Posts

Showing posts from August, 2019

இயற்கை இனிது

Image
பொதிகைமலைத் தென்றல்வழி புறப்பட் டாயாம்    புலவர்திரு நாவினிலே வளர்ந்திட் டாயாம் பொதுவுடமை மக்களிடை செழித்திட் டாயாம்    பூரணமாய்ப் பக்தியிலே நிலைத்திட் டாயாம் புதுக்கவியில் தளையுடைத்து நடந்திட் டாயாம்    புன்னைமர நிழலெனவே திகழும் அம்மா எதுதந்துன் அன்பைநான் பெறுவேன்? சிந்தை    எங்குநிறை தமிழேநீ வாழ்க வாழ்க! எந்தப்பா என்றாலும் கொஞ்சும் வண்ணம்    எழுதும்பா வலரெங்கள் சியாம ளாம்மா! சந்தப்பா எனத்துள்ளும் சாத கப்பா    சந்தோஷப் பா!செம்பா! கட்ட ளைப்பா! முந்தப்பா எனவூக்கும் முனைப்பு டைப்பா!    முத்துப்பா! வித்துப்பா! முளைகனிப்பா! அந்தப்பா வலர்தலைமை ஏற்ற மன்றில்    அன்புப்பா லருந்தியவன் பாட வந்தேன்! இனிதினிது இனிது இனிதினிது இனிது    இனிதிந்த சொற்கள் இனிது இயல்பாகத் தன்னை இறைதந்த தோற்றம்    இயற்கையே என்றும் இனிது! இனிதிந்த மனிதம் இனிதிந்த சுற்றம்    இனிதிந்த இதயம் இனிது இதயத்துள் வாழும் நம்பிக்கை இனிது    இனிதிந்த ஞானம்  இனிது! மலர்ச்சத்தம் இனிது வண்டினொலி இனிது    மயக்கிடும் நீரும் இனிது மழைவானம் இனிது மணல்வாசம் இனிது    மழைக்காலத் தென்றல் இனிது உலைச்சூடும் இனி

வடபழனி பதிகம்

Image
காப்பு  தண்டாய்த பாணி தமிழ்கேட்டே விப்பதிகம் கொண்டா னவனே கொடுத்தவனும் - செண்டாய்க் கொடியாய்ச் சிறிய கொசுவாக வேனும்  வடபழனி வாழ்தல் வரம்! பதிகம் வடபழனி முருகென்னும் வடிவழகைக் கண்ணுற்ற    வாழ்த்துடைய திருநாளிலே - எனை வருடியது சிறுதென்றல் விலகியது பிடிமாயம்    வாழ்க்கையின் பொருள் நின்றது! கடகடென விழியருவி கன்னம் நனைத்தென்னைக்    கழுவியொரு நிலை தந்தது - எழில் கலாபத்தில் ஓரொளியென் நெஞ்சத்தில் ஊடுருவிக்    கருணைமுக மலர் தந்தது! திடமனது குழவிகரம் பட்டதொரு சிறுகூழாய்த்    திறனற்று சரண் என்றது - வந்தத் திவ்யக் கலாபத்தின் பொன்னிறச் செவ்வேலென்    திசைமறைய எனைத் தொட்டது! அட!யினிமை இது!புதுமை ஆண்டவா உன்மகிமை    ஆசைமொழி சொன்னதம்மா - என் அன்னை மீனாட்சியுமை பாலனின் காட்சியெனை    ஆட்கொண் டிருந்ததம்மா! கனவுவரும் நிமிடமெது நினைவுவரும் வழியுமெது    கருத்துக்குத் தெரியுமாமோ? - ஒரு கடவுளவன் குருவெனுமோர் வடிவாகி வரும்நேரம்    கழுதைக்குப் புரியுமாமோ? எனதெனது வழியெனது வாழ்வெனது எனும்சிந்தை    எத்தனை பிள்ளைத்தனம் - இதை என்நெஞ் சறிந்துவிடச் சின்னஞ் சிறுமயிலில்    என்முன்னம

