ஈஷா கவியரங்கம் - சத்குருவின் சங்கல்ப்பம்
கணபதி துதி
மூலாதி காரத்தில் உருவான கானம் 
   முச்சந்தி வழியெங்கும் மேவுகிற தெய்வம் 
ஆலால முண்டவனின் அன்புப்பிர வாகம் 
   ஆதிவிதி யானகதி அன்புக்கண நாதம்!

மூசிகத் தேறிவரும் முழுதான வேதம் 
   மும்மூர்த்தி கள்பணியும் முதலான பீடம் 
ஆசிதந் தாளவே அலர்கின்ற பாதம் 
   ஆதிவிதி யானகதி அன்புக்கண நாதம்! 

பழம்கொண்ட விளையாடல் பழையகதை ஆகும் 
   பலபதில்கள் உண்டந்தக் கதையில்பரி மாணம் 
அழகான ரூபம்!நமை அகலாத தெய்வம் 
   ஆதிவிதி யானகதி அன்புக்கண நாதம்! 

சேனைக்கதி பதியாக செல்வமருள் நிதியாகச் 
   செம்பொருளின் பதியாக சேர்கின்ற கதியாக 
ஆனைமுகத் தழகாக அம்பிகை மகவாக 
   ஆருக்கும் எளிதாகக் காட்சிதரும் முகமாக 

தேடுகிற பொருளாகத் தேடவரும் நிறைவாகத் 
   தெளிவற்ற நேரத்தில் தெம்புதரும் கரமாக 
ஆடுகிற காலாக அதில்வாழும் உயிராக 
   ஆதிவிதி யானகதி அன்புக்கண நாதம்!

குரு வணக்கம்

ஏதுமறி யாதவொரு மூலைதனிலே - மனம் 
   ஏங்கியழும் நேரத்தில் நாதியெனவே 
தீதுமற வேயென்றன் திசைதெரியவே - வந்து
   தீண்டும்கர மேயெங்கள் ஆதிகுருவே!
பாதங்கள் தாம்தேய்ந்து பாரில்விழவே - எம்மைப் 
   பல்லக்கில் சொல்லாக்க வைத்தமணியே 
வேதங்கள் பாடுகிற தேவவடிவே - எங்கள் 
   வேதனைகள் தூளாக்கும் ஜோதிகுருவே! 

பூப்போன்ற மென்கரத் தீண்டலதிலே - அந்தப்  
   புவனங்கள் பலகோடி காட்டுமுயர்வே! 
காப்பென்று பூட்டுகிற உடலைவிடவே - எங்கள் 
   கருத்துக்குள் காப்பாகும் ஆதிகுருவே!
மூப்பென்ப தில்லாத முதியவறிவே - செய்யும் 
   முயற்சிக்கு வழியாகும் ஒளியின்விழியே 
நேர்ப்பாவை யில்நெஞ்சில் நின்றதிருவே - இறையின் 
   நேர்வடிவ மேயெங்கள் ஜோதிகுருவே! 

ஈஷா 

கொஞ்சுதமிழ் பேசிடும் கொங்குதமிழ் நாட்டினில் 
   கொண்டல்சூழ் வெள்ளையங் கிரியின் அருகில் 
கொன்றைமல ரான்!அமர் கின்றவிட மாயொரு 
   கொண்டாட்ட வடிவமாய் நிற்கும் ஈஷா! 
நெஞ்சுநிறை தென்றலும் கண்மலரும் பசுமையும் 
   நிறைவாய் மலர்கின்ற கோவை நகரில் 
நெற்றிவிழி நாயகன் தம்நினைவில் வாழ்ந்திட 
   நேரே அமைந்தகயி லாயம் ஈஷா! 
பிஞ்சுமுதல் பெரியவர் ஞானியர்கள் ஸ்வாமிகள் 
   பிரியத்து டன்சேர்ந்து வாழும் உறவில் 
பீடுறும் தியானத்தின் ஜோதியில் மாந்தர்கள் 
   பிழைகள் மறைந்துவிட வந்த ஈஷா! 
செஞ்சடையன் ஆதியன் தோடுடைய சோதியன் 
   செம்மைப் பெயர்தாங்கி வாழும் ஈஷா! 
செந்தமிழில் சத்குரு சங்கல்ப்பம் என்னெனச் 
   செப்பவே கேட்டிருக் கின்ற ஈஷா! 

