விடியலெனும் பெண் கோலம்

மெல்ல மெல்ல விடிவதைக் காண மீண்டுமொரு பாக்கியம்... ஒரு பெண் விடியலைச் சமைத்தால் எப்படி இருக்குமெனத் தோன்றியது... உடனே எழுந்தன வெண்பாக்கள், என்னவோ இந்த வெண்பாக்கள் மரபின் மைந்தன் முத்தையா ஐயாவின் தாக்கத்தால் விளைந்தன என்று தோன்றுகிறது... 

  
ஏதோ ஒருமுனையில் எல்லாம் அறிந்தவெழில்
மாதே கரத்தில் மலர்களெடுத் - தூதி
மலர்த்துகிறாள், காலை மகிழ்கிறது! தூக்கம்
உலர்த்துகிறாள் காணும் உலகு!


சலனம் துளியுமற்ற தண்ணீரில் கைகள்
அலசக் கிளம்பும் அலைபோல் - நிலைத்த
இருட்காட்டில் செங்காந்தாள் இட்ட இடத்தே
பொருட்காட்சி போல்விடியும் போது!

எங்கிருந்தோ மையெடுத்து எங்கள் எழில்வானில்
மங்கலமாய்ப் பூசுகிறாள் மஞ்சநிறம் - கொஞ்சிச்
சிவக்கின்ற நாணத்தின் சின்னம் அதிலே
தவிக்கின்ற வெள்ளி தழல்!

நடந்தாள் அவள்பஞ்சு நாட்டியக் கால்பட்
டடடா விடிந்த தகிலம் - மடவாளி
நீர்தெளித்தாள் புற்கள்மேல் நீண்ட பனியாச்சே
கார்பிழிந்து போச்சே கரை!

இவளால் விடிகிறதென் றூரறியும் முன்னால்
இவளே எழுந்தால் இழைத்தாள் - இவளே
விடியலெனும் கோலம் விரைந்து வரைந்து
அடியெடுத்துக் கண்டாள் அகம்!!

-விவேக்பாரதி
15.07.2019

Comments