தேவி கருமாரி பதிகம்

Image
கண்ணெங்கும் நிறைகின்ற கனிவான பாதங்கள் கவிதையில் பதியட்டுமே காலங்கள் தோறும்புது கோலம் தரிக்கின்ற காயங்கள் விலகட்டுமே விண்ணெங்கும் உன்னன்பு விளைகின்ற வேளையில் வீதிகள் நிறையட்டுமே விளையாடி முகில்கூடி மழைபாடி இலையாடி விந்தைகள் நிகழட்டுமே எண்ணங்கள் மனமாகி எழுத்தாகி சொல்லாகி எழுந்துன்னைப் பாடட்டுமே ஏழைநான் இடும்தாள பாவங்கள் யாவுமுன் எழில்காதில் சேரட்டுமே வண்ணங்கள் வாழ்க்கைகள் சேர்த்துக் குழைக்கின்ற வலுவான பொற்கைகளே வாணுவம் பேட்டையில் வளருமெம் தெய்வமே வாழ்க்கையே கருமாரியே! பொன்மேவி பூமேவி மணியோசைப் புகழ்மேவி பொலிவோடு நிற்குமுருவே பொல்லாத அசுரர்கள் இல்லாமல் செய்கின்ற பொற்சூலம் திகழுகரமே என்னாவில் எப்போதும் இசையாக வருகின்ற எழிலான தமிழின்வடிவே எட்டியெட் டிச்சென்று தொட்டுதொட் டேயெனை ஏளனம் செய்யும்நகையே முன்னாளில் ஒருபுலவன் முத்தமிழ்ப் பாசொல்ல முறுவல்கள் செய்தவிதழே முயல்கின்ற நெஞ்சுக்குள் காற்றாகி முனைப்போடு முந்திவிட வைக்கும்நினைவே வன்னெஞ்சில் உன்சிரிய புன்னகை புரிந்தென்றன் வழித்துணை யாகுமிறையே வாணுவம் பேட்டையில் வளருமெம் தெய்வமே வாழ்க்கையே கருமாரியே! நதிமீது விழுகின்ற இலையாகி காலத்தில் நான்

பாரதி ஆழ்வான்

Image
கணபதி ராயனைக் கருத்தினில் வைத்தருங்    கவிதைக ளோடிவன் வாழ்வான்! - நம் குணமுயர் வெய்திட விடுதலை கூடிடக்    குறியெனப் பாடலை ஆள்வான்! வணமிகு செந்தமிழ்க் கவிதையில் மாலைகள்    வனைந்தவன் கால்களைச் சூழ்வான்! - பெருந் திணவுடைத் தோளினன் திமிருடை நெஞ்சகத்    திறத்தினன் பாரதி ஆழ்வான்! விடுதலை யாகிநம் வியத்தகு பாரதம்    விசையுறப் பாடல்கள் பாடி - அவள் மிடுக்குகள் யாவையும் மிளிர்வது கண்டிட    மிகவும கிழ்ச்சிகொண் டாடி "உடலுயிர் ஆவியும் அவளருந் தாளினில்    உயர்வென வைத்திட வீழ்வான் - புவிக் கடலினை தேவரும் கடைந்திடத் தோன்றிய    கவிரசம் பாரதி ஆழ்வான்! வாணியின் தாளினை வணங்கிவ ழுத்திட    வலிமைகள் கொள்ளுவம் என்பான்! - உடல் நாணுதல் தீதென நலிவுகள் போமென    நலவுரை செய்தபின் உண்பான்! காணுநல் காளியைக் கவிதையில் வாழ்த்திடக்    கடவுளர் வாழிடம் மீள்வான்! - ஒளி பூணுமக் காளியின் புதல்வனும் தாசனும்    புதையலும் பாரதி ஆழ்வான்! செல்வமெ னத்திகழ் செழுந்தமிழ்த் தாய்மடிச்    செறிவைவி யந்திடும் பாடல் - பல சொல்லிய வள்பதம் புகழ்ந்துவ ணங்கியே    சொரிந்திடு வான்விளை யாடல்! வல்விரை வாய்க்

பேசட்டும் பேனா...

