Posts

Showing posts from December, 2019

புத்தாண்டு அழகே வருக

Image
புத்தாண் டழகே வருக! - நாளும்    புதுமை இன்பம் இயல்பாய்த் தருக! இத்தோ டின்னும் நலமாய் - ஒரு    ஈடில் லாத சுகமாய்த் தரமாய் புத்தாண் டழகே வருக! கண்ணில் பட்டவை வண்ண மாகுக    காற்றில் ஆயிரம் பண்கள் தூவுக மண்ணில் அனைத்தும் இன்ப மாகுக    மனமெல் லாமும் மலர்க ளாகுக எண்ணம் நினைப்பன ஏற்ற மாகுக    எல்லாம் எல்லாம் மாற்ற மாகுக தண்ணீர் அமுதம் வானில் வளர்க    தரையெல் லாமும் நிறையென் றாக வயல்கள் எல்லாம் வளமை காண்க    வழிகள் எல்லாம் வலிமை காண்க புயங்கள் உடல்கள் உறுதி காண்க    புதிராம் வாழ்க்கை புதுமை காண்க நியதிகள் எல்லாம் நிலைமை காண்க    நித்தமும் சத்தியம் நிறைவைக் காண்க முயற்சி அனைத்தும் முனைப்பைக் காண்க    முற்றும் லட்சியம் வெற்றியைக் காண்க ஏமாற் றங்கள் இனிமறை யட்டும்    ஏகாந் தங்கள் இனிநிறை யட்டும் நாமாய் உழைக்கும் நலம்வள ரட்டும்    நம்முரி மைகளை நாடறி யட்டும் ஓமெனும் தத்துவம் உள்ளுறை யட்டும்    ஒவ்வொரு கணமும் களியிருக் கட்டும் ஆமிவை எல்லாம் இனியமை யட்டும்    ஆண்டுகள் நிலையிலை அகமுண ரட்டும்!! -விவேக்பாரதி  01.01.2020

இசை பிறக்கும் நேரம்

Image
என் உள்ளத்துக்குள் இசை பிறக்கும் உன்னத நேரமிது! இந்த உலகின் நன்மை கருதுவது! அட உமக்காய்த் தோன்றுவது! இதயத் துடிப்பின் நாதத்தை மிருதங் கத்தின் ஓசைகளாய் உதவும் காற்றின் சுவாசத்தைப் புல்லாங் குழலின் பாடல்களாய் நரம்பின் அசைவுகள் ஒவ்வொன்றும் நல்ல வீணைத் தந்திகளாய் உள்ளே கிடைக்கும் பெருமௌனம் ஓங்காரச் சுருதிகளாய் என் உள்ளத்துக்குள் இசை பிறக்கும் இன்னத நேரமிது! வார்த்தை அற்ற பெருவெளியில் வானம் திறக்கும் சிறுமனதில் யார்வந் திதனைச் செய்வதென ஆராய்ச்சி எதும் இல்லாமல் போர்வந் ததெனச் செயல்மறந்து புத்தி தெளிந்து மிகநனைந்து பார்த்தால் நல்ல இசையொன்று பாடலாகிக் கவிகிறது என் உள்ளத்துக்குள் இசை பிறக்கும் உன்னத நேரமிது! வாருங்கள் இதைக் கேட்பதற்கு மனம் மறந்தே ஆடுதற்கு வாருங்கள் இதில் வாழுதற்கு வாழ்க்கை நிரந்தரம் ஆகுதற்கு பாருங்கள் ஒரு புதுவுலகம் பாடல் வழியில் இனிஜனனம் சேருங்கள் உம் காதுகளைச் சேரும் பாடல் அதனிடத்தை! என் உள்ளத்துக்குள் இசை பிறக்கும் உன்னத நேரமிது! இந்த உலகின் நன்மை கருதுவது! அட உமக்காய்த் தோன்றுவது!! -விவேக்பாரதி 30.12.2019

