இசை பிறக்கும் நேரம்


என்
உள்ளத்துக்குள் இசை பிறக்கும்
உன்னத நேரமிது! இந்த
உலகின் நன்மை கருதுவது! அட
உமக்காய்த் தோன்றுவது!

இதயத் துடிப்பின் நாதத்தை
மிருதங் கத்தின் ஓசைகளாய்
உதவும் காற்றின் சுவாசத்தைப்
புல்லாங் குழலின் பாடல்களாய்
நரம்பின் அசைவுகள் ஒவ்வொன்றும்
நல்ல வீணைத் தந்திகளாய்
உள்ளே கிடைக்கும் பெருமௌனம்
ஓங்காரச் சுருதிகளாய்

என்
உள்ளத்துக்குள் இசை பிறக்கும்
இன்னத நேரமிது!

வார்த்தை அற்ற பெருவெளியில்
வானம் திறக்கும் சிறுமனதில்
யார்வந் திதனைச் செய்வதென
ஆராய்ச்சி எதும் இல்லாமல்
போர்வந் ததெனச் செயல்மறந்து
புத்தி தெளிந்து மிகநனைந்து
பார்த்தால் நல்ல இசையொன்று
பாடலாகிக் கவிகிறது

என்
உள்ளத்துக்குள் இசை பிறக்கும்
உன்னத நேரமிது!

வாருங்கள் இதைக் கேட்பதற்கு
மனம் மறந்தே ஆடுதற்கு
வாருங்கள் இதில் வாழுதற்கு
வாழ்க்கை நிரந்தரம் ஆகுதற்கு
பாருங்கள் ஒரு புதுவுலகம்
பாடல் வழியில் இனிஜனனம்
சேருங்கள் உம் காதுகளைச்
சேரும் பாடல் அதனிடத்தை!

என்
உள்ளத்துக்குள் இசை பிறக்கும்
உன்னத நேரமிது! இந்த
உலகின் நன்மை கருதுவது! அட
உமக்காய்த் தோன்றுவது!!

-விவேக்பாரதி
30.12.2019

Comments

Popular Posts