Image
பேசட்டும் இந்தப் பேனா!  பூவாய் அரும்பிப் புதுவடிவில்  புயலைப் போல மறுநொடியில்  காவாய் அடந்து காரிருளில்  கதிரைப் போன்ற புதுவொளியில்  தீவாய் நிறைந்து திரவத்தில்  தீயாய்க் கொழுந்து உதிரத்தில்  நாவாய் இருந்து பேசட்டும்  நம்மை நமக்காய்ப் பேசட்டும்!  பேசட்டும் இந்தப் பேனா!  கோலம் போடும் விரலுக்கும்  கொள்கை அரசின் இயலெல்லாம்  ஏலம் போடும் மனத்துக்கும்  ஏகாந் தத்தின் வழியெல்லாம்  தாளம் போடும் இளமைக்கும்  தர்க்கம் தருமச் சுவடெல்லாம்  காலம் தண்டி நிற்கின்ற  கவிகள் எல்லாம் பேசட்டும்!  பேசட்டும் இந்தப் பேனா!  யாருக் காகப் பேசுகிறோம்  எதனை வேண்டி என்றெண்ணா தூருக் காகப் பேசட்டும்  உண்மை உளத்தைப் பேசட்டும்  காரிருள் வானைச் சூழ்கையிலே  கத்தி போலக் கிழித்துவரும்  ஓரிழை மின்னல் இந்தமுனை  உரசிக் கனலப் பேசட்டும்!  பேசட்டும் இந்தப் பேனா  உள்ளே மையாய் நம்முடைய  உணர்வை ஊற்றி வைத்திருப்போம்  கள்ளே மயங்கும் கற்பனைகள்  கவிந்து வந்தால் நாம்ரசிப்போம்  பிள்ளை போல புதுவெளியில்  பிடிப்பில் லாமல் வாழ்ந்திருப்போம்  துள்ளும் இளமைப

பைந்தமிழ்ச் சோலை நான்காம் ஆண்டுவிழா

Image
   முகநூலில் ஏற்படும் நட்பும் உறவும் நெடுங்காலம் வளர வாய்ப்பிருக்குமா? அதுவும் இலக்கியப் பணி செய்ய உருவான குழுமம் தொடர்ந்து பல ஆண்டுகளாக கவிஞர்களைக் கூட்டி விழா நடத்திச் சிறப்பித்தல்/சிறப்பாதல் என்பது சாத்தியமா? ஆம்! சாத்தியமானது!    நேற்று  சென்னை ஆர்.கே கன்வென்ஷன்  சென்டரில்  பைந்தமிழ்ச் சோலை  முகநூல் குழுவின் நான்காம் ஆண்டுவிழா சிறப்பாக நடைபெற்றது. குறித்த நேரத்தில் தொடங்கி, புதுவைப் பாவலர் பொன்.பசுபதி அவர்களது உருவப்படம் திறக்கப்பட்டது. அரங்கமும் பசுபதி ஐயாவின் நினைவரங்கமாக நடந்தது.    சோலையைச் சேர்ந்த கவிஞர் தமிழகழ்வன் சுப்பிரமணி எழுதிய  "அகடகவிதமது"  என்னும் கவிதைத் தொகுப்பும், கவிஞர் மதுரா, ரத்னா வெங்கட் ஆகியோரின் குழு எழுதிய  "முல்லை முறுவல்"  என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது.  பாவலர் கருமலைத் தமிழாழன்  நூல்களை வெளியிட்டார். கவிஞர் தமிழகழ்வன் வெளியிட்ட நூலின் பெயரைப் புணர்ச்சி விதிகளைத் தளர்த்தி  பாவலர் மா. வரதராசன்  சொன்னவிதம் பிரம்மிக்க வைத்தது.    தொடர்ந்து  வானவில் க.ரவி  அவர்களுக்கும் கவிஞர்  தமிழகழ்வன் சுப்பிரமணி  அவர்களுக்கும் பைந்தமிழ்ச்

