உய்தல் பதிகம்அறியாச் சிறுவன் அகத்துள்ளில் அன்பாய் வளர்ந்தாய் பெருமானே
    அறிந்தேன் அதனால் உய்தேனே!
பொறியாட் சியிலாப் புலையேனைப் பொறையோ டெடுத்தாய் அருளாளா
    புனைந்தேன் அதனால் உய்தேனே!
வறியேன் வாழ்வில் வளமாக வந்தாய் சிவனே அழகோனே
    வளர்ந்தேன் அதனால் உய்தேனே!
மறவா முதலே உமையம்மை மகிழும் தலைவா நடராசா
    மறவேன் அதனால் உய்வேனே!(1)


தலைமேல் வெண்மை நிலவாடத் தரைமேல் உன்னால் உயிராடத்
    தரித்தேன் அதனால் உய்வேனே
நிலையாய் நெஞ்சுள் பெயராட நிமலா உன்றன் நினைவாட
    நினைந்தேன் அதனால் உய்தேனே
கலையே! விடத்தாற் கறுமிடறே! காலே! நடனம் செயுமொளியே!
    கண்டேன் அதனால் உய்தேனே!
பலவாய்ப் புலவர் பாடலிலே பரவும் பரனே நடராசா
    படித்தேன் அதனால் உய்வேனே!(2)

அடியும் முடியும் அறியவொணா தயனும் மாலும் தொழுமழலே
    அணிந்தேன் அதனால் உய்தேனே!
முடியா மறையின் முகவரியே மூச்சுள் ஆடும் இருபதமே
    முனைந்தேன் அதனால் உய்தேனே!
விடியா இருளில் வீதியிலே வீழக் குருவாய்த் தொடுகரமே
    விழைந்தேன் அதனால் உய்தேனே!
தடியால் அடியும் அம்படியும் தாங்கி யவனே நடராசா
    தமிழ்நீ அதனால் உய்வேனே!(3)

நஞ்சம் எழுந்த கடல்மீதில் நலமே நிலவ நஞ்சுண்டோய்
    நனைந்தேன் அதனால் உய்தேனே!
பஞ்சம் இருந்த நிலைமாற பனிகங் கையைக் கொடுத்தோனே
    பணிந்தேன் அதனால் உய்தேனே!
விஞ்சும் ஆசை அம்புவிட, வில்லை எரித்தாய் விழியோனே
    விதந்தேன் அதனால் உய்தேனே!
நெஞ்சத் தேநின் ஆலயம்கொள் நேசர்க் கிரங்கும் நடராசா
    நெகிழ்ந்தேன் அதனால் உய்வேனே!(4)

யாகத் தெழுமோர் அக்கினியை, ஆங்கோர் விழியில் வைத்தவனே
    அழுதேன் அதனால் உய்தேனே!
நாகத் தினையோர் ஆரமென நன்றே தெரிந்த உருகாண
    நடந்தேன் அதனால் உய்தேனே!
பாகத் தேநின் தேவிதமைப் பதித்த தேவர் முதல்வோனே
    பார்த்தேன் அதனால் உய்தேனே!
பாகின் இனிய மந்திரமே பனிமா மலையின் நடராசா
    பஞ்சாட் சரத்தால் உய்வோமே!!(5)

-விவேக்பாரதி
18.07.2019

Comments

Popular Posts