மார்கழி கோலமாய் | மணிப்பாவை


மார்கழி மாதம் ஐயப்பன்மேல் பாவைப் பாடல்கள் எழுதலாம் என்று தோன்றியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஏற்கனவே விநாயகர்மேல் நான் எழுதி வைத்திருக்கும் பாவைப் பாடல்கள் #புதுவெம்பாவை என்று இருக்கின்றன. நாற்சீர் எட்டடி தரவு கொச்சகக் கலிப்பாவால் அமைவன பாவைச் செய்யுட்கள். #மணிப்பாவை -1 மார்கழி கோலமாய் வாசல் நிறைந்தனள் கார்த்திகைத் திங்கள் கழுத்தே றியமணி போர்புகழ் வில்லன் புலிவாக னன்கோயில் கீர்த்தியைக் காணக் கிளர்த்தும் சரணத்தின் வார்த்தைகள் கேட்டும் மயக்கமோ! எந்தோழீ! மூர்த்தி யிருவர் முகையாய் முளைத்தெழுந்த பார்த்திவன் ஐயப்பன் பந்தள ராஜன்பேர் சேர்ந்துரைத்து நீராடிச் சேவிப்போ மெம்பாவாய்! கருத்து: அம்மா வாசலில் இட்டிருக்கும் வண்ணக் கோலத்தின்மூலம் மார்கழி என்னும் பெண்மகள் நமக்குக் காட்சியானாள். ஒரு மாதம் ஆகிவிட்டது. நம் கழுத்தில் கார்த்திகை மாதம் ஏறியது ஐயப்பனின் துளசிமணி மாலை. மகிஷியுடன் தனக்கு நடந்த போரில் வென்று அகில உலகமும் புகழும்படி நின்ற வில் வித்தைக்காரன், புலிகளின்மேல் ஏறி நாடு சேர்ந்தவன் ஐயப்பன். அவனுடைய கோயில் கீர்த்திகளைப் பார்க்கும் ஆவலை நெஞ்சுக்குள் அந்த மணிமலை தூண்டிவிட்டு சரண கோஷத்தைச் செய்துகொண்டே இருக்கிறது. இந்த வார்த்தைகளைக் கேட்டும் உனக்கு மயக்கமா என் தோழி? சிவன் விஷ்ணு என்கிற இரு மூர்த்திகளின் அருளால் முகையாய் விரிந்து வளர்ந்தவன் ஐயப்பன். அவன் பந்தள தேசத்தை ஆளும் அரசன். அவனுடைய பெயரை நாம் அனைவரும் சேர்ந்து, உரைத்து, அவன் நினைவிலேயே நீராடி, அவனையே நெஞ்சில் சேவிப்போம் என் பாவையே!

Comments

பிரபலமான பதிவுகள்