அம்மாவுக்குப் பிறந்தநாள்


அம்மா நீயென் அன்புடைத் தோழி 
அடியேன் அறிந்த என் முதல் காளி 
அம்மா நீயென் அகமகிழ் ராணி 
அயரும் பொழுதினில் ஊக்கிடும் தோணி 
அம்மா உனக்கே என்னுடைப் பாட்டு 
ஆத்திரம் மகிழ்ச்சி அனைத்தின் கூட்டு 
அம்மா! உனக்கே ஆயிரம் முத்தம் 
ஆண்டுகொள்வாயே அடியனை நித்தம்!

உன்னைக் கண்டு வியந்ததும் உண்டு 
உன்னைச் சிலநாள் சினந்ததும் உண்டு 
உன்றன் வாக்கை மதித்ததும் உண்டு 
உதவா தெனநான் மிதித்ததும் உண்டு 
என்ன செய்யினும் என்பின் இருந்து 
ஏது நேரினும் என்னைச் சுமந்து 
கன்னல் புன்னகை கணக்காய்ப் புரிந்து 
காப்பவள் நீயே! பூப்பவன் நானே!

வாழ்த்திப் பாடிட வார்த்தைகள் தந்தேன் 
வழங்கிய வரத்திற் கெதைநான் சேர்க்க?
ஆழ்ந்த அன்பினில் நனைந்தே வளர்ந்தேன் 
அதற்கு பதிலென எதைநான் வார்க்க? 
ஊழ் கடத்திடும் வழியில் தொடர்ந்து 
உந்திச் செல்கிறேன் ஓர் படகாக 
சூழ்ந்த சுற்றமும் நட்பும் நீதான் 
தொடர்க நின்றுணை சுவைகளும் சுகமும்!

அப்பன் நெஞ்சினுக் கன்புடை யாளாய் 
அடுத்து தம்பிக்கும் ஆசிரி தாயாய்
எப்பொழுதும் நீ எங்கள் ராணியாய் 
ஏணி போலே உழைத்திடு வோளாய் 
அற்புதம் பல கோடி நிகழ்த்தி 
அடைமழை அன்ன அன்பு செலுத்தி 
கற்பகத்தரு போலவே வாழ்க 
கவிதை கேட்டுநின் கண்ணில்நீர் சூழ்க!

ஆனந்த மாக ஆயிரம் பொழுதுகள் 
அன்பே நீயும் கண்டு மகிழ்க! 
தேனெனச் சிரிக்கும் உன்றன் திருவுரு 
தினந்தினம் வந்தென் திசைகள் மலர்க! 
வானென விரிந்த நெஞ்சகம் இன்னும் 
வாழ்த்தி வாழ்ந்து வளமைகள் சூழ்க! 
ஞானம் அமுதம் நின்மனம் நிறைக! 
நாளும் நாளும் வாழுக நன்றே!!

-விவேக்பாரதி
03.09.2019

Comments