புயலுடைப் பானென - உனக்குத்
    தோணும்போ தேகரம் சேருவேன்! - வந்து
ஆரெனைத் தாக்குவும் ஏலுமோ - இருப்
    பரனுடை மனிதனாய் மாறுவேன் - எறும்பு
வீரனாய் உள்க்கையில் தாங்குவேன் - என்
    வித்தைக்கு உரியநீ ரோமனாஃப் - எந்த
நேரமும் முன்சென்று பார்க்கிறேன் - அந்த
    நேர்த்தியன் வித்யாசன் போலவே!

தலைவனின் கைக்கொண்ட கேடயம் - உன்
    தலைமுடி மணமுன்றன் ஆயுதம் - பச்சை
நிலையுடை மூர்க்கனும் நானடி - எனை
    நிலையாக்கும் காமாவும் நீயடி - சின்னச்
சிலையுள்ள கிளிண்டென்று பார்வையால் - என்னைச்
    சிதறவே வைக்கிறாய் கண்மணி - விரல்
ஒலிகொள்ள நீயும் சொடுக்கடி - பாதி
    உயிருனது ஆகுமே காதலி!

லோக்கிபோல் குறும்புகள் செய்கிறேன் - எனை
    லௌகீக சிறையொன்று வைக்கிறாய்! - உலகம்
ஆக்கிய ஓதினன் காதலை - நமக்
    காதாரம் ஆக்கினான் என்கிறாய்! - என்
சீக்கினைத் தீர்த்தநீ மந்திரம் - புதுச்
    சிசுவென்று வந்தவோர் விழியன்நான் - என்
பாக்கியம் நாமோடும் ஓட்டமாம் - அடி
    பார்காக்கத் தான்சேர்ந்த கூட்டமாம்!

நல்லதைச் செய்வதாய் எண்ணமாம் - வந்து
    நம்முலகம் அழியச் சொடுக்கினார் - ரத்னக்
கல்லுன்னைப் பெற்றவுன் தந்தையும் - என்
    கண்ணுக்கு அவரும் தானோஸடி - இங்கு
வெல்வதாய் அவருடன் வாழுவோம் - காற்றில்
   வெற்றிடம் காதலைத் தூவுவோம் - பக்கம்
மெல்லவா இன்னமும் சொல்கிறேன் - அடி
    மார்வெல்லின் பெண்ணுனை வெல்கிறேன்!! 


காணொலி இணைப்பு 
https://youtu.be/cE1yq1Ck6B4
-விவேக்பாரதி
28.04.2019

Comments

Popular Posts