பாரதியிடமிருந்தே பெற்ற வாழ்த்து

08.12.2019 தேதி கல்கி வார இதழில் வெளியான கட்டுரை. 
பாரதி செல்லம்மா சிலையுடன் 

ஏழு அடி உயரத்துக்குக் கம்பீரமான சிலை. மகாகவி சுப்பிரமணிய பாரதி, செல்லம்மாள் தோளில் கைபோட்டபடி இருக்கும் சிலையைப் பார்க்கவே பரவசமாக இருந்தது. இதனை உருவாக்கக் கடுமையாக உழைத்திருக்கிறார் சிற்பி சுரேந்திரநாத். அவரிடம் பேசினோம்.

சிற்பக் கலையில் உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்போது?
"நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்து இந்த ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. அதற்கு முக்கியமான காரணம் என்னுடைய சகோதரர்தான். அவர் கன்னியப்பன் என்கிற சிற்பியிடம் அப்போது உதவியாளராக இருந்தார். நான் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்ததும் அதே சிற்பியிடம் வேலைக்குச் சேர்ந்தேன். அவர்தான் ‘நீ வேலை செய்ய வரவில்லை; கற்றுக்கொள்ள வந்திருக்கிறாய் என்பதை உணர்’என்று சொல்லி எனக்குக் கற்பித்தார். அதிலிருந்து சிற்பக்கலை மேல் ஆர்வம் ஏற்பட்டது."
சிற்பியிலிருந்து கல்லூரியில் பகுதி நேர ஆசிரியர் ஆனது எப்படி?
"நான் எங்கள் ஆசிரியர் சிற்பி கன்னியப்பனுடன் சேர்ந்து சிற்பங்களைப் படைப்பதில் ஆர்வமா இருந்தேன். என் அப்பாதான் ஆசானிடம் சொல்லி என்னைப் படிக்கச் சொல்லும்படி வேண்டினார். அதன்பின் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுதி பன்னிரண்டாவது வகுப்பிலும் தேர்ச்சி பெற்றேன். நுண்கலை என்று சொல்லப்படும் ஃபைன் ஆர்ட்ஸ் படித்தேன். பிறகு நான் படித்த அதே கல்லூரியில் எனக்கு வேலையும் கிடைத்தது. சிறிது காலம் அங்கே வேலை பார்த்தேன். அதன்பின் அந்த வேலை ஒத்துவரவில்லை.
சொந்தமாக ஆர்ட் ஸ்டூடியோ தொடங்கினேன். அதன்பின் சில கல்லூரிகளில் இப்போது பகுதி நேர ஆசிரியராகவும் பணி செய்கிறேன். இவை எல்லாமே எனக்கு என் கலை தந்த பரிசு என்றே சொல்வேன்."
இந்தப் பாரதியார், செல்லம்மா சிலை செய்தது பற்றி?
சிலை செய்யும் சுரேந்திரநாத்
"சேவாலயா என்று ஒரு தன்னார்வ நிறுவனம் பல நல்ல காரியங்களைச் செய்து வருகிறது. அதன் நிறுவனர் முரளி என்னைத் தொடர்புகொண்டு இதுபோல ஒரு சிலை செய்யச் சொன்னார். பாரதியாரும் அவர் மனைவி செல்லம்மாளும் இருக்கும் படம் கிடைத்தது. அதில் பாரதியார் செல்லம்மாள் தோள் மீது கை போட்டிருப்பார். அந்தப் படத்தை அப்படியே சிலையில் வடித்தேன். இதைச் செய்ய எனக்கு நான்கு மாதங்கள் ஆயின. இது ஏழரை அடி உயரச் சிலை. க்ளேவில் மோல்டிங் செய்யப்பட்டு பின்னர் ஃபைபரில் செதுக்கப்பட்ட சிலை."
பாரதியார் மேல் உங்களுக்கு ஈடுபாடு உண்டா?
"சிறு வயதில் பாரதியார் பாடல்களைப் படித்திருக்கிறேன். பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் நான் தோல்வியடைந்ததும் தமிழ்ப் பாடத்தில்தான். ஆனால் பாரதியார் கவிதைகள் எனக்கு அப்போதிலிருந்தே பிடித்ததாக இருந்தன. பாரதியார் எதையும் சந்திக்கும் வீரப் பார்வை கொண்டவர். அவருடைய அந்த வீரம், என்னுடைய வாழ்க்கையிலும் நான் கடைப்பிடித்துவரும் வீரம். அது உடல் சார்ந்த வீரம் மட்டுமல்ல, மனம் சார்ந்த வீரமும் கூட. எந்த நிலைமையிலும் நம்பிக்கை இழக்கக்கூடாது என்பதை நான் பாரதியாரிடம் கற்றுக்கொண்டேன். இந்தச் சிலையைச் செய்யும்போதுகூட அந்த வீரத்தைப் பிரதிபலிக்கும் கண்களுடனேயே நான் இதைச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்."
உங்கள் படைப்புக்கு வரவேற்பு எப்படியிருந்தது?
"செல்லம்மா பாரதியின் ஊரான கடையத்தில் நிறுவ இந்தச் சிலையை வடிவமைக்கும் பணி யைத் தந்தவர் சேவாலயா நிறுவனர் முரளி. அவர் ஒரு பெரிய பட்டாளத்தோடு வந்து பார்த்துப் பாராட்டி வாழ்த்தியபோது மனது நிறைந்தது. ‘பாரதியிடமிருந்தே வாழ்த்துப் பெற்றதைப்போல உணர்ந்தேன்."
சிலை செய்யும்போது உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் ஏதேனும்?
"ஆரம்பத்தில் கம்பீரமாக நின்ற சிலை, கொஞ்ச நாள் வேலை செய்யும்போது நடுவில் பிளவு கண்டது. எங்கே விழுந்துவிடுமோ என்றும், இதனை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்றும் முனைப்போடு அந்த இரவு முழுவதும் தூங்காமல் அதை நிற்கவைத்தேன். வைராக்கியமான முயற்சிக்கு நிச்சயம் பலன் உண்டு என்று சொல்லித் தந்து இன்று கம்பீரமாக நிற்கிறது பாரதியார், செல்லம்மா சிலை. மேலும் சிலையைப் பார்க்கவந்த பள்ளி மாணவர்களில் பலர் இவர்தான் பாரதியாரா என்று வியந்தது, பாரதியை இன்னும் எவ்வளவு தூரம் இளைய சமுதாயத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதும் புரிந்தது."
உங்களுடைய வருங்காலத் திட்டங்கள்?
"அப்படி ஏதும் தீர்மானிக்கவில்லை. இப்போதைக்கு நான் கற்ற கலையையும் பெற்ற அறிவையும் நேரடியாகச் செயல்முறைக் கல்வி மூலமே என் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தும் இன்னும் பலரை உருவாக்கவும் வேண்டும். தோல்வியில் முடங்கிவிடாமல் தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். அவ்வளவுதான்!"

Comments

Popular Posts