சிவம் யோகம்

இன்று பிரதோஷம்! ஈஷா யோக மையத்தில் ஆதியோகி சிலைமுன் பிறந்த பாடல்...சிவம் யோகம் குருவும் யோகம்
சிவம் யோகம் குருவும் யோகம்

உன்
பாதி விழியவிழ்ந்த வேளை தனிலென்றன்
பாவம் தொலைந்ததையா! - சிவ
நாத மெனும்சுதியில் நானி ணைந்தநொடியில்
நானும் அழிந்ததையா!

என்
பாதை ஒளிர்ந்ததையா! - புதுப்
பாடல் பிறந்ததையா! - ஒரு
காத தூரத்தில் ககனம் உலுக்கிய
கால்கள் தெரிந்ததையா!

சிவம் யோகம் குருவும் யோகம்
சிவம் யோகம் குருவும் யோகம்

உன்
கருணை யெனும்கங்கை நெஞ்சில் நீபொழிய
கண்கள் எங்கும் கங்கை - நீ
அருணை தனில்நெருப்பு ஆனைக் காவில்நீர்
அடியன் நெஞ்சில் கவிதை!

பதம்
சரணம் சொன்ன நேரம் - பல
சங்கடங்கள் தீரும் - எம்
அரனின் நாதம் அது அமிர்த வேதமென
அன்பர் நெஞ்சம் பாடும்!

சிவம் யோகம் குருவும் யோகம்
சிவம் யோகம் குருவும் யோகம்

மனம்
அரவம் போல்நெளியும் போதில் நீயதனை
அடக்கிக் காக்க வேண்டும் - பேச்
சரவம் இல்லாத நிச்ச லனத்தினில்
அருளை வார்க்க வேண்டும்!

உயிர்
திரவமாக மாறும் - உன்
தீபம் அதனில் ஏறும் - உடல்
திரியும் ஆகும்நீ ஜோதி ஆக!அதில்
திசைகள் ஒளிர வேண்டும்!!

சிவம் யோகம் குருவும் யோகம்
சிவம் யோகம் குருவும் யோகம்!

பாடல்:

-விவேக்பாரதி
14.06.2019

Comments

Popular Posts