இன்று கவிதை உறங்குகிறது


இன்று
கவிதை எதுவும் புறப்பட வில்லை
இதயம் கொஞ்சம் உறங்குகிறது... 


ராத்திரி பிடித்த கனவின் வாசம்
ரகசியம் கலையா மௌன சுவாசம்
பூத்தது காலை என்றறி யாமல்
பூலோகத்தில் உறங்குகிறது!

ஆமாம்! இதயம் உறங்குகிறது!

யாரோ எழுப்பி விடுபவர் யாரோ?
யாருக் காயது உழைப்பதும் வேறோ?
போரோ அமைதிப் பொறுமை தானோ
புல்லாங் குழலின் மெல்லிசை வருமோ?

ஏதும் அறியா நிச்சலனத்தில்
எனக்குத் தெரிந்த அமைதித் தொனியில்
தூது வருவதை எதிர்பார்க் காமல்
தூக்கத்தோடு உறங்குகிறது!

பாவம் அதனை எழுப்பாதீர்கள்
பாடல் பாடி கலைக்காதீர்கள்
தாவல் தொடர்ந்தால் பின் அடங்காது
தடுத்து நிறுத்த வழி கிடையாது!!

ஆமாம் இதயம் உறங்குகிறது!
அமைதியாக உறங்குகிறது!!

-விவேக்பாரதி
19.07.2019

Comments

  1. நல்ல கவிதை! இப்போது விழித்துக் கொண்டு விட்டது போலும்!

    ReplyDelete

Post a Comment

Popular Posts