சுற்றிலும் இயற்கையின் சுகநினை வத்துடன் 
   சூழ்ந்திடும் மந்திரம் கொண்ட ஈஷா! 
சூரியக் குண்டமும் சந்திரக் குண்டமும் 
   தூய்மையை உடலுக்கு நல்கும் ஈஷா! 
கொற்றவை எம்லிங்க பைரவி திவ்யமாய்க் 
   கொலுவிருக் கின்றவோர் பீடம் ஈஷா! 
கோலாக லத்துடன் ஆதியோ கிச்சிலை 
   கோவிலின் வாயிலில் நிற்கும் ஈஷா!
ஒற்றைக் கரந்தலைக் கடியிலும் நேரிலும் 
   ஒருகால் மடக்கியும் நமஸ்க ரிக்கும் 
ஒழுக்கம் பயின்றதில் யோகம் வளர்த்திடும் 
   யோகத்தின் ஆலயம் எங்கள் ஈஷா 
பற்றற் றிறைத்தொண்டில் பலநாட்டு மக்களும் 
   பரிவோ டிணைந்தவிடம் கோவை ஈஷா! 
பகவானே குருவென்று வந்தவெம் சத்குரு 
   பலம்செய்த பலனெங்கள் பக்தி ஈஷா! 

சத்குருவின் சங்கல்ப்பம் - தியானலிங்கம்

உடலுக்குள் சமமான ஏழு சக்கரம் 
   உயர்ந்தோங்கி நிற்கின்ற பூர ணத்துவம்  
திடமாக நின்றிடவே தியான மார்க்கமாம் 
   திரளாக அதைநிறுவத் தியான லிங்கமாம்! 

எம்மதமும் அறிவியலைக் கொண்ட தத்துவம் 
   எவருக்கும் தியானமெனும் ஞானம் சத்தியம்
நிம்மதியே தியானத்தில் விதையு மாகுமாம் 
   நிறைவாயி தைச்சொல்லத் தியான லிங்கமாம்! 

யோகத்தில் சக்திநிலை பெற்ற மந்திரம் 
   உயர்வேத முழக்கத்தில் பெற்ற மந்திரம் 
ராகத்தில் நாதத்தில் பெற்ற மந்திரம் 
   இயல்பாய் வழங்கிடவே தியான லிங்கமாம்! 

பூதத்தால் சுத்திநிலை கொள்ள வேண்டியே 
   புண்யத்த லங்கள்பல உள்ள வேளையில் 
ஆதியுடன் தியானத்தில் ஒன்று தல்தனை 
   அனைவர்க்கும் சேர்த்திடவித் தியான லிங்கமாம்! 

சித்தநிலை உயர்விந்தத் தியான லிங்கமே 
   நிச்சலன நிலையிந்தத் தியான லிங்கமே 
சத்குருவின் சங்கல்ப்பம் தியான லிங்கமே 
   சாமான்யர் பெறும்தியானம் தியான லிங்கமே! 
செவ்வியதாய் முக்திநிலை நல்கும் லிங்கம் 
   சேர்த்துபல லௌகீக வேண்டு தல்கள் 
ஒவ்வொருநாள் ஒவ்வொன்று சேர்க்கும் லிங்கம் 
   உயர்திங்கட் கிழமையிலே ஆன்மீ கத்தில் 
அவ்விதமே முயலுபவர் ஐயம் தம்மை 
   அகற்றிவிடும் மனவலிமை பெருக்கும்! மற்றும் 
செவ்வாயில் படைப்பாற்றல் உறவில் மேன்மை 
   சேர்ந்திடவே வளர்ச்சிதரும் தியான லிங்கம்! 

புதன்கிழமை உடல்நலத்தை வளர்க்கும் சக்தி 
   புதுக்குகிற அதிர்வலைகள் வழங்கும் லிங்கம் 
நிதந்தொடரும் கருமவினை அகற்றித் தேடல் 
   நிறுவிவிடும் வியாழனலித் தியான லிங்கம் 
புதுத்தெம்பு நம்பிக்கை தீமை விட்டுப் 
   புரக்கின்ற சக்திகளை வெள்ளி சேர்க்கும்! 
கதவான ஐம்புலன்கள் கடக்க வேண்டும் 
   காரியர்க்குச் சனிக்கிழமை அருளும் லிங்கம்! 

தானென்னும் அகந்தையினை மாய்க்கும் லிங்கம் 
   தாயாகி அமைதிநிலை சேர்க்கும் லிங்கம் 
வானென்று வாழ்க்கையிலே நிறையும் லிங்கம் 
   வழியினிலே மாறுதலை வழங்கும் லிங்கம் 
மானென்று மருள்கின்ற மனத்துக் குள்ளே 
   மாபெரிய அமைதியினை நிறுவும் லிங்கம் 
கானத்தின் அதிர்வலையில் ஒளிரும் லிங்கம் 
   கண்மூடும் பொழுதினிலும் தெரியும் லிங்கம்! 

*
வெள்ளை யங்கிரி மாம லைக்குக்கீழ்  
வென்ற பண்டைய யோகி யர்க்குழாம் 
வைக்க முயன்ற தியான மூர்த்தத்தை  
மேல்நி றுத்திய சங்கல்ப்பம்!

