வடபழனி அந்தாதிவடபழனி முருகன் சன்னிதியில் நின்றிருந்தோம். சட்டென்று அவர்முகம் என் பக்கம் திரும்பி, "பத்து வெண்பா எழுதுடா, அந்தாதியா! 'உலகம் முழுவதும்'ன்னு தொடங்கு." என்றார். அவ்வளவு பக்கத்தில் காட்சிகொடுத்த முருகனே சொன்னதுபோல் இருந்தது. சன்னிதியை விட்டு வெளிவரும்போது கையில் பூவைக் கொடுத்து "உலகம் முழுவதும்" என்று அழுத்திச் சொன்னார். பிரகாரம் சுற்றும்போது உடனே உதிர்ந்தன இவ்வெண்பாக்கள்...

உலகம் முழுவதும் உள்ளத்தில் வைத்தே
இலகுறக் காக்கும் இறைவன் - மலர்ப்பதம்
தேடிவரு வார்க்கருள் தேனைக் குழைத்தளித்
தாடிக் களிக்கும் அழல்!


அழல்விழியன் தீயில் அவதரித்த வேலன்!
பழத்தில் கதைசொன்ன பாலன் - எழிலே
வடிவாய்ப் பெயராய் வரமாய் அமைந்த
பிடிவேல் பிடித்த பரம்!

பரசக்தி தந்த பலமான வேலைத்
தரைசக்திக் கொள்ளவே தாங்கி - சுரன்மாயச்
சேவல் கொடிபிடித்தான்! சேர்க்கைப் பலம்தந்து,
தாவல் அடக்குந் தமிழ்!

தமிழ்நாடு கண்ட தனிப்பெருந் தெய்வம்!
அமிழ்தத் தடாகத் தரும்பு - கமழ்மாலை
வள்ளிதெய் வானையுடன் வண்ணமயில் மேவிவந்து
துள்ளுந்தெய் வீகத் துணை!

துணையே வருக தொடர்பே வருக
இணையே வருக இறையே - துணிவே
தருகவென் பாரதத் தாய்வாழ வென்றால்
வருபவன் பேரே முருகு!

முருகே அழகு முறுவல் இளமை
பெருகும் மனத்தின் பெருமை - அருகே
மயிலும் கொடியும் மதத்தைக் குறைக்கும்
ஒயிலும் நமக்கே உயர்வு!

உயர்வீடு அறுபடை உள்ளதென் றாலும்
அயனைச் சிறைவைத்த ஆண்டி - நயமாய்
அமர்வதுநம் உள்ளம் அதுதெரியும் நேரம்
சுமைநீங்கிக் காண்போம் சுடர்!

சுடருமிளங் கண்கள் சுரனெதிர்த்த வீரம்
படருமீ றாறு புயங்கள் - வடிவேல்
விளங்கும் கரங்கள் விழிக்குத் துணையாம்!
உளத்துணை கந்தன் உணர்வு!

உணர்வு கலங்கி உளமுருகிப் பாட
அணங்கொடு நிற்பான் அயிலோன் - வணங்கும்
கரம்பற்றத் தாளும் கதிமாற்ற வேலும்
வரமென்று வாய்க்கும் வளம்!

வளமான செந்தில் வடிவேலன் தாளைத்
தளமாக்கிச் சொல்வோம் சரணம் - துளியாய்க்
கமலமோ ராறில் கனல்கொண்டு வந்தான்,
உமைசேர்க்கக் கண்டான் உலகு!!

-விவேக்பாரதி
23.05.2019

என்னை எழுதச் சொன்ன அந்த அவர் "இசைக்கவி ரமணன்" ஐயா. வெண்பா எழுதி முடித்தவுடன் சூடான சக்கரை பொங்கலைக் கொடுத்தவன் முருகன்.

Comments

Popular Posts