என் அம்பிகையை வாழ்த்தி...


தினமென்னைப் பாராட்டும் அன்பும் - என்
   திசைநோக்கி வழிகாட்டும் தெம்பும்
மனமெங்கும் தாலாட்டும் பேச்சும் - சிறு
   மலராக எனைத்தாங்கும் மூச்சும்
தனமென்று தெய்வத்தின் பரிசும் - என்
   தாய்க்குமொரு தாயாகும் மனசும்
அனுவென்று வந்தநிலை கண்டேன் - என்
   அம்பிகை வடிவென்று கொண்டேன்!

எழுதடா என்றென்னைச் சொல்வாள் - உடன்
   எப்போதும் கைகோத்துச் செல்வாள்
முழுதுமாய் அன்புதர வந்தாள் - இனி
   மூச்சுவிட் டாலும்பதில் கேட்பாள்
அழகியாம் சொல்லழகி அம்மாள் - மன
   ஆனந்தத்தில் அழகி சொல்வேன்
பழகிட இனியதோர் தோழி - கேலி
   பகடிகள் செய்வதில் ராணி!

சமையலில் தேன்சிந்தும் குமரி - விழி
   ஜாடைகள் ஆனந்த லஹரி
சமயத்தில் அம்மையொரு காளி - என்றும்
   தமிழ்கேட்டு விழிமூடும் தூளி
ரமணனை இமைபோல காத்து - மேலும்
   ரசிகையாய் கவிதைகள் கோத்து
தமிழ்போல வாழ்கபல் ஆண்டு - அந்தத்
   தாய்மடியில் நான்சின்ன வாண்டு!!

அன்பன்
விவேக்பாரதி
21.08.2019

Comments

பிரபலமான பதிவுகள்