பாரதச் செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை


தேசபக்தி ஈடிலாத தெய்வபக்தி இவையிரண்டின்
   தேர்ந்தரூபம் ஆகி நின்றவர் - இவர்
காசுக்காக அந்நியர்க்குக் கால்சொறிந்தி ருந்தவர்கள்
   கால்நடுங்கக் கப்பல் விட்டவர்!
தூசுபோல பகைமிதித்துத் தோன்றிநின்ற இருள்துடைக்கச்
   சூரியனாய் வந்த காவலர் - நெஞ்சில்
பாசம்கண்ணில் வீரம்இன்னும் பாரதத்தின் மீதுகாதல்
   படர்ந்த வ.உ.சி போற்றியே!

சிறைகள்கண்ட போதும்கோடி அடிகள்கண்ட போதும்கண்கள்
   சிந்திடாத வைர நெஞ்சினர் - தலை
முறைகள்காணும் விடுதலைக்குப் பாடுபட்டு கட்டுப்பட்டு
   முதுகுநோகச் செக்கி ழுத்தவர்
நிறைகள்கொண்ட தமிழர்நூல்கள் பலபடித்து தெளிவுரைகள்
   நிறையவிங்கு எழுதிச் செய்தவர் - கங்கு
பறபறக்க அந்நியர்கள் கிடுகிடுக்க துணியெரித்தப்
   பலமிகுந்த பிள்ளை போற்றியே!

வீட்டைவிட்டு நாடுவாழ விதிசமைத்து கடல்பிடித்து
   வித்தகமாய்க் கப்பல் விட்டவர் - அடிமை
நாட்டைவிட்டுப் போகமக்கள் நல்லநிலை சேரபழைய
   நலமுரைத்துக் கடல் மிதந்தவர்!
ஏட்டில்நிற்க வில்லையின்னும் எழுச்சிகொண்ட பாரதர்க்குள்
   ஏறிநிற்கும் எங்கள் வ.உ.சி - தந்த
பாட்டையுண்டு போக!இன்னும் பணிகளுண்டு பாய!சொல்க
   பாரதத்தின் செம்மல் போற்றியே!!

-விவேக்பாரதி
05.09.2019

Comments

Popular Posts