கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையாவுக்குப் பிறந்தநாள்...மரபுத் தமிழ்பேசும் மாசக்தி மைந்தன்
குருவின் துணைகொள் குணத்தன் - முருகுசொல்
கந்தரந் தாதியைக் காலையில் ஓதுகின்ற
சுந்தரன் வாழி சுகித்து! 


சுகமும் துயரும் தொடரா நிலையில்
இகமும் பரமும் இறையே - அகத்தில்
ஒளிரவெம் முத்தையா ஓங்கு புகழால்
மிளிர்க உலகில் மிடுக்கு!

மிடுக்குடைய பேச்சாய், வியப்புதரும் பேச்சாய்
அடுக்குடைய பேச்சாய் அவிழ்ப்பார் - எடுக்கும்சொல்
வானத் திருந்துவரும் வன்மை அபிராமி
ஞானத்தால் தந்த நலம்!

நலம்தர நாளும் நயம்பல சொல்லிப்
பலம்தரு கின்றார்முன் பாடல் - பலன்தரும்
முத்தையா தொண்டு முழுமைக்கும் பாராட்டு,
கத்தையாய் வீழும் கவி!

கவிஞர் எழுத்தாளர் காக்கும் மரபின்
சுவைஞர் கலைமா மணியார் - தவவாழ்க்கை
வாழ வளர்தமிழும் வள்ளல் குருவருளும்
சூழ ஒளிர்க தொடர்ந்து!!

அன்பன்
விவேக்பாரதி
01.08.2019

Comments

பிரபலமான பதிவுகள்