மஹா சிவராத்திரி
நீல நிறத்துடன் ஜால மளித்திட
நீளர வத்தினை மேனி அணிந்தொரு
கால மெனப்புவி சூடு மொளித்தலம்
கால்ந டம்புரி காளனே! - உன்
 

கோல மனைத்திலும் கூட நிறுத்திடும்
கோவில் உமைதரும் பாட லெடுத்துன
தால நிறத்தினை அன்பு முகத்தினை
அர்ச்சிப்பேன் திரி சூலனே!

ஞான நதிக்கரை ஓரம் விடுத்தெனை
ஞால மனைத்தையும் பாட விசைத்திடும்
கானம் தொடுத்திடும் நாவலர் பாலொரு
காதல் வளர்த்திடு மீசனே - அஞ்
 

ஞான மகற்றினை வாழ்வு கொடுத்தனை
ஞாய முணர்த்தினை கூடு விலக்கிட
நானு முனைத்தொழ வேணு மெனத்துதி
நாட்டுகி றேனுமை நேசனே!

காளை யசைந்திட வேத மொலித்திடக்
காசினி மீதினில் பூதங்கள் ஆடிடத்
தோளை நிமிர்த்தியொர் தோகை பலத்துடன்
தோன்றி நடித்திடும் தேவனே! - இது
 

வேளை மனத்தினை வென்று முடித்திடு
வேதனை யாவையும் கொன்று குவித்திடு
நாளை எனக்குனை காட்டிடு மீட்டிடு
நல்லம ரர்தொழும் கோவனே!

நீயும் உனக்கென நானும் எனக்கதை
நீளும் சவுக்கியம் நித்ய நிறைக்கதை!
ஓயும் வனத்துடை நீழல் வளர்த்தொரு
ஒண்டமிழ் பேசுக நாதனே! - உயிர்
 

காயும் உனக்கெனக் கவிதை சிரித்திடும்
காலம் மறந்துளம் கான மிசைத்திடும்
தேயும் மனத்தினில் தெளிவு பதித்திடத்
தேவை யருட்பதம் வேதனே!


(வேறு)

வெண்ணற மேனி யானே
    விரிகுழல் தீநி கர்க்கப்
பெண்ணொடு நடனம் செய்யும்
    பிறைநில வேந்து வோனே
கண்ணிலா னெனவு ழன்று
    கருத்திலா நேரம் வந்து
எண்ணிலா உருவங் காட்டி
    எழுப்பினை வேந்தே வாழ்க!

கைகளிற் சூல மேந்தி
    கண்டமே கருக்க மாந்தி
நீகளைந் திருந்த நஞ்சு
    நீள்வதோ பொய்யா யுள்ளே
நாகமும் தோளில் ஆட
    நற்பொழு ததனைக் கண்டு
வேகமாய் நச்சைத் தீர்ப்பாய்
    வேதனே சிவனே வாழ்க!

உன்னருள் இல்லா மல்நான்
    உய்யுமா றறியேன்! எங்கும்
உன்னிருள் என்ற போதும்
    உண்மையில் அச்சங் கொள்ளேன்!
பன்மணித் திரள்ப டைத்துப்
    பாரினை ஆட்டும் தேவ!
உன்னுரு நானும் ஆனேன்
    உணர்த்தினை குருவே வாழ்க!!


-விவேக்பாரதி 
03.05.2019

Comments

Popular Posts