பராசக்தி சக்தி | நவராத்திரி கவிதைகள் 2019இரவில் பகலில் எல்லா நேரமும் விழிக்குள் சூழ்ந்திருக்கும் சின்ன இருள், அவள் உருவாகத் தெரிகிறது. மனம் முணுமுணுக்கிறது. அவள் பெயரையே உச்சரிக்கிறது! சொல்லிக்கொண்டே இருந்தால் மட்டும் போதுமா? நெஞ்சின் ஏழ்மை நீங்கவா போகிறது???

பராசக்தி சக்திசக்தி பராசக்தி என்றுசொல்லிப்
   பார்த்திருக்கும் ஏழை நெஞ்சமே! - உள்ளில்
வராசக்தி வந்துநின்று தராசக்தி பொழிவதை
   மறப்பதென்ன ஏழை நெஞ்சமே! - இருள்
பராவிடும் அகத்தில்நல்ல பகலவன் உதிப்பகண்டு
   படபடக்கும் ஏழை நெஞ்சமே! - கள்
விராவுகின்ற கவிதைசொல்லி வீரையெங்கள் இரவைமெல்ல 
   விழுங்குகிறாள் ஏழை நெஞ்சமே!
 
கற்கள்தம்மை மலர்களாக்கிக் காலடியில் தூவினாலும் 
   கண்பனிக்கப் பார்த்திருப்பவள் - வெறும்
சொற்களில் பிதற்றுமெங்கள் சோர்வெலாம் அகற்றியுள்ளில் 
   சூரியன் சிரிக்கச் செய்பவள்! - சின்னப் 
புற்களுக்கும் ஆண்மைதந்து புட்களுக்கும் வானம்தந்து 
   புதிர்கள்கோடி செய்து வைப்பவள் - நெஞ்சக் 
கற்பகத்து நிழலில்நம்மைக் காலம்தோறும் வாழவைக்கும் 
   காளியென்று கூவு நெஞ்சமே! 

அரக்கியென்றும் தோற்றம்கொண்டு அகல்சிமிட்டல் குணமும் கொண்டு 
   அந்தரத்தில் வாழும் தெய்வதம் - நாம்
ஆற்றுகின்ற காரியங்கள் அத்தனைக்கும் சாட்சியாகி 
   ஆட்சிசெய்யும் சக்தி மந்திரம்! - நல்ல 
நெருப்பவிழ்ந்து கூந்தலாகி நேரிழையில் ஓடுகின்ற 
   நேர்த்தியந்த காளி ரூபமாம் - அதை 
நெக்குருகக் கண்டுகண்டு சொக்கிசொக்கி யேவியந்து 
   நெஞ்சிலேந்த நாளும் இன்பமாம்! 

கனகனகன கனகனவென திருநகையினில் ஒலிவரவவள் 
   காற்றிலே சிரிக்கும் காளியாம் - மனம்
காமமென்னும் ஏமந்தன்னில் கண்மயங்கி நிற்கும்போது 
   காட்சிதந்து மீட்கும் நீலியாம் - தினம்
நினைவலைகளில் கனவிருள்களில் புதுப்புதுசுரம் படிப்பவருடன் 
   நிழலினுருவில் ஆடும் ஜோதியாம் - உயிர் 
நீவிவிட்டு மடியமர்த்தித் தழுவிடாமல் நாடகங்கள் 
   நீட்டுகின்ற மாயக் காரியாம்! 

மாயம்காட்டும் காளியுருவை மனதுமொத்தம் வைத்தால் 
சாயம்நீங்கும் மறுகணத்தில் சந்நிதிமுன் தோன்றும் 
நேயமேறும் நெஞ்சினுக்குள் நினைவழிந்து போகும் - நாம் 
காயம்மட்டும் இல்லையென்னும் கதைவிளங்கும் கண்டீர் 

சித்தசுத்தி நேருமதில் நித்தபக்தி ஊறும் 
கத்திக்கத்தி யேதிரிந்த காட்டுநெஞ்சம் ஓயும் 
சத்தியங்கள் தோன்றுமங்கு தத்துவங்கள் தோன்றும் -பரா
சக்திசக்தி சக்திசக்தி சக்தியென்றால் போதும்...

-விவேக்பாரதி
30.09.2019


Comments

Popular posts from this blog

கவிதை ஆண்டாள் - 1

மரகதப் பஞ்சகம்

மாதங்களில் அவள் மார்கழி