வேற்று வண்ணப் பிறமொழி...


எதுவுமே திணிக்கப்படும் வன்முறையால் வெல்லாது. அதுவும் பகுத்தறிவுள்ள நம் நாட்டு வரலாற்றில், புரட்சிகளும் போராட்டங்களுமே நமக்கு வேண்டுவதை நாமே அடைய வழிகளாக இருந்திருக்கின்றன.
எனவே இதைத்தான் படிக்க வேண்டும் என்று திணித்தல் தகாது.
ஆனால்,
ஹிந்தியைப் படிக்க மாட்டேன் என்று குதிக்கும் நம்மில் எத்தனைபேர் தமிழில் ஒழுங்காய்ப் படிக்கிறோம்?.
இது "தமிழ்"நாடு! இங்கே வெளியாகும் செய்திகள், பத்திரிகைகள், திரைப்படங்கள், ஆவணங்கள் முறையான தமிழில் இருக்கின்றனவா?
நம் பிள்ளைகள் தமிழை விரும்பிப் படிக்கும் வழிவகை செய்திருக்கிறோமா?
தமிழ்க் கவிதைகளை அவர்களுக்குப் படிக்கக் கொடுத்திருக்கிறோமா? '
இலக்கியத்தைப் பற்றி அறிந்து, பிள்ளைகளிடம் பேசி சிலாகித்திருக்கிறோமா?
இதில் என்னை என் தாய்மொழியில் படிக்க விடுங்கள் என்ற கூப்பாடு வேறு. யாரும் நம்மை வற்புறுத்த முடியாது. முழுக்க முழுக்க ஆங்கில வழிக் கல்வி மட்டுமே படித்த மாணவன் நான். தமிழ் மீது எனக்கிருப்பது காதல் என்பதைத் தாண்டி நன்றிக் கடன்
"வேற்று வண்ணப் பிறமொழி கற்க உதவிய 
வன்மை பொருந்துமொழி"

என்பதை உள்ளார்ந்து சுவாசிப்பவன் நான்.
நம்மிடமே கேள்வி கேட்க இத்தனை ஓட்டைகள் இருந்தும், அதனை நாம் அறிந்தும் வெளியிருந்து வரும் கற்களை நிறுத்தச் சொல்லுதல் அபத்தமில்லையா?
நம் வீட்டு ஓட்டைகளை நாம் அடைப்போம்! வீசப்படும் கற்கள் நம்மை ஒன்றும் செய்யா!
"எங்கள்தமிழ் உயர்வென்று யாம்சொல்லிச் சொல்லித் 
தலைமுறைகள் பலகழித்தோம் குறைகளைந்தோம் இல்லை" 

என்பான் புரட்சிக் கவிஞன் பாரதிதாசன்.

அந்தக் காலத்தில் அவனுடைய கவலைக் கனல், இன்னும் தொடர்கிறது என்பது நமக்கெல்லாம் எத்தனை துன்பம்! அவப்பெயர்!
எல்லாவற்றிலும் அரசியல் பார்த்து மேலிருப்பவரைத் திட்டிப் பொழுதுபோக்கும் என் அன்பான சமுதாயமே, இது மொழி! உங்கள் அக்கறை விரல்களை அந்தப்பக்கம் வைத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் கிள்ளி எடுக்க இவை கொய்யா கனிகள் அல்ல! குழந்தைகளின் எதிர்காலம்!!
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! 
வாழிய பாரத மணித்திரு நாடு

-விவேக்பாரதி 
02.06.2019

Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

மாதங்களில் அவள் மார்கழி

கவிதை ஆண்டாள் - 1