கண்ணன் வருகை

Image
புல்லாங் குழலிசை கேட்கும் - மனம்   புரியாமல் எங்கெங்கும் பார்க்கும்! - பின்பு எல்லாம் ஒருநொடியில் மறையும் - அங்கு  என்கண்ணன் முகம்மட்டும் தெரியும்!  இதில்  இல்லாத சுகமில்லை இனிவேறு சுகமில்லை  சொல்லாமல் வாய்மூட நெஞ்சுக்குத் துணிவில்லை!  சொல்லச்சொல்ல அடங்காத கண்ணன்! - அவன் சொல்லும்போதே மறையும் கள்வன்!  நீலப் பீலிமயில் பார்க்கும் - வந்து நித்தம் அதுபுரந்து காக்கும் - சின்னக் கோலம் இன்பங்களைச் சேர்க்கும் - மனம்  கோகுலத்தின் வழியாகிப் பூக்கும்  இந்தக்  காலத்தில் தனியின்பம் கவிதைக்குள் அவன்பிம்பம்  கணநேரம் யுகமாகிக் கலங்கிடும் வகைதங்கும்!  எண்ணம் எங்கும் நிழலாகக் கண்ணன் - அவன்  எவருக்கும் தெரியாத கள்வன்!  நெஞ்சம் பசுக்கூட்டம் ஆகும் - அது  நெக்குருக கானமுடன் சேரும் - அவன்  கொஞ்சம் சிரித்தாலே போதும் - இந்தக்  கொள்ளைவுயிர் மோட்சத்தினைச் சேரும்  வந்து  மஞ்சாக அவன்நின்று மழைமாலை தரும்போதும் மனம்கொஞ்சத் திருப்பாதம் மண்மீது வரும்போதும் வஞ்சகங்கள் இல்லாமல் தீரும் - எங்கும்  வெற்றியெனும் பொற்கிரணம் ஏறும்!! -விவேக்பாரதி 24.08.20

என் அம்பிகையை வாழ்த்தி...

Image
தினமென்னைப் பாராட்டும் அன்பும் - என்    திசைநோக்கி வழிகாட்டும் தெம்பும் மனமெங்கும் தாலாட்டும் பேச்சும் - சிறு    மலராக எனைத்தாங்கும் மூச்சும் தனமென்று தெய்வத்தின் பரிசும் - என்    தாய்க்குமொரு தாயாகும் மனசும் அனுவென்று வந்தநிலை கண்டேன் - என்    அம்பிகை வடிவென்று கொண்டேன்! எழுதடா என்றென்னைச் சொல்வாள் - உடன்    எப்போதும் கைகோத்துச் செல்வாள் முழுதுமாய் அன்புதர வந்தாள் - இனி    மூச்சுவிட் டாலும்பதில் கேட்பாள் அழகியாம் சொல்லழகி அம்மாள் - மன    ஆனந்தத்தில் அழகி சொல்வேன் பழகிட இனியதோர் தோழி - கேலி    பகடிகள் செய்வதில் ராணி! சமையலில் தேன்சிந்தும் குமரி - விழி    ஜாடைகள் ஆனந்த லஹரி சமயத்தில் அம்மையொரு காளி - என்றும்    தமிழ்கேட்டு விழிமூடும் தூளி ரமணனை இமைபோல காத்து - மேலும்    ரசிகையாய் கவிதைகள் கோத்து தமிழ்போல வாழ்கபல் ஆண்டு - அந்தத்    தாய்மடியில் நான்சின்ன வாண்டு!! அன்பன் விவேக்பாரதி 21.08.2019

