பேசட்டும் பேனா...பேசட்டும் இந்தப் பேனா! 

பூவாய் அரும்பிப் புதுவடிவில் 
புயலைப் போல மறுநொடியில் 
காவாய் அடந்து காரிருளில் 
கதிரைப் போன்ற புதுவொளியில் 
தீவாய் நிறைந்து திரவத்தில் 
தீயாய்க் கொழுந்து உதிரத்தில் 
நாவாய் இருந்து பேசட்டும் 
நம்மை நமக்காய்ப் பேசட்டும்! 

பேசட்டும் இந்தப் பேனா! 

கோலம் போடும் விரலுக்கும் 
கொள்கை அரசின் இயலெல்லாம் 
ஏலம் போடும் மனத்துக்கும் 
ஏகாந் தத்தின் வழியெல்லாம் 
தாளம் போடும் இளமைக்கும் 
தர்க்கம் தருமச் சுவடெல்லாம் 
காலம் தண்டி நிற்கின்ற 
கவிகள் எல்லாம் பேசட்டும்! 

பேசட்டும் இந்தப் பேனா! 

யாருக் காகப் பேசுகிறோம் 
எதனை வேண்டி என்றெண்ணா
தூருக் காகப் பேசட்டும் 
உண்மை உளத்தைப் பேசட்டும் 
காரிருள் வானைச் சூழ்கையிலே 
கத்தி போலக் கிழித்துவரும் 
ஓரிழை மின்னல் இந்தமுனை 
உரசிக் கனலப் பேசட்டும்! 

பேசட்டும் இந்தப் பேனா 

உள்ளே மையாய் நம்முடைய 
உணர்வை ஊற்றி வைத்திருப்போம் 
கள்ளே மயங்கும் கற்பனைகள் 
கவிந்து வந்தால் நாம்ரசிப்போம் 
பிள்ளை போல புதுவெளியில் 
பிடிப்பில் லாமல் வாழ்ந்திருப்போம் 
துள்ளும் இளமைப் பேனாவால் 
தோன்றும் இந்த வானளப்போம் 

பேசட் டும்மிப் பேனாதான் 
பெருமை யாவும் பேசட்டும் 
வீசட் டும்செங் கதிரலைகள் 
விரியட் டும்பல் மலர்முகங்கள் 
பூசட் டும்சந் தனக்கலவை 
புரியட் டும்பல் பகற்கனவை 
நேசம் காமம் சமுதாயம் 
நேர்மை பக்தி என்றெல்லாம் 

பேசட்டும் இந்தப் பேனா!!

-விவேக்பாரதி 
01.06.2019

படம்: Shahzad Saifi 
x

Comments