Posts

Showing posts from September, 2019

குட்டி ரெட்ட ஜடை | நவராத்திரி கவிதைகள் 2019

Image
- அவளுக்குத்தான் எத்தனை உருவம். எத்தனை வடிவம். எதுதான் அவள் வயது? முதுக்கிழவியாய்த் தெரியும் அவளே மறுகணத்தில் முறுவலிக்கும் குழந்தையாகிறாள்! ஆ! அந்தக் குழந்தைதான் எத்தனை அழகு…- ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்திஓம் ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்திஓம்! குட்டி ரெட்டஜட கட்டிக்கிட்டு ! ஒரு கோலச் சிங்காரியும் வந்தாளாம் – ஒரு பொட்டுன்னு நெத்தியில் வட்டத்த வெச்சவ போட்டி நிலாவுக்கு என்றாளாம் சின்னப் பதத்துல வண்ணச் சலங்க சினுங்க சினுங்க நடந்தாளாம் – ஒரு மின்னலப் பிடிச்சு பாலில் கொழச்சு மேனியில் பூசித் திரிஞ்சாளாம்! ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்திஓம் தத்தித் தத்தி வெளையாடுறப்ப முத்து தரையில் விழுந்ததாம் நட்சத்திரம் – மொகம் பொத்திப் பொத்திவெச்சு போக்குகாட்டி அவ பொக்குன்னு சிரிக்கும் விசித்திரம்! கலுக்கு கலுக்குன்னு சிரிச்சுத் தொலைக்குற காளி தேவியிங்க வந்தாளாம் – அண்டம் குலுக்கிப் பிடிக்கிற கோவக்காரி! ஒரு குட்டிப் பெண்ணுருவில் வந்தாளாம்! ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்திஓம் அள்ளி அ

பராசக்தி சக்தி | நவராத்திரி கவிதைகள் 2019

Image
இரவில் பகலில் எல்லா நேரமும் விழிக்குள் சூழ்ந்திருக்கும் சின்ன இருள், அவள் உருவாகத் தெரிகிறது. மனம் முணுமுணுக்கிறது. அவள் பெயரையே உச்சரிக்கிறது! சொல்லிக்கொண்டே இருந்தால் மட்டும் போதுமா? நெஞ்சின் ஏழ்மை நீங்கவா போகிறது??? பராசக்தி சக்திசக்தி பராசக்தி என்றுசொல்லிப்    பார்த்திருக்கும் ஏழை நெஞ்சமே! - உள்ளில் வராசக்தி வந்துநின்று தராசக்தி பொழிவதை    மறப்பதென்ன ஏழை நெஞ்சமே! - இருள் பராவிடும் அகத்தில்நல்ல பகலவன் உதிப்பகண்டு    படபடக்கும் ஏழை நெஞ்சமே! - கள் விராவுகின்ற கவிதைசொல்லி வீரையெங்கள் இரவைமெல்ல     விழுங்குகிறாள் ஏழை நெஞ்சமே!   கற்கள்தம்மை மலர்களாக்கிக் காலடியில் தூவினாலும்     கண்பனிக்கப் பார்த்திருப்பவள் - வெறும் சொற்களில் பிதற்றுமெங்கள் சோர்வெலாம் அகற்றியுள்ளில்     சூரியன் சிரிக்கச் செய்பவள்! - சின்னப்  புற்களுக்கும் ஆண்மைதந்து புட்களுக்கும் வானம்தந்து     புதிர்கள்கோடி செய்து வைப்பவள் - நெஞ்சக்  கற்பகத்து நிழலில்நம்மைக் காலம்தோறும் வாழவைக்கும்     காளியென்று கூவு நெஞ்சமே!  அரக்கியென்றும் தோற்றம்கொண்டு அகல்சிமிட்டல் குணமும் கொண்டு   