நைந்த உடலொடு நாளும் பூசையில் 
நமது சத்குரு இன்னும் பற்பலர் 
தந்த முயற்சியில் தியானப் பயிற்சியில் 
தரையில் வந்ததோர் சங்கல்ப்பம்! 

தியான மென்பதோர் மார்க்கம் அதனுடன் 
தியாக மென்பதே வாழ்க்கை என்றுதான் 
வியாபித் திடவும் வாழ்க்கை செயவும் 
வனத்தில் தோன்றிய சங்கல்ப்பம்! 

ஒன்று பரம்பொருள் நன்று பெறும்நெறி 
ஓங்கிடு மந்திரம் யாவும் மனத்தினில் 
என்று விளங்கிட ஏற்றம் அமைந்திட 
எழுந்து வளர்ந்த சங்கல்ப்பம்! 

தர்மம் உலகினில் வெல்லும் படிவர 
தர்க்கம் மனதினை விட்டே விலகிடக் 
கர்மம் அறுபடக் காட்சி புலப்படக் 
கல்லில் ஊன்றிய சங்கல்ப்பம்! 

ஜென்மம் நான்கினி லுண்மை உருபெற 
செம்மைத் தவவலி திண்மை நிலையுற 
நம்முன் தியான நிலையைக் கொணர 
நம்குரு தேவர் சங்கல்ப்பம்! 

ஓம்ந மஷிவாய் ஆலேலூயா 
அல்லா குருஜீ புத்தம் என்றே 
தாம்ச மத்துவத் தடம மைத்தவெம் 
சத்குரு செய்த சங்கல்ப்பம்!

*
லிங்கம் விஞ்ஞான லிங்கம் - இந்த
லிங்கம் விஞ்ஞான லிங்கம் - எங்கும் 
தங்கும் அமைதித் தடாகத்தினில் 
தண்மை உருவான லிங்கம்! 

நெஞ்சில் ஓர்மோனம் தங்கும் - நம் 
நெஞ்சில் ஓர்மோனம் தங்கும் - அங்கு 
வெஞ்ச மர்செயும் எண்ணம் அடங்கிட 
வெற்றியில் நிற்கும் லிங்கம்! 

ஆதி குருவருள் அங்கம் - லிங்கம் 
ஆன்ம நாதத்த ரங்கம் - நம் 
காதில் விழுந்திடும் கீதம் அனைத்திலும் 
கதிர்களை வீசும் லிங்கம்! 

தாயின் கருபோல தோற்றம் - உள்ளே 
தழலும் புனலாகும் மாற்றம் - அங்கே 
மாயம் என்கின்ற நோயு மில்லாத  
வாழ்க்கை தருமந்த லிங்கம்! 

மௌனம் ஒன்றுதான் சொந்தம் - அதில் 
முழுமை தானாய்வி ளங்கும் - நம்மைத் 
தானம் செய்கின்ற கோவில் நடுமன்றில் 
தகிக்கும் தியான லிங்கம்! 

*
ஓமென்ற உச்சாடனம் - அதில் 
   உயர்கின்ற மோட்சத்தடம் - கேட்க 
நாமென்ற நிலைமாறியே - சக்தி 
   நடுவாகும் தெய்வத்திடம்! 
ஆமிந்த லிங்கத்தலம் - எங்கள் 
   அண்ணல்செய் சங்கல்ப்பமே - அதில் 
நாமிங்கு வந்ததெல்லாம் - அவர் 
   நாடகத் தோரங்கமே!

எத்தனை ஆண்டு காத்தார் - அவர் 
   எத்தனை வலிக ளேற்றார் - அதில் 
எத்தனை நிலைகள் பார்த்தார் - யாவும் 
   எங்களுக் கென்று சேர்த்தார்!
இத்தனை பெரிய புவியில் - கொண்ட 
   இறைமார்க்க நெறிகள் நடுவில் - நெஞ்ச 
சுத்தியைச் செய்த குருவாம் - அவரின் 
   துணையிந்த ஆதி சிவமாம்!

ஈஷாவில் அமைதி யுண்டு - கூட 
   இருக்கின்ற தெய்வம் உண்டு - எதுவும்  
பேசாத மௌன வெளியில் - நம்மைப் 
   பேணுகிற சக்தியுண்டு!
மாசான வாசனைகள் - யாவும் 
   மறைகின்ற காலம் எங்கும் - நெஞ்சை 
லேசாக ஆக்கி உள்ளே - ஆட்சி 
   செய்கின்ற தியான லிங்கம்!! 

-விவேக்பாரதி 
13.06.2019

Comments

Popular Posts