தகப்பன் சாமிஓவியர்மணி சுதனின் மூலம் தேவிசுதன் சில பாமலர்களைச் சூடிக்கொண்டான். எழுதியது என்னவோ நானும் கவிஞர் சுந்தராவும் என்றாலும் எழுத்து அந்தத் தகப்பன் சுவாமியுடையதே! 

வளைந்து சிரம்தாழ்த்தி வாய்பொத்தி ஈசன்
விளைவித்த வித்ததன்முன் நின்றான்! - நிலைத்திருக்கும்
ஞானத்தை வேண்டிநிற்க நற்பணிவே ஆதாரம்!
ஈனத் திமிர்பயனென் எண்ணு! - சுந்தரா

எண்ணிடும் முன்னே எழுகோடி அண்டமும்
பண்ணிடத் தாளம் பரவிட - நண்ணிய
வேதப் பொருளெடுத்து வேந்தனுக்குச் சொன்னபெரும்
சீதத் திருமுருகன் சீர்! - விவேக்

(இனி முறையே சுந்தரா விவேக் என மாறி மாறி அந்தாதி தொடர்கிறது)

சீரலைவாய் வென்றெடுத்த செந்தூரன் ஞானமிகு
பேரலையாய்ப் பொங்கும் பெருங்கனலாய் - வேரகத்தில்
அப்பனுக்கே சொன்னான் அருமறையை! எங்களுக்கும்
தப்பின்றித் தந்தான் தமிழ்!

தமிழ்ச்சங்கங் காத்த தலைவன்! கவிதை
அமிழ்தம் விரும்பிடும் ஆதி! - கமழுமெழில்
வள்ளிதெய் வானையுடன் வந்திருக்கும் கோலத்திற்
துள்ளுமொரு சோலை துணை!

துணையாக வேலும் துயர்களைய வென்றே
கணைநேர்த்த கண்கள் கருணை- அணைநீத்த
வெள்ளமெனப் பாய்ச்சும் வேளும் மனத்திருக்க
உள்ளுபவை எல்லாம் உயர்வு!

உயரீ ரறுதோள் உறுதுணை ஆக
முயற்சிகள் யாவும் முடியும் - மயிலே
அயிலே கொடியே அடியே எனவே
ஒயிலாய் உரைவார்க் கொளி!

ஒளிநின்றே தோன்றி ஒளியாகத் தோன்றி
ஒளிகாட்டும் வேலாம் ஒயிலான் - ஒலியாதி
ஓமின் பொருளுரைத்த ஓமின் பொருளானை
ஓமென் றழைத்துநிதம் ஓது!

ஓதுவார்க் கென்றும் ஒசியும் இடையுடையான்
மோதுவார்க் கந்தம் முருகவேள் - கீதமாய்ச்
சந்தத் திருப்புகழ் சாற்றும் தவமிருக்க
எந்த தவமிங் கெமக்கு?

எமக்குத் தொழில்வேள் இசைபாடல்! அவ்வை
தமக்குப் பிரியபிரான் தாளை - நமக்கான
செல்வமெனக் கொள்வாயென் சீர்நெஞ்சே! மேலே
வில்வமுளான் பிள்ளைநம் வேந்து!

வேந்தன் மலையிருக்கும் வேதன் உளமகிழும்
சாந்தன் சிரிக்கும் சரவணன் - காந்தள்
விரலோடு வேல்பிடித்த வித்தைக் குரியன்
சிரம்படியும் பாதம் சிவப்பு!

சிவமைந்தன் பாதத்தைச் சேர்ந்த நொடியில்
அவமழியும் உள்ளே அமுதம் - நவநவமாய்ப்
பொங்கும்! கவிதையெனப் போற்றும் உலகுமதை!
எங்கும் முருகன் எழில்!

எழிலான செவ்வேள் இசைபாடும் நெஞ்சில்
பொழிலாக வந்து புகுவான் - கழலை
மறவாது பற்றும் மனமுடையார்க் கந்த
மறவனருள் கைம்மேல் மலர்!

மலரோன் சிறைசெய்த மாயோன் மருகன்
நலமாய்ச் சிறைமீட்பான் நம்மை! - உலகாம்
சிறைமீள வேண்டின் சிறுமனமே! என்றும்
பிறைசூடி பிள்ளைபுகழ் பேசு!

பேசு திருப்புகழ் பெற்றியைப் பாடவே
தேசுமிகத் தோன்றிடுவான் தெய்வானை - ஆசையுடன்
கொஞ்சும் மணவாளன் கோலத் தமிழ்காத்த
மஞ்ஞை அமரும் மதன்!

மதன்பேரும் ஆறு முகன்பேரும் வேளே!
மதன்கணையை வெல்லும்நல் மார்க்கம் - நிதம்ஞானக்
கந்தவேள் பேரையுனில் கல்வெட்டாய்ச் செய்நெஞ்சே!
அந்தவேள் வாரான் அருகு!

(அப்படியே கட்டளைக் கலித்துறைக்குத் தாவினோம்)

அருகினில் வாரா யறுமுக வென்றே அழைத்தவுடன்
பொருளென வென்னைப் பொறையுடன் காணப் பொலிமயிலில்
திருமுக ஜோதி திரள்பெரு தோளும் திணவுகளும்
உருவுடன் ஓங்க உயிரினில் தோன்றும் ஒளிமுதலே! (விவேக்)

முதலென வந்தே முருகனை வென்றே முதல்வனுமே
பதமுடன் வேலன் பழனியில் நம்போன்ற பத்தருக்காய்
விதவிதக் கோலம் விளங்கிடத் தோன்றிட வித்தெனவே
கதையது செய்தான் கணபதித் தேவன் கருணையிதே! (சுந்தரா)

கருணை பெருகும் கயல்விழி கொவ்வை கனிமுகமும்
அருணையில் முன்னோன் அருள்தர நின்ற அருஞ்செயலும்
சரவண என்னச் சடுதியில் காக்கும் சகநினைவும்
தருவன கோடி தழல்வன பக்தர் தனியுயிரே!

உயிரே உயிரில் உறையும் உணர்வே உணர்வடையும்
துயரே களையும் துணையே! தமிழின் தொழில்புனையும்
பயிரே! பயிரின் பயனே! பயனைப் பணிப்பவனே!
கயிலை பதியவன் கண்வழி தோன்றிய கற்பகமே!

கற்பக வல்லி கருணையில் ஒன்றாய்க் கனன்றவனே
விற்பன மான வியன்றமிழ் மன்றம் விதைத்தவனே
அற்புத வேழ மணைத்திட வாழும் அருட்கழலே
பொற்பதம் கண்டு புகழ்ந்தனம் எம்மைப் புரந்தருளே!

புரப்பவன் இந்தப் புவியெல்லாம் நித்தம் புரப்பதற்காய்
சுரப்பவன் அன்பைச் சுரபியாய்! நாம்சொலும் சொற்பொருளாய்
இருப்பவன்! வந்தே இழைபவன்! என்றும் இருதமிழின்
விருப்பவன்! வேதம் விரிப்பவன்! நம்மின் விழியவனே!

விழிபன்னி ரண்டும் விதியெனும் மாய விசையறுக்கும்
வழிபண்ணி எம்மை வளத்துடன் காக்க! வனமிருந்து
எழில்பண் ணிருக்கும் இடையினள் வள்ளி இதயத்தினில்
தழல்பண்ணிக் காதல் தலைமை நிறுவிய தைரியனே!

Comments

Popular Posts