காத்திருப்பதில்...

சும்மா கொஞ்ச நேரம் மௌனமாகக் காத்திருக்க முடிவதில்லை... கதவு தட்டி வந்துவிடுகிறது காற்றான கவிதை.... காத்தி ருப்பதன் தத்து வத்தினில்
   காலம் புரிகிறது!
காற்று தீண்டிடும் போது தான்வெயில்
   காட்டம் தெரிகிறது!
பார்த்தி ருக்குமிக் காலம் எப்படி
   படரும் தெரியவில்லை!
பாத்தி செய்துநீர் பாய்ச்சு கின்றவன்
   பாடம் புரிவதில்லை!

கண்ணை மூடினால் கனவு வருவது
   கண்ணின் செயலல்ல
காலை நீட்டினால் மண்ணில் தோய்வது
   காலின் தாழ்வல்ல
எண்ணம் எப்படி எங்கு செல்லுமோ
   எல்லாம் மனத்திடமே,
எழுது கின்றதை விடவும் பூமியில்
   இல்லை வழித்தடமே!

வானம் என்பது வாழ்க்கை போன்றது
   வாழ்ந்தால் தான்தெரியும்!
வாடைக் காற்றினில் பூவின் வாசனை
   மணந்தால் தான்புரியும்!
நானும் வாழ்கிறேன் என்று வாழுதல்
   நாளைத் தான்போக்கும்
நல்ல வாழ்க்கையோ நமைர சித்திடும்
   நலத்தில் தினம்பூக்கும்!

புசித்தல் துஞ்சுதல் உழைத்தல் ஓடுதல்
   புரிந்தால் அதுவாழ்வா?
புல்லும் பச்சைதான் நெல்லும் பச்சைதான்
   புனிதம் நிறத்தாலா?
ரசித்தல் வேண்டுதும் சிலிர்த்தல் வேண்டுதும்
   எழடா என்தோழா!
இரவு தீர்கையில் விடியல் நேர்வதே
   இயல்பு! நீவாடா!!

-விவேக்பாரதி
29.04.2019

Comments

Popular Posts