அன்புத் தங்கையே

Image
  அன்புத் தங்கையே தங்கையே ஆசைத் தங்கையே! அடி! தங்கமே வெல்லமே பட்டுக் கன்னமே! உன்னைக் கொஞ்சவே கெஞ்சியே உள்ளம் துள்ளுதே உயிர் தஞ்சமே சொல்லுதே தங்கைச் செல்வமே! நீ வாழ நான் பாடும் பாட்டுக் கேட்டு உன் சின்ன தலையாட்டு! ஒரு செல்லப் புன்னகை கொல்லும் முறைப்பெல்லாம் உந்தன் விளையாட்டு!  (அன்புத் தங்கையே தங்கையே) பூ வண்ணப் பாவாடை போட்டு நடக்கின்ற பூங்கா நீ பொன்னூஞ்சல் சடை பின்னி பொழுதும் விளையாடும் நிலவும் நீ கதிர் மஞ்சள் முகத்தழகில் கன்னக் குழி சிரிப்பழகில் புதிரிடும் பொம்மை நீ புரியாத பெண்மை நீ!  ( அன்புத் தங்கையே தங்கையே) ஒரு தெய்வம் பெண்ணாகி உருவில் நீயாக வந்தவளோ ஒரு மின்னல் நகைசூடி ஒளிந்து விளையாட வந்தவளோ அன்னை ஒரு அன்னையென அப்பன் ஒரு அப்பனென பின்னுமொரு தோழியென பிறந்தவள் நீ வாழ்க!  (அன்புத் தங்கையே தங்கையே) -விவேக்பாரதி  15.08.2019

பாருக்கெல்லாம் குரு பாரதநாடு

Image
பாரத நாடு – இந்தப் பாரினுக்கே குருவாய் உயர் நாடு மந்திரம் போலே வந்தே மாதரம் வந்து நிறைந்த நாடு வானவர் ஞானியர் தெய்வங்கள் யாவும் வாழ்ந்து புகழ்ந்த நாடு சந்ததி கோடி சுகமாய் வாழ ! சுதந்திரம் வாங்கிய நாடு – எங்கள் தாய்த்திரு நாடு என்பதைப் பாடு தாராளமாகக் கொண்டாடு ! உலகம் வியக்கும் உன்னத ஞானம் ஓங்கி வளர்ந்த நாடு உண்மை வெல்லும் என்னும் தருமம் ஊற்றி வளர்த்த நன்னாடு கலை , பண்பாடு மொழிகள் நூறு காட்சி ஒன்றே நம் நாடு ! – இன்று காஷ்மீர் என்னும் திலகம் அணிந்ததைக் கம்பீரமாக நீ பாடு !! - விவேக்பாரதி 15.08.2019

இன்று பிரதோஷம்

Image
அன்பனாய்த் தோழனாய் ஆசான் இறைவனாய்  இன்பமாய் என்றும் இதயத் துறைபவனாய்க் கன்றின் குரலறிந்து கட்டவிழும் தாய்ப்பசுவாய்  ஒன்றும் அறியான்முன் ஓங்குபெரும் ஞானமதாய்  மன்னும் இருட்டிடையே மாப்பெரிய தீப்பிழம்பாய்  ஒன்றாய்ப் பலவாய் உயர்ந்ததாய் தாழ்ந்ததுமாய்  நின்றான் பரமசிவம் நெஞ்சக் குகையதனில்  மன்னன் விளக்கானான் மாமூடன் மீண்டேனே!  மீண்டேன் எனநினைத்தேன் மீண்டும் வினைக்கயிறு  தூண்டிலாய் என்னைத் தொடர்ந்து பிடித்திழுக்க  வேண்டா மனம்பதறி வேந்தன் பதம்நினைக்க  ஆண்டான் துணைவனாய் ஆனந்த ஜோதியாய்  காண்டிபத் தேயெழும் கங்குக் கணைகளுமாய்  தூண்டாத தீபமாய்த் தொடந்தழுத பிள்ளையின்  கூண்டுடைத்தான் நெஞ்சக் குறிப்பறுத்தான் என்னையே  தாண்டவைத்தான் அண்ணல் தழலைப்பெற் றுய்தேனே!  உய்யும் ஒருவழியும் உள்ளத்தைப் பக்தியில்  நெய்யாய் உருக்கிடும் நேர்வழியும் கண்டுகொண்டேன்  ஐயன் நினைப்பினிலே அன்றாடம் தொண்டுசெயல்  பொய்யே தவிர்த்தல் பொழுத்துக்கும் நன்மைசெயல்  வையத்தில் எங்கெங்கும் வாழுஞ் சிவபெருமான்  துய்யநிலை காணல் துயர்நீங்க முன்னுதவல்  செய்யும் கடமை செறிவுடன் செய்தலெனும் 