கதாபாத்திரங்களை இதயத்திலிருந்து படைக்கிறேன்

Image
“சாகித்ய அகாதமி விருது என்பது இலக்கியத்துக்காக மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருது. இது எனக்குக் கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறுகிறார் இந்த வருடத்துக்கான சாகித்ய அகாதமி விருதுபெற்ற ‘சூல்’ நாவலின் ஆசிரியர் சோ. தர்மன். முழுநேர எழுத்தாளராகவும் பகுதிநேர விவசாயியாகவும் வாழ்ந்துகொண்டிருக்கும் தர்மன், “எங்கள் பகுதியில் இன்னும் சில தினங்களில் பிள்ளை பெறவிருக்கும் நிறைமாதக் கர்ப்பிணியை ‘நிறைசூலி’ என்று சொல்வது வழக்கம். பருத்தி எடுக்கும் வேலைக்கு வரும் அப்படிப்பட்ட நிறைசூலிகளுக்கு, வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் சேர்த்துக் கூலி கொடுப்பார்கள். இன்னொரு உயிரை உலகத்தில் பிரசவிக்க விருக்கும் பெண்ணுக்கு இத்தனை மரியாதைகளைச் செய்யும் சமூகத்திலிருந்து வந்த எனக்கு, கண்மாய்கள் நிறைசூலிகளாகத் தெரிகின்றன. கண்மாய், எத் தனை நீர்வாழ் உயிரினங்களையும், பூச்சிகளையும், பறவைகளையும் உற்பத்தி செய்யும் சூலாக இருக்கிறது என்பது என்னுடைய பார்வை. நான் விவசாயி என்பதால் எங்கள் ஊரில் சில காலம் முன்பு ஏற்பட்ட தண்ணீர்ப் பஞ்சம் என்னை ஆராய்ச்சி செய்ய வைத்தது.

சித்திர நடம்

Image
நண்பன் சத்திய நாராயணன் இந்தப் படம் எடுத்துவந்து அதற்கொரு கவிதை தரும்படி கேட்டான்! நேற்று முந்தினம் தோழி அமிர்தாவின் நாட்டியத்தைக் காண நேர்ந்தது! அதை இது பிரதிபலிக்க, அந்த இன்பம் இந்த இன்பத்தில் வெளிவந்தது! சச்சல சலவென வணுங்கு சலங்கை தத்திமி தகஜனு சுரங்கள் வழங்க நித்தில நகமொடு நிமிர்ந்த பதங்கள் - நடமாட மத்தள ஜதிகொடு வணங்கி மயங்கி வக்கணை மலர்குழல் விரிந்து சுழன்று மச்சம தெனும்விழி நகர்ந்து நகர்ந்து - விளையாட சிற்றிடை யெனுமொரு குழந்தை மருங்கி லொட்டிய அரைவடம் சிணுங்கி நடுங்க உத்தர தனமவை யுயர்ந்து குலுங்க - வொருமாது சத்திய விறைவரு லகங்க ளறிந்த சித்திர நடவகை பொழிந்த துகண்டு முற்றிய கவிமனம் வியந்து புகழ்ந்து - மகிழாதோ!! -விவேக்பாரதி 26.12.2019

பாடுவோம் ஏசு நாமம்

Image
ஆடுபோல் இருந்த மக்கள்    அறிவினில் விழிப்பைக் கொள்ளப் பாடுகள் நீங்கிப் போகப்    பரமனின் மகன் பிறந்தான்! பாடுவோம் ஏசு நாமம்    பழகுவோம் அன்பு நாதம்! சூடுவோம் தியாக உள்ளம்    சுகமெலாம் வாய்க்கும் வாறே! தொழுவினில் விண்மீன் ஒன்று    தோன்றிய சேதி கேட்டு முழுதுமாய் உலகில் இன்பம்    மூண்டதும் இந்த நாளாம்! பாடுவோம் ஏசு நாமம்    பழகுவோம் அன்பு நாதம்! சூடுவோம் தியாக உள்ளம்    சுகமெலாம் வாய்க்கும் வாறே! போதனை சிறுவன் செய்ய    புறமெலாம் வியந்து பார்த்துச் சாதனை என்று பின்னால்    தொடரவே வந்த நாளாம்! பாடுவோம் ஏசு நாமம்    பழகுவோம் அன்பு நாதம்! சூடுவோம் தியாக உள்ளம்    சுகமெலாம் வாய்க்கும் வாறே! பாவிகள் புண்ணியத்தைப்    பார்த்திடப் பரமன் தாளில் ஆவிதீர் பொழுதும் வேண்டும்    அன்புளம் வந்த நாளாம்! பாடுவோம் ஏசு நாமம்    பழகுவோம் அன்பு நாதம்! சூடுவோம் தியாக உள்ளம்    சுகமெலாம் வாய்க்கும் வாறே!! -விவேக்பாரதி  25.12.2019

