வானொலிப் பெண்ணுக்கு

கவிஞர் நெல்லை ஜெயந்தாவின் அழைப்பில் நாங்கள் கலந்துகொண்ட வானொலிக் கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதை.வானொலிப் பெண்ணே வையகத்தின் வாய்மொழியே
வானொலியாய் ஊர்முழுதும் வார்த்தை சொலும்கிளியே!
அனைவர்க்கும் எளியவளாய் அமைகின்ற ஊடகம்நீ
உனையுனக்குக் காட்டி உயர்வேற்றப் பார்க்கின்றேன்!
பெருநோக்கு வானொலிகள் பெருமளவில்! நீயோ
ஒருநோக்கம் கொண்ட உருசிறியாய்! உன்னிடம்
எதைநோக்க? உன்வட்ட மக்கள் வீடுகளில்
பொதுநோக்கும் பண்பினையா? பொழுதுபோக்கும் செயல்களையா?
பேசத் தெரிந்து பேரார்வம் கொண்டவரை
நேசத்தோ டணைத்து நீவழங்கும் வாய்ப்பினையா?
என்சொல்லிப் பாராட்ட ஏதும் விளங்கவில்லை
மின்சொல்ல வந்தவுனை மெல்ல வணங்குகிறேன்!

ஊர்கூடி நீயுரைக்கும் உரைகேட்டுத், தம்முன்பு
பார்கூடி நிற்பதுபோல் பார்க்கின்றார்! ஈதெலாம்
அறிந்து செய்தாயோ அறியாமல் செய்வாயோ
சிறந்து செய்கின்றாய் செப்பிடுவேன் பாராட்டை!
விவசாய நிலம்காக்க விழைந்துவழி சொல்கின்றாய்,
அவசிய மான ஆரோக்யம் பகிர்கின்றாய்,
இக்கால இலக்கியமாம் சினிமாப் பாடல்கள்
முக்கால மும்நீ முன்னால் பாடுகிறாய்,
செய்திகளை வாசித்துச் சேரிடத்தில் சேர்க்கின்றாய்,
மெய்யான கதைசொல்லி மேன்மை படைக்கின்றாய்,
பெண்ணியத்தின் கண்ணியத்தைப் பெருமையொடு சொல்கின்றாய்,
புண்ணியப் பாடலொடு புதுநாளைத் துவக்குகிறாய்,
அரட்டை பேச்சுகள் ஆட்டம் என்றெல்லாம்
மிரட்டும் உனக்கென்ன மேன்மைநான் சொல்லுவது?
விளம்பரங்கள் பேசுகிறாய் விளையாட்டாய் நீவளர!
கலவரத்தின் உண்மைகள் கண்டறிந்து சொல்கின்றாய்!
இன்னும் சமுதாய இன்னல்கள் இருக்குதம்மா,
கன்னல் வாயெடுத்துக் கனலோடு நீபேசு!

தேசியம் எங்கே தெளிவாய்க் குரல்கொடு!
மாசிருக்கு, அதைமாற்றும் மாற்றெங்கே பதில்கொடு!
பெண்களைத் தீண்டுகிற பேட்டித் தனமொழியும்
திண்மை எவர்பக்கம் திக்கெட்டும் கேள்விகேள்!
தண்ணீர் இல்லாமல் தத்தளிக்கும் தமிழ்நாட்டில்
எண்ணம் எங்கே அலைபாயு தென்றுகேள்!
செல்வம் மிக்க செந்தமிழில் பாடல்கள்
இல்லை என்றான இழிநிலையேன் கேட்டுச்சொல்!
கால்களைப் பாம்புகள் கவ்வும் பொழுதில்
தோல்களின் அலங்காரம்! தூவென்று தூக்கியெறி!
உன்னையே கேட்டபடி உழைக்கும் வர்க்கம்
என்ன நினைத்தோடும் எதுவரைக்கும் என்றும்கேள்!
அறிவியலை மனிதர்கள் ஆளத் தெரியாமல்
மறதியினால் அடிமைகளாய் மாறிய நிலைசாடு!

காதல் பேசு! கவிதைகள் தாம்பேசு!
மோதல் தடுத்திருக்க முதியதிருக் குறள்பேசு!
பழைமை பேசு! படர்புதுமை தனைப்பேசு!
அழகியல் பேசு! ஆற்றலையும் நீபேசு!
மக்கள் மாக்களாகி மதிமயங்கும் நிலைமாற
தக்க தமிழ்ச்சான்றோர் தாம்சொன்ன வைபேசு!
சமத்துவம் பேசு! சரியான தமிழ்பேசு!
சுமக்கும் புவிகாக்கும் சூட்சுமங்கள் பேசு!
இயற்கை நலன்பேசு! இறைவன் பலம்பேசு!
முயற்சி நம்பிக்கை முன்னேற்றம் தமைப்பேசு!
வெற்றுப் பேச்சுகளில் வீணாகிப் போகாமல்
கற்க கற்பிக்க காரியங்கள் பேசு!
வெற்றியைப் பேசு! வெற்றிக்கு முன்னால்
பெற்ற சறுக்கல்களின் பெருமை களைப்பேசு!
அரசியல் பேசு! ஆக்கத்தோடு பேசு
அரட்டை தவிர்த்து அவசியமாய் மொழிபேசு!
பேசு பேசு பேசு பேசு
பேசத்தான் நீயுன்னைக் கேட்கத்தான் ஊரென்று
நினைந்து பேசு! நிஜங்களைப் பேசு!
அனைத்தும் பேசிவிட்டால் ஆன்மீகம் பேசு!

பேச்சன்றி மாநிலத்தில் பிழைக்க வழியில்லை
பேசாமல் நீயிருந்தால் பெருமை உனக்கில்லை!
நீபேசக் கேட்டிருக்கும் நீள்புவியும் மாற்றமுறும்
தீபேசு! உன்னைத் திரும்பிப்பார் ஏற்றம்வரும்!!

-விவேக்பாரதி
18.06.2019

Comments

Popular Posts