எங்கள் வ.உ.சிஎங்கள் தமிழ்நாட்டின் எல்லையிலா வீரத்தைச் 
சிங்கத் திருமுகத்தைச் செந்தமிழர் மானமெனில் 
என்னென்று ஆண்டிருந்த ஐரோப்பியன் காண
மின்னென்று தோன்றி மிரட்டிய ஒளிக்கீற்றை,
பாரதத் தாயைப் பணிவதையே வாழ்கையெனத் 
தாரக மந்திரம் முழங்கிய திருவாயை, 
இடியே வீழ்ந்தாலும் இதயம் சரியாத 
பிடிமான நெஞ்சைப், பிரியத்தில் குழந்தைபோல் 
சிரிக்கும் இதழைச், சீறும் அலைவழியே 
உரிமைக் கப்பல்செய் உயர்வான எண்ணத்தை,
பின்னாளில், கற்ற பெரும்புலமை சேர்த்துக் 
கன்னல் நூல்கள் கணக்கின்றி தந்த 
மேதமையை, எங்கள் வ.உ.சி எனும்தேசக் 
காதலரைப் பணிகின்றோம் கடமை இன்னதென 
முழுவதுமாய் அறிகின்றோம் முன்னேறி தேசத்தில் 
எழுகின்றோம் அவர்வழியே என்றும் நடப்போமே!! 

-விவேக்பாரதி 

05.09.2019

Comments

Popular Posts