மழையில் நனைந்தால் | மணிப்பாவை

Image
#மணிப்பாவை - 4 மழையில் நனைந்தால் மனங்குளிர் தல்போல் அழுதை நதியால் அகங்குளிர் வெய்தும்!  முழுவுல கேழும் முனைந்து துதிக்கும்  குழந்தையை யப்பன் குறிப்புணர்ந் துள்ளில்  அழைத்திடு முன்பே அருளிடுந் தெய்வம்!  மழலை மகளே! மயக்கந் தெளிவாய்!  தழல்கொளும் மேனி தணிந்துங் குளிர்ந்தும் எழில்பெறக் கோஷம் எழுப்பேலோ ரெம்பாவாய்! (4)  கருத்து: தோழிகளே! நமக்கெல்லாம் மழையில் நனைய எவ்வளவு பிடிக்கும்? மனம் குளுமை அடையும் அல்லவா! அதுபோலத்தான் அழுதை நதியில் குளிக்கும்போதும் மனம் குளுமை அடையும். ஏழு உலகங்களும் தினமும் வியந்து வணங்கக்கூடிய குழந்தை ஐயப்பன் ஆகிய இறைவன், நம்முடைய அகக் குறிப்புகளை உணர்ந்து, நாம் உள்ளத்தால் நினைத்து அழைத்திடும் முன்னமே நமக்கு அருள்தரும் தெய்வம். மழலைக்குணம் நிறைந்த மகளே! நீ மயக்கம் தெளிந்துகொள்! அழுதை நதியில் குளிக்கும்போது உடம்பில் இருக்கும் உஷ்ணமெல்லாம் தணிந்து, குளிர்ந்து உடம்பு எழில்பெறும். அப்போது சரண கோஷங்களை எழுப்பிடுவோம் என் பாவையே! -விவேக்பாரதி 20.12.2019

வானகத்துத் தேவரெலாம் | மணிப்பாவை

Image
வானகத்துத் தேவரெலாம் வந்தேத்தும் ஐயப்பன்  கானகத்துக் கோயிலைக் காணும் விரதத்தில்  பானகமும் நல்ல பழமும் நிவேதனமாய் தானஞ்செய் தர்மத்தும் சத்திய கர்மத்தும்  கானத்தும் ஐயனைக் காணுதல் பேரின்பம்!  ஞானகுரு சாமிசொன்னார் நங்காய் விழிதிறந் தேனின்னும் பள்ளி எழவில்லை? காலையிலே  மோனந்தீர் கோஷம் முழங்கேலோ ரெம்பாவாய்! (3) கருத்து:  வானத்தின் அகத்தில் வாழும் முப்பத்து முக்கோடி தேவர்களும் வந்து வணங்கித் துதிக்கும் ஐயப்பனின் காட்டுக் கோயிலைக் காண நாம் விரதம் இருக்கிறோம் அல்லவா! இந்த விரத பூஜைக் காலத்தில் பானகமும் பழங்களும் ஐயப்பனுக்கு வழக்கப்பட்டு நமக்கும் நிவேதனமாய்க் கிடைக்கின்றது. இந்த நிவேதனத்தோடு சேர்த்து சிறந்த தானமான நிதானமும், சிறந்த கர்மமமான சத்தியமும், சிறந்த சந்தோஷமான கானமும் நமக்க் ஐயப்பனையே காட்டுமாம்! அது நமக்குப் பேரின்பம் சேர்க்குமாம்!  இதையெல்லாம் நம் குருசாமி என்னிடம் சொன்னாரடி! நீ மட்டும் ஏன் இன்னும் துயிலெழவில்லை? உன் மௌனம் தீர்க! காலையில் ஐயப்பன் சரண கோஷத்தை முழங்கிடுவோம் என் பாவையே!  -விவேக்பாரதி 19.12.2019

