பேசும் சித்திரங்கள்

-22.09.2019 கல்கி இதழில் வெளியான கட்டுரை-
 
 
நம் தெருக்களில் குப்பையான இடங்களையும் பாழடைந்த சுவர்களையும் கண்டிருப்போம். அவற்றின் அழுகுரலைக் கேட்டிருப்போமா? போகிற போக்கில் ஒருவர் ஓரிடத்தில் குப்பையைப் போட்டால், சில தினங்களில் அந்த இடமே அங்கீகரிக்கப்பட்ட குப்பைத்தொட்டி இடமாக ஆகிவிடுகிறது. இந்த அவலம், நம் எல்லாத் தெருக்களிலும் உண்டு. அவற்றுக்குச் சாப விமோச்சனமே கிடையாதா என்று எண்ணியபோது, ‘நாங்க இருக்கோம்’என்று கரம்தூக்கி வருகின்றனர் ‘கரம் கோப்போம்’என்ற அமைப்பினர்.
மொதல்ல எங்கள் வீட்டுக்கு எதிரே இருந்த சுவர் பாழடைஞ்சு, குப்பைக் கிடங்கா ஆகிட்டு இருந்துச்சு. அதைச் சுத்தம் செய்ய ஆரம்பிச்சோம். சுத்தம் பண்ணி அப்படியே விட்டால் திரும்பவும் குப்பை போட்டுடுவாங்கன்னு யோசிச்சோம். அந்தச் சுவர்ல ஏதாச்சும் கலைநயத்தைச் செயலாம்னு திட்டமிட்டோம். கொஞ்ச நாள்ல அக்கம் பக்கத்து மக்கள் நிறையபேர் அதைப் பார்த்துட்டு அவங்க பகுதிக்கும் செய்து தரச்சொல்லிக் கேட்டாங்க. நாங்களும் எஸ்.ஏ.பி.எஸ்.(Stop Abusing Public Spaces) ஒரு வாட்ஸாப் குரூப்பை உருவாக்கி அடுத்தடுத்த இடங்களையும் சுத்தம் செய்து அலங்கரிச்சோம். அதுவே எஸ்.ஏ.பி.எஸ்.என்கிற ஒரு அமைப்பா உருவானது" என்று அறிமுகம் செய்தார் உமா மகேஸ்வரி.
2016 ஆம் ஆண்டில் தொடங்கியிருக்கிறது இவ்வமைப்பு. மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர். நட்ராஜ் தொடக்கி வைத்திருக்கிறார். இதுவரை பல தெருக்களில் 36 சுவர்களுக்கு மேல் கலைநயத்தோடு ஒளிர வைத்திருக்கிறார்கள்.
ஆர்.ஏ.புரம் 4ஆவது தெருவில் இருக்கும் பெரிய சுவர்ல வரைஞ்ச பிறகுதான் நாங்க மீடியாவுக்கு நல்லா தெரிய ஆரம்பிச்சோம். நிறைய தன்னார்வலர்கள் சேவை செய்ய உதவியா வந்தாங்க. பொதுவா நாங்கள் எந்தப் பகுதியைச் சுத்தம் செய்கிறோமோ அந்தப் பகுதி மக்களே உதவி செய்வாங்க. வாட்ஸாப் குரூப்ல இருந்த அமைப்பு அப்படியே படிப்படியா உயரும்போது நன்கொடைகளும் வர ஆரம்பித்தன. நன்கொடை வாங்க ஒரு அங்கீகரிக்கப்பட்ட அறக்கட்டளை வேணும்ங்குறதால ‘கரம் கோப்போம்’ன்னு பதிவு பண்ணோம்" என்றார் கரம் கோப்போம் அறக்கட்டளையின் நிறுவனர் சிவக்குமார்.
பள்ளி மாணவர்கள், ஐ.டி. பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள் என்று ஏறத்தாழ 80க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இப்போது கரம் கோத்திருக்கிறார்கள். சென்னை நகரச் சுவர்களுக்குக் கலைமுகம் கொடுத்துவரும் இந்த அமைப்பு வித்யா மந்திர், வேணுகோபால் வித்யாலயா, ஆர்.ஏ.புரம் கார்ப்ப ரேஷன் பள்ளி போன்ற பள்ளி வளாகச் சுவர்களிலும் அந்தந்த மாணவர்களைக் கொண்டே அழகழகான ஓவியங்களை வரைந்திருக்கின்றனர். திருவீதி அம்மன் கோவில் தெரு, பி.எஸ். உயர்நிலைப் பள்ளி, ராமகிருஷ்ணா மடம் என்று மயிலாப்பூர் மொத்தமும் இவர்கள் வரைந்த சித்திரங்கள் காணப்படுகின்றன.
தொழில்முறையில் இணையவழிக் கல்வி கற்றல் துறையில் பணி செய்து வரும் சிவக்குமாரும் அவரது மனைவி உமா மகேஸ்வரியும் இணைந்து இந்த அறக்கட்டளை மூலம் நிறைய நலப்பணிகளை மேற் கொண்டு வருகின்றனர். இப்போது மயிலாப்பூர் கபாலீஸ் வரர் கோயிலைச் சுற்றி இருக்கும் மாட வீதியையும், தெப்பக் குளத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் இரும்பு வேலியையும் சுத்தம் செய்து வண்ணம் பூசும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதைத் தாண்டி, உமா மகேஸ்வரி, திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை பற்றியெல்லாம் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு விழிப்புணர்வும் வழங்கி வருகிறார்.
நாங்க ரெண்டு மூணு மணி நேரம் செலவு பண்ணி மாசக் கணக்குல சுத்தம் செய்து படங்கள் வரைந்த எத்தனையோ சுவர்கள், சில வருடங்கள் கழித்தும் அப்படியே அழகா இருப்பதைப் பார்ப்பதுதான் எங்கள் மகிழ்ச்சியே. நாம இருக்கும் இடத்தைச் சுத்தமாகப் பார்த்து அலங்கரிக்க வேண்டும்னு சின்னச் சின்னக் குழந்தைகளுக்குத் தோணுது. அதை அவங்க பெற்றோர் வழியே கொண்டு சேர்க்குறாங்க! இது எங்களுக்கு மகிழ்ச்சியும் பெருமையும். நம்ம இடத்தை நாமதான் சுத்தமா பார்த்துக்கணும், முடிந்த அளவு குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போட்டு, வேறெந்தச் சுகாதாரக் கேடும் பண்ணாமல் இருந்தாலே நம்ம இடம் அழகா இருக்கும். மக்கள் இதை உணர்ந்து பராமரிக்கணும்னு எங்களுக்கு ஆசை" என்றார் சிவக்குமார்.
நகரின் சுவர்களில் மகிழ்ச்சியுடன் சிரிக்கும் ஓவியங்களும் அதையே சொல்லுகின்றன.
-விவேக்பாரதி 

Comments

Popular Posts