கனவு சொட்டும் நேரம்



ஒரு
கோடி யுகமாகப் போகிறது
உன் குரல் கேட்டு!
நேற்று
'அன்பே' என்றதெல்லாம்
ஏழு ஜென்மத்துக்கு
முந்தைய கதைபோல்
ஞாபக விளிம்பில்
நசுங்கிக் கிடக்கிறது!

நீ பேசப்போகும்
நாளைய காலையை
ஒவ்வொரு இருட்டுத் துகளோடும்
ஏக்கக் கவிதைகளாய்
எழுதிக் கழிக்கிறேன்!
சொட்டுச் சொட்டாய் நகரும்
கடிகார முள்ளுக்கும்
என் தனிநிலை கண்டு
வியர்க்கிறது!
அறை முழுக்கவும்
ஈரம் நிரம்பி
வெப்பக் காற்றைக் குளிர்படுத்துகிறது!

ஒர் இரவை
ஏக்கத்துடன் கழிப்பதில்
எத்தனை தியானம் தேவையெனின்
வெளிச்சத்தும் புகையினும்
அழுத்ததும் மென்மையினும்
நிலை பிறழாப் புல்போல்
ஓரத்தில் நானும்
உன்னைக் காணப்போகும் நாளும்
ஒருசேர மலரக் காத்திருக்கிறோம்!

நான் சாப்பிட்டேனா
என்று கவலைப்படாதே...
இந்த இரவைத்தான்
என் எழுதுகோலுக்குத் தீனியாக்க
வெட்டிக் கொண்டிருக்கிறேன்!
கனவு சொட்டச் சொட்ட....

-விவேக்பாரதி
08.07.2019

Comments

Popular Posts