பேசும் சித்திரங்கள்

Image
-22.09.2019 கல்கி இதழில் வெளியான கட்டுரை-     நம் தெருக்களில் குப்பையான இடங்களையும் பாழடைந்த சுவர்களையும் கண்டிருப்போம். அவற்றின் அழுகுரலைக் கேட்டிருப்போமா? போகிற போக்கில் ஒருவர் ஓரிடத்தில் குப்பையைப் போட்டால், சில தினங்களில் அந்த இடமே அங்கீகரிக்கப்பட்ட குப்பைத்தொட்டி இடமாக ஆகிவிடுகிறது. இந்த அவலம், நம் எல்லாத் தெருக்களிலும் உண்டு. அவற்றுக்குச் சாப விமோச்சனமே கிடையாதா என்று எண்ணியபோது, ‘நாங்க இருக்கோம்’என்று கரம்தூக்கி வருகின்றனர் ‘கரம் கோப்போம்’என்ற அமைப்பினர். மொதல்ல எங்கள் வீட்டுக்கு எதிரே இருந்த சுவர் பாழடைஞ்சு, குப்பைக் கிடங்கா ஆகிட்டு இருந்துச்சு. அதைச் சுத்தம் செய்ய ஆரம்பிச்சோம். சுத்தம் பண்ணி அப்படியே விட்டால் திரும்பவும் குப்பை போட்டுடுவாங்கன்னு யோசிச்சோம். அந்தச் சுவர்ல ஏதாச்சும் கலைநயத்தைச் செயலாம்னு திட்டமிட்டோம். கொஞ்ச நாள்ல அக்கம் பக்கத்து மக்கள் நிறையபேர் அதைப் பார்த்துட்டு அவங்க பகுதிக்கும் செய்து தரச்சொல்லிக் கேட்டாங்க. நாங்களும் எஸ்.ஏ.பி.எஸ்.(Stop Abusing Public Spaces) ஒரு வாட்ஸாப் குரூப்பை உருவாக்கி அடுத்தடுத்த இடங்களையும் சுத்தம் செய்து அலங்கரிச்சோம். அதுவ

மாலை அணிவோர் விரதம் | மணிப்பாவை

Image
#மணிப்பாவை-2 மாலை அணிவோர் விரதம்மேற் கொள்ளணுமாம் காலை எழுந்து கடகடென நீராடி நீலம் கருப்பு நிறத்தாடை தாம்சாற்றி ஆலம் அருந்திய ஈசற்கும் மோகினியாம் மாலுக்கும் வந்த மகனைத் துதிக்கணுமாம் நாளுமிது செய்யணுமாம் நம்தந்தை சொல்கின்றார் மேலும் பலவுண்டாம் மென்மகளே கண்மலராய் ஞாலத்து நாயகன்பேர் நாமுரைப்போம் எம்பாவாய்! கருத்து : நம் அப்பா சொல்கிறார், "ஐயப்ப சுவாமிக்கு மாலை போடுபவர்கள் விரதம் இருக்க வேண்டும். காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். எழுந்த உடன் குளிக்க வேண்டும். குளித்து, நீலம் அல்லது கருப்பு நிறத்தில் ஆடைகள் அணிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு அணிந்துகொண்டு ஆலகாக விஷத்தை அருந்திய பரமசிவனுக்கும் மோகினியாக மாறி வந்த மகாவிஷ்ணுவுக்கும் பிறந்த மகன், ஐயப்பன் திருப்பாதங்களைக் காண வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும்" என்கிறார். இன்னும் நிறைய இருக்கிறது என்றும் சொல்லிறார். எனவே மென்மையான என் தோழியே! உன் கண்களைத் திறந்து தூக்கம் விழித்துக்கொள்! நாம் சேர்ந்து இந்த உலகத்தைக் காக்கும் நாயகனான ஐயப்பன் பெயரைப் பாடி மகிழ்வோமாக!  -விவேக்பாரதி  18.10.2019