பழகிப் போன குரல் | நவராத்திரி கவிதைகள் 2019

Image
ஆயிரம் அலுவல்களுக்கு மத்தியிலும், கிடைத்துவிடும் ஏதோ ஒரு பயணப் பொழுதில், சில நிமிட இடைவெளிக்குள் ஒரு பாடல் நெஞ்சுக்குள் இசைக்கப்படுகிறது. யார் இசைக்கிறார்? எங்கோ கேட்ட குரலாய்... பழகிப் போன குரலில் உள்ளே     பாடல் கேட்கிறது! - ஆ     பாரதி பாடுகிறாள் - மனம்  மெழுகாய் மறுகணம் மலையாய்க் கனக்க     மெல்லிசை மீட்டுகிறாள்! - அடடா     மேனியை மீட்டுகிறாள்! வெள்ளைப் புடைவை தங்கப் புன்னகை     வீணை கையளென - அவள்     விரலில் தந்துபிகள்! - ஒரு  பள்ளத்தினில் நிறை வெள்ளத் துகளெனப்      பரவிடும் பாடல்களில் - உள்ளே     பலவித சங்கதிகள்  நெஞ்சில் சொற்களின் தனியரசாங்கம்     நேர்வது தெரிகிறது - அவளின்     நேர்முகம் தெரிகிறது! - உயிர்  தஞ்சம் என்றவள் தாளடி சேர்கையில்     தர்மம் தெரிகிறது - அறுபடும்     கர்மம் புரிகிறது  கல்விக் கதிபதி காக்கும் குணநிதி     கவிதைப் பிரியையவள் - வாசக்     கருமைக் குழலியவள்! - எழும்  சொல்வித்துக்குள் ககனம் நிரப்பி     சொலிக்கும் மாயையவள்! - நேரில்     தோன்றும் சாயையவள்! ஒருநாள் தெரிவாள் ஒருநாள் மறைவாள்     ஓயா

ஆத்தாடி ஆத்தா | நவராத்திரி கவிதைகள் 2019

Image
நவராத்திரி முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடல் நிகழும் பேற்றினைப் பராசக்தி கொடுக்கிறாள். அவள்தான் பாட்டுக்கு இறைவி ஆயிற்றே! இதோ 2019 ஆம் ஆண்டின் முதல் பாடல்...  ஆத்தாடி நம்மவூரு ஆத்தா! என்ன  ஆளில்லா நேரத்துல பார்த்தா! ஒரு  அன்பால பாடச்சொல்லி கேட்டா! அதுல  அடிக்கு அடி மடியில் தாளம் போட்டா!  ஆமாண்டா ஆத்தா! தாளம் போட்டா!  காத்தாடி வுட்டுக்கிட்டா காலமெல்லாம் சிரிச்சிக்கிட்டா  கண்ணசரும் நேரத்துல நெஞ்சுக்குள்ள ஒளிஞ்சிகிட்டா  பார்த்துத் தேணருறெண்டா பக்கம் பக்கமா பதறுறெண்டா!  பாட்டுக்குள்ள ஒளிஞ்சு சிரிக்கும் பராசத்திய தேடுறெண்டா!  முழுசா அவனெனப்பு முதுகுதண்டுல குறுகுறுப்பு  மொத்தமா ராத்திரியில பத்துதரம் கண்விழிப்பு  அழகா நின்னவடா! அசடுபோல சிரிச்சவடா!  அடிக்கடி சிரிப்புச் சத்தம்! மொகத்த மட்டும் காணலடா!  ஆமாண்டா ஆத்தா! தாளம் போட்டா! தோளுல ஊஞ்சகட்டி தூளியாட்டி சிரிச்சவடா  தொட்டுத்தொட்டு அகல்வெளக்க பத்திரமா பார்த்தவடா!  காளி மாரியின்னு பாட்டுப்பாட குதிச்சவடா  கண்ணுல சிக்காதத்தான் தேடவுட்டு ஒளிஞ்சவடா!  உள்பக்கம் திரும்பிக்கிட ஒருபயலும் ந

இன்னும் எரியும் நெருப்பு

Image
வந்தெரித்த தேதோ மனிதர் சிலபேர்தான்,  வெந்தெரிந்த தேதோ விறகுகள்தாம், - சிந்தையில்  அன்றெரிந்த பாரதி ஆகுதி! நம்நெஞ்சில்  நின்றெரியும் அந்த நெருப்பு!  மகாகவி பாரதியார் நினைவுகளுடன் விவேக்பாரதி  11.09.2019

