பாரதி ஆழ்வான்


கணபதி ராயனைக் கருத்தினில் வைத்தருங்
   கவிதைக ளோடிவன் வாழ்வான்! - நம்
குணமுயர் வெய்திட விடுதலை கூடிடக்
   குறியெனப் பாடலை ஆள்வான்!
வணமிகு செந்தமிழ்க் கவிதையில் மாலைகள்
   வனைந்தவன் கால்களைச் சூழ்வான்! - பெருந்
திணவுடைத் தோளினன் திமிருடை நெஞ்சகத்
   திறத்தினன் பாரதி ஆழ்வான்!

விடுதலை யாகிநம் வியத்தகு பாரதம்
   விசையுறப் பாடல்கள் பாடி - அவள்
மிடுக்குகள் யாவையும் மிளிர்வது கண்டிட
   மிகவும கிழ்ச்சிகொண் டாடி
"உடலுயிர் ஆவியும் அவளருந் தாளினில்
   உயர்வென வைத்திட வீழ்வான் - புவிக்
கடலினை தேவரும் கடைந்திடத் தோன்றிய
   கவிரசம் பாரதி ஆழ்வான்!

வாணியின் தாளினை வணங்கிவ ழுத்திட
   வலிமைகள் கொள்ளுவம் என்பான்! - உடல்
நாணுதல் தீதென நலிவுகள் போமென
   நலவுரை செய்தபின் உண்பான்!
காணுநல் காளியைக் கவிதையில் வாழ்த்திடக்
   கடவுளர் வாழிடம் மீள்வான்! - ஒளி
பூணுமக் காளியின் புதல்வனும் தாசனும்
   புதையலும் பாரதி ஆழ்வான்!

செல்வமெ னத்திகழ் செழுந்தமிழ்த் தாய்மடிச்
   செறிவைவி யந்திடும் பாடல் - பல
சொல்லிய வள்பதம் புகழ்ந்துவ ணங்கியே
   சொரிந்திடு வான்விளை யாடல்!
வல்விரை வாய்க்கவி வனைந்திடும் ஆற்றலில்
   வனப்புகள் காட்டிடும் மேல்வான்!
நல்லவ ழித்துணை நமதறி வின்துணை
   நடத்திடும் பாரதி ஆழ்வான்!

-விவேக்பாரதி


Comments

Popular Posts