பச்சை மரகதம்

Image
பச்சை மரகதப் பதுமையாள் - நின்று    பார்த்திடப் பார்த்திட இனிமையாள்! உள்ள பயங்கள் தவிர்க்குந் துணையினாள் - செல்வப்    பாண்டிய நாட்டின் தலைவியாள்! மன இச்சை நடத்தும் திறமையாள் - எங்கள்    ஈசரைக் காதல்செய் வுரிமையாள்! சின்ன ஈர்க்குச்சி நெஞ்சினை வைரமாய் - கண்    இமைப்பினில் ஆக்கும் கருணையாள்! கயல்கள் சிரிக்கும் விழியினாள் - சந்தக்    கவிதைக் கசையும் இடையினாள்! வரும் கவலை துடைக்கும் கரத்தினாள் - காணக்    கண்களித்தூறும் வளத்தினாள்! என்றும் முயலும் மனத்தில் விசையினாள் - இந்த    முத்தமிழ் நாட்டுக் கிறைவியாள்! உயிர் மோட்சம் பெறச்செயும் நாமத்தாள் - நம்    முக்கண்ணன் வெள்ளுடல் வாமத்தாள்! பொற்றா மரைக்குள தீரத்தில் - கொஞ்சம்    போயமர் கின்றபொன் னேரத்தில்! சின்னப் புன்னகை மட்டும் புரிகுவாள்! - யார்    புரிவதென் றேநாம் விழிக்கையில், வண்ணச் சிற்றாடை கட்டிய செல்வியாய் - வந்து    சிணுங்கியே கண்முன்னின் றோடுவாள்! எந்தச் சீருக்கும் தோன்றாப் புதிரினாள் - பிள்ளை    சிரிப்பது கண்டு கிறங்குவாள்! கைகளில் குங்குமம் ஏந்துவாள் - நாம்    கண்மூட நெற்றியில் பூசுவாள்! அவள் கைவிரல் பட்ட

மார்கழி கோலமாய் | மணிப்பாவை

Image
மார்கழி மாதம் ஐயப்பன்மேல் பாவைப் பாடல்கள் எழுதலாம் என்று தோன்றியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஏற்கனவே விநாயகர்மேல் நான் எழுதி வைத்திருக்கும் பாவைப் பாடல்கள் #புதுவெம்பாவை என்று இருக்கின்றன. நாற்சீர் எட்டடி தரவு கொச்சகக் கலிப்பாவால் அமைவன பாவைச் செய்யுட்கள். #மணிப்பாவை -1 மார்கழி கோலமாய் வாசல் நிறைந்தனள் கார்த்திகைத் திங்கள் கழுத்தே றியமணி போர்புகழ் வில்லன் புலிவாக னன்கோயில் கீர்த்தியைக் காணக் கிளர்த்தும் சரணத்தின் வார்த்தைகள் கேட்டும் மயக்கமோ! எந்தோழீ! மூர்த்தி யிருவர் முகையாய் முளைத்தெழுந்த பார்த்திவன் ஐயப்பன் பந்தள ராஜன்பேர் சேர்ந்துரைத்து நீராடிச் சேவிப்போ மெம்பாவாய்! கருத்து: அம்மா வாசலில் இட்டிருக்கும் வண்ணக் கோலத்தின்மூலம் மார்கழி என்னும் பெண்மகள் நமக்குக் காட்சியானாள். ஒரு மாதம் ஆகிவிட்டது. நம் கழுத்தில் கார்த்திகை மாதம் ஏறியது ஐயப்பனின் துளசிமணி மாலை. மகிஷியுடன் தனக்கு நடந்த போரில் வென்று அகில உலகமும் புகழும்படி நின்ற வில் வித்தைக்காரன், புலிகளின்மேல் ஏறி நாடு சேர்ந்தவன் ஐயப்பன். அவனுடைய கோயில் கீர்த்திகளைப் பார்க்கும் ஆவலை நெஞ்சுக்குள் அந்த மணிமலை தூண்டி

பாரதியிடமிருந்தே பெற்ற வாழ்த்து

Image
08.12.2019 தேதி கல்கி வார இதழில் வெளியான கட்டுரை.  பாரதி செல்லம்மா சிலையுடன்  ஏழு அடி உயரத்துக்குக் கம்பீரமான சிலை. மகாகவி சுப்பிரமணிய பாரதி, செல்லம்மாள் தோளில் கைபோட்டபடி இருக்கும் சிலையைப் பார்க்கவே பரவசமாக இருந்தது. இதனை உருவாக்கக் கடுமையாக உழைத்திருக்கிறார் சிற்பி சுரேந்திரநாத். அவரிடம் பேசினோம். சிற்பக் கலையில் உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்போது? "நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்து இந்த ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. அதற்கு முக்கியமான காரணம் என்னுடைய சகோதரர்தான். அவர் கன்னியப்பன் என்கிற சிற்பியிடம் அப்போது உதவியாளராக இருந்தார். நான் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்ததும் அதே சிற்பியிடம் வேலைக்குச் சேர்ந்தேன். அவர்தான் ‘நீ வேலை செய்ய வரவில்லை; கற்றுக்கொள்ள வந்திருக்கிறாய் என்பதை உணர்’என்று சொல்லி எனக்குக் கற்பித்தார். அதிலிருந்து சிற்பக்கலை மேல் ஆர்வம் ஏற்பட்டது." சிற்பியிலிருந்து கல்லூரியில் பகுதி நேர ஆசிரியர் ஆனது எப்படி? "நான் எங்கள் ஆசிரியர் சிற்பி கன்னியப்பனுடன் சேர்ந்து சிற்பங்களைப் படைப்பதில் ஆர்வமா இருந்தேன். என் அப்பாதான் ஆசானிடம

