சொல்லைக் கடந்த சுகம்


சந்த வசந்தம் கூகுள் குழுவில் கரூர் புலவர் இனியனார் தலைமையில் நடந்து கொண்டிருக்கும் கவியரங்கில் நான் படைத்த கவிதை...

எத்தனை சுகமடா நாட்டுக்குள்ளே - அவை 
   எல்லாம் அடங்குமா பாட்டுக்குள்ளே! 
எத்தனை இனிமைகள் மண்ணுக்குள்ளே - அதை 
   எழுத முடியுமோ சொல்லுக்குள்ளே! 

தூக்கம் விழிக்கையில் செவிகளை மோதிடும்
   செவ்விசை தேனின் சுகம் - மனம் 
துவள்கின்ற போதினில் நண்பரின் தோள்களே 
   துணையாக நிற்றல் சுகம் 
காக்கின்ற கடவுளின் பேர்சொல்லிப் பாடிநம் 
   கண்கள் பணித்தல் சுகம் - நெஞ்சில்
காலையில் மாலையில் வேளையெல் லாமுமே 
   கவிதை பிறத்தல் சுகம்! 

காதல் எனும்கதை கண்கள் அறிந்திடும் 
   காலத்தில் பருவம் சுகம் - கொஞ்சம் 
காமம் எனும்சுவை ஏமம் உணர்கையில் 
   காயங்கள் பெறுதல் சுகம்! 
சாதம் பருப்புடன் நெய்யும் பிசைந்துநம் 
   தாயூட்டும் அன்னம் சுகம் - அதில் 
சற்றே நடுவினில் பொரியலும் அப்பளமும்
   சார்ப்பாகத் தருதல் சுகம்!

கிண்ணத்திலே மது, எண்ணத்திலே புகை 
   கிளர்த்தும் சிலர்க்குச் சுகம் - உயர் 
கின்னரர் தோற்றிடக் குழவிகள் பேசிடும் 
   கிளியெனும் மழலை சுகம்! 
வண்ணம் நிறைந்ததோர் வானத்து வில்லினை 
   வாஞ்சையாய்ப் பார்த்தல் சுகம் - இவை 
வார்த்தையில் கோத்திட இயலாத போதினில் 
   வாய்பிளந் திருத்தல் சுகம்! 

பார்ப்ப தனைத்தையும் சொல்லுதல் சுகமன்று 
   பாடா திருத்தல் சுகம்! - அவன் 
படைப்பில் அனைத்துமே சொல்லைக் கடந்ததோர் 
   பரவசம் உண்மைச் சுகம்! 
வார்த்தையை மிஞ்சிடும் வாழ்க்கையில் கொஞ்சிடும் 
   வளமான தெய்வம் சுகம்! - அவன் 
வழியில் தொடர்வதும் மடியில் வளர்வதும் 
   மனதுக்குச் சேர்க்கும் இதம்!!

-30.11.2019

குரல்வழிப் பதிவைக் கேட்கப் படத்தைச் சொடுக்கவும். 

Comments

Popular Posts