இன்று கல்கி கிருஷ்ணமூர்த்தி பிறந்தநாள்

Image
பத்திரிகை மூலமிப் பார்வென்று! தெங்கிளநீர் ஒத்த கதைமூலம் ஓங்கிய - முத்தமிழர் சொல்கிடங் காகச் சொலித்தவெம் ஆசிரியர் கல்கி புகழைக் கருது! பொன்னியின் செல்வன் என்கிற காவியம்   பூமியில் தோன்றியதும் பொற்புடை வார இதழாய்க் கல்கி    புகழுற நின்றதுவும் உன்னதத் தமிழின் உயரமும் சிறப்பும்    உளங்கள் நிறைத்ததுவும் உத்தம சீலர் கிருட்டின மூர்த்தி    உழைத்ததில் தானன்றோ - எனவே வாழிய வாழிய அன்னவர் புகழென    வாழ்த்தொலி பாடோமோ நடுநிலைக் கொள்கை நாட்டினில் தோன்ற    நல்லிதழ் செய்தததுவும் நலனெனும் மந்திரம் நாளும் உரைத்தே    நன்னிலை தந்ததுவும் படிப்பவர் நெஞ்சில் பதிந்திடும் வண்ணம்    பதங்கள் பிறந்ததுவும் பாரத நேசர் கிருட்டிண மூர்த்தி    படைத்ததில் தானன்றோ! - எனவே வாழிய வாழிய அன்னவர் புகழென    வாழ்த்தொலி பாடோமோ சிறுகதை நல்ல விமர்சனம் எல்லாம்    சிலிர்க்கத் தந்ததுவும் சிறுவரும் பெரியோர் அனைவரும் பயிலும்    சிந்தனை தூவியதும் திறமைக ளாலே திக்கினை ஆண்டார்    சேர்க்கை உயர்ந்ததுவும் தீந்தமிழ் நெஞ்சர் கிருட்டிண மூர்த்தி    திகழ்ந்தததில் தானன்றோ - எனவே வாழிய வாழிய அன்னவர் புகழென    

பாரதச் செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை

Image
தேசபக்தி ஈடிலாத தெய்வபக்தி இவையிரண்டின்    தேர்ந்தரூபம் ஆகி நின்றவர் - இவர் காசுக்காக அந்நியர்க்குக் கால்சொறிந்தி ருந்தவர்கள்    கால்நடுங்கக் கப்பல் விட்டவர்! தூசுபோல பகைமிதித்துத் தோன்றிநின்ற இருள்துடைக்கச்    சூரியனாய் வந்த காவலர் - நெஞ்சில் பாசம்கண்ணில் வீரம்இன்னும் பாரதத்தின் மீதுகாதல்    படர்ந்த வ.உ.சி போற்றியே! சிறைகள்கண்ட போதும்கோடி அடிகள்கண்ட போதும்கண்கள்    சிந்திடாத வைர நெஞ்சினர் - தலை முறைகள்காணும் விடுதலைக்குப் பாடுபட்டு கட்டுப்பட்டு    முதுகுநோகச் செக்கி ழுத்தவர் நிறைகள்கொண்ட தமிழர்நூல்கள் பலபடித்து தெளிவுரைகள்    நிறையவிங்கு எழுதிச் செய்தவர் - கங்கு பறபறக்க அந்நியர்கள் கிடுகிடுக்க துணியெரித்தப்    பலமிகுந்த பிள்ளை போற்றியே! வீட்டைவிட்டு நாடுவாழ விதிசமைத்து கடல்பிடித்து    வித்தகமாய்க் கப்பல் விட்டவர் - அடிமை நாட்டைவிட்டுப் போகமக்கள் நல்லநிலை சேரபழைய    நலமுரைத்துக் கடல் மிதந்தவர்! ஏட்டில்நிற்க வில்லையின்னும் எழுச்சிகொண்ட பாரதர்க்குள்    ஏறிநிற்கும் எங்கள் வ.உ.சி - தந்த பாட்டையுண்டு போக!இன்னும் பணிகளுண்டு பாய!சொல்க    பாரதத்தின் செம்மல் போற்றிய