உண்மையைத் தேடி...

Image
நான்யார் நான்யார் யார்யார் நான்தான் யார்? பார்ப்பதில் எல்லாம் உண்மையைத் தேடும்    பத்திரிகை யாளனா? - தினம் பார்ப்பதை உண்மை என்று முகிழ்ந்து    பாடிடும் கவிஞனா? உணர்வுத் தளத்தில் உயரே பறக்கும்    உன்னதப் பிறவியா? - சக மணங்களோடே சேர்ந்து மணக்கும்    மலர்களின் ஜாதியா? அறிவைக் கேட்டு வேலை செய்யும்    அதிகாரத்தவனா? மனம் பறக்கச் சொல்லும் வார்த்தை நம்பிப்    பறவை ஆனவனா? அடுத்தவர் சொல்லை அப்படியே நான்    ஆற்றும் எந்திரமா? - அட தடுப்பவர் இல்லை என்ற நினைப்பில்    தளங்கள் செய்பவனா? அதிசயம் அற்ற தினத்தில் புதைந்து    அழுகை மறந்தவனா? - நான் துதிக்கும் தெய்வம் துணைவர என்றே    தொல்லை செய்பவனா? எனக்குள் புதிதாய் எப்படி எல்லாம்    எரிமலை வெடிக்கிறது? - அது கனக்கும் சுமையைக் கழற்றி வைக்கக்    கவிதை பிறக்கிறது! நான்யார் என்னும் கேள்வி இருக்க    நாளும் நகர்கிறது - அது வான்போல் விரிந்து தெரியும் நாளில்    வாழ்க்கை புரிகிறது!! -விவேக்பாரதி 07.08.2019

சொல்லைக் கடந்த சுகம்

Image
சந்த வசந்தம் கூகுள் குழுவில் கரூர் புலவர் இனியனார் தலைமையில் நடந்து கொண்டிருக்கும் கவியரங்கில் நான் படைத்த கவிதை... எத்தனை சுகமடா நாட்டுக்குள்ளே - அவை     எல்லாம் அடங்குமா பாட்டுக்குள்ளே!  எத்தனை இனிமைகள் மண்ணுக்குள்ளே - அதை     எழுத முடியுமோ சொல்லுக்குள்ளே!  தூக்கம் விழிக்கையில் செவிகளை மோதிடும்    செவ்விசை தேனின் சுகம் - மனம்  துவள்கின்ற போதினில் நண்பரின் தோள்களே     துணையாக நிற்றல் சுகம்  காக்கின்ற கடவுளின் பேர்சொல்லிப் பாடிநம்     கண்கள் பணித்தல் சுகம் - நெஞ்சில் காலையில் மாலையில் வேளையெல் லாமுமே     கவிதை பிறத்தல் சுகம்!  காதல் எனும்கதை கண்கள் அறிந்திடும்     காலத்தில் பருவம் சுகம் - கொஞ்சம்  காமம் எனும்சுவை ஏமம் உணர்கையில்     காயங்கள் பெறுதல் சுகம்!  சாதம் பருப்புடன் நெய்யும் பிசைந்துநம்     தாயூட்டும் அன்னம் சுகம் - அதில்  சற்றே நடுவினில் பொரியலும் அப்பளமும்    சார்ப்பாகத் தருதல் சுகம்! கிண்ணத்திலே மது, எண்ணத்திலே புகை     கிளர்த்தும் சிலர்க்குச் சுகம் - உயர்  கின்னரர் தோற்றிடக் குழவிகள் பேசிடும்     கிளியெனும் மழலை