ஈஷா கவியரங்கம் - சத்குருவின் சங்கல்ப்பம்

Image
கணபதி துதி மூலாதி காரத்தில் உருவான கானம்     முச்சந்தி வழியெங்கும் மேவுகிற தெய்வம்  ஆலால முண்டவனின் அன்புப்பிர வாகம்     ஆதிவிதி யானகதி அன்புக்கண நாதம்! மூசிகத் தேறிவரும் முழுதான வேதம்     மும்மூர்த்தி கள்பணியும் முதலான பீடம்  ஆசிதந் தாளவே அலர்கின்ற பாதம்     ஆதிவிதி யானகதி அன்புக்கண நாதம்!  பழம்கொண்ட விளையாடல் பழையகதை ஆகும்     பலபதில்கள் உண்டந்தக் கதையில்பரி மாணம்  அழகான ரூபம்!நமை அகலாத தெய்வம்     ஆதிவிதி யானகதி அன்புக்கண நாதம்!  சேனைக்கதி பதியாக செல்வமருள் நிதியாகச்     செம்பொருளின் பதியாக சேர்கின்ற கதியாக  ஆனைமுகத் தழகாக அம்பிகை மகவாக     ஆருக்கும் எளிதாகக் காட்சிதரும் முகமாக  தேடுகிற பொருளாகத் தேடவரும் நிறைவாகத்     தெளிவற்ற நேரத்தில் தெம்புதரும் கரமாக  ஆடுகிற காலாக அதில்வாழும் உயிராக     ஆதிவிதி யானகதி அன்புக்கண நாதம்! குரு வணக்கம் ஏதுமறி யாதவொரு மூலைதனிலே - மனம்     ஏங்கியழும் நேரத்தில் நாதியெனவே  தீதுமற வேயென்றன் திசைதெரியவே - வந்து    தீண்டும்கர மேயெங்கள் ஆதிகுருவே! பாதங்கள் தாம்தே

வருக வருக வருக

Image
வருக வருக வருக - நீ வருக வருக வருக! மலரில் தவழும் தென்றல் போல வருக வருக வருக! மனதில் பாயும் மின்னல் போல வருக வருக வருக புலர்வில் தெரியும் வெண்ணிலவாய் நீ வருக வருக வருக புல்லாங்குழலின் மெல்லிசையாய் நீ வருக வருக வருக நீ வந்தாலே பொதும் நிழல் பாராட்டும் மேகம் தீ எனை விட்டுப் போகும் திசை தீபங்கள் ஆகும்! வாசலை என் வாசலை - உன்  வரவுக்காக திறக்கின்றேன்  நேசத்தில் புது நேசத்தில் - நிறம்  நெளியும் கோலம் இடுகின்றேன்  ஆசையே என் ஆசையே - உன்  அரும்புப் பாதம் உள் வருக!  தேசமே என் தெய்வமே - உன்  தேர்விட் டிறங்கி நீ வருக!  வருக வருக வருக!  காதலில் ஒரு காதலில் - என்  கவிதை யாவும் வைக்கின்றேன்  ஆதலால் அவை பார்த்திட - தனி  அன்பைக் கொண்டு நீ வருக!  போதுமே இது போதுமே - நான்  பொய்மை சூழக் கிடக்கின்றேன்!  பாதமே உன் பாதமே! - மனம்  பாரா திங்கு தவிக்கின்றேன்!  வருக வருக வருக!  பாடல்:   -விவேக்பாரதி  03.08.2019 படம்: Namaste art print by Ann Loyd