இன்று பிரதோஷம்
அன்பனாய்த் தோழனாய் ஆசான் இறைவனாய்
இன்பமாய் என்றும் இதயத் துறைபவனாய்க்
கன்றின் குரலறிந்து கட்டவிழும் தாய்ப்பசுவாய்
ஒன்றும் அறியான்முன் ஓங்குபெரும் ஞானமதாய்
மன்னும் இருட்டிடையே மாப்பெரிய தீப்பிழம்பாய்
ஒன்றாய்ப் பலவாய் உயர்ந்ததாய் தாழ்ந்ததுமாய்
நின்றான் பரமசிவம் நெஞ்சக் குகையதனில்
மன்னன் விளக்கானான் மாமூடன் மீண்டேனே!
மீண்டேன் எனநினைத்தேன் மீண்டும் வினைக்கயிறு
தூண்டிலாய் என்னைத் தொடர்ந்து பிடித்திழுக்க
வேண்டா மனம்பதறி வேந்தன் பதம்நினைக்க
ஆண்டான் துணைவனாய் ஆனந்த ஜோதியாய்
காண்டிபத் தேயெழும் கங்குக் கணைகளுமாய்
தூண்டாத தீபமாய்த் தொடந்தழுத பிள்ளையின்
கூண்டுடைத்தான் நெஞ்சக் குறிப்பறுத்தான் என்னையே
தாண்டவைத்தான் அண்ணல் தழலைப்பெற் றுய்தேனே!
உய்யும் ஒருவழியும் உள்ளத்தைப் பக்தியில்
நெய்யாய் உருக்கிடும் நேர்வழியும் கண்டுகொண்டேன்
ஐயன் நினைப்பினிலே அன்றாடம் தொண்டுசெயல்
பொய்யே தவிர்த்தல் பொழுத்துக்கும் நன்மைசெயல்
வையத்தில் எங்கெங்கும் வாழுஞ் சிவபெருமான்
துய்யநிலை காணல் துயர்நீங்க முன்னுதவல்
செய்யும் கடமை செறிவுடன் செய்தலெனும்
மெய்கள் அறிந்தேன் மிருகமனம் தீர்வேனே!!
-விவேக்பாரதி
12.08.2019
Comments
Post a Comment