எங்கள் வ.உ.சி

Image
எங்கள் தமிழ்நாட்டின் எல்லையிலா வீரத்தைச்  சிங்கத் திருமுகத்தைச் செந்தமிழர் மானமெனில்  என்னென்று ஆண்டிருந்த ஐரோப்பியன் காண மின்னென்று தோன்றி மிரட்டிய ஒளிக்கீற்றை, பாரதத் தாயைப் பணிவதையே வாழ்கையெனத்  தாரக மந்திரம் முழங்கிய திருவாயை,  இடியே வீழ்ந்தாலும் இதயம் சரியாத  பிடிமான நெஞ்சைப், பிரியத்தில் குழந்தைபோல்  சிரிக்கும் இதழைச், சீறும் அலைவழியே  உரிமைக் கப்பல்செய் உயர்வான எண்ணத்தை, பின்னாளில், கற்ற பெரும்புலமை சேர்த்துக்  கன்னல் நூல்கள் கணக்கின்றி தந்த  மேதமையை, எங்கள் வ.உ.சி எனும்தேசக்  காதலரைப் பணிகின்றோம் கடமை இன்னதென  முழுவதுமாய் அறிகின்றோம் முன்னேறி தேசத்தில்  எழுகின்றோம் அவர்வழியே என்றும் நடப்போமே!!  -விவேக்பாரதி  05.09.2019

ஆசிரியர் தினம்

Image
கல்லைச் செதுக்கும் கவினுளியாய்! நம்மிருளின்  அல்லல் அகற்றும் அகல்விளக்காய் - எல்லையறு  பேரறிவின் பிம்பமாய்ப் பேணவந்த ஆசிரியர்  சீரடி எண்ணல் திறம்!  திறமை எவர்பக்கம் திட்டமிட் டுக்கண்(டு) அறிவைத் தருபவர் ஆசான் - பறவைக்கு வானாசான் மீனுக்கு நீராசான் நல்லிறையே தானாசான் மானிடர்க் கு! -விவேக்பாரதி  05.09.2019 படம் - நன்றி தினமலர் பட்டம். 

அம்மாவுக்குப் பிறந்தநாள்

Image
அம்மா நீயென் அன்புடைத் தோழி  அடியேன் அறிந்த என் முதல் காளி  அம்மா நீயென் அகமகிழ் ராணி  அயரும் பொழுதினில் ஊக்கிடும் தோணி  அம்மா உனக்கே என்னுடைப் பாட்டு  ஆத்திரம் மகிழ்ச்சி அனைத்தின் கூட்டு  அம்மா! உனக்கே ஆயிரம் முத்தம்  ஆண்டுகொள்வாயே அடியனை நித்தம்! உன்னைக் கண்டு வியந்ததும் உண்டு  உன்னைச் சிலநாள் சினந்ததும் உண்டு  உன்றன் வாக்கை மதித்ததும் உண்டு  உதவா தெனநான் மிதித்ததும் உண்டு  என்ன செய்யினும் என்பின் இருந்து  ஏது நேரினும் என்னைச் சுமந்து  கன்னல் புன்னகை கணக்காய்ப் புரிந்து  காப்பவள் நீயே! பூப்பவன் நானே! வாழ்த்திப் பாடிட வார்த்தைகள் தந்தேன்  வழங்கிய வரத்திற் கெதைநான் சேர்க்க? ஆழ்ந்த அன்பினில் நனைந்தே வளர்ந்தேன்  அதற்கு பதிலென எதைநான் வார்க்க?  ஊழ் கடத்திடும் வழியில் தொடர்ந்து  உந்திச் செல்கிறேன் ஓர் படகாக  சூழ்ந்த சுற்றமும் நட்பும் நீதான்  தொடர்க நின்றுணை சுவைகளும் சுகமும்! அப்பன் நெஞ்சினுக் கன்புடை யாளாய்  அடுத்து தம்பிக்கும் ஆசிரி தாயாய் எப்பொழுதும் நீ எங்கள் ராணியாய்  ஏணி போலே உழைத்திடு வோளாய்  அற்புதம் பல கோடி நிகழ்த