புத்தாண்டு அழகே வருக


புத்தாண் டழகே வருக! - நாளும்
   புதுமை இன்பம் இயல்பாய்த் தருக!
இத்தோ டின்னும் நலமாய் - ஒரு
   ஈடில் லாத சுகமாய்த் தரமாய்

புத்தாண் டழகே வருக!

கண்ணில் பட்டவை வண்ண மாகுக
   காற்றில் ஆயிரம் பண்கள் தூவுக
மண்ணில் அனைத்தும் இன்ப மாகுக
   மனமெல் லாமும் மலர்க ளாகுக
எண்ணம் நினைப்பன ஏற்ற மாகுக
   எல்லாம் எல்லாம் மாற்ற மாகுக
தண்ணீர் அமுதம் வானில் வளர்க
   தரையெல் லாமும் நிறையென் றாக

வயல்கள் எல்லாம் வளமை காண்க
   வழிகள் எல்லாம் வலிமை காண்க
புயங்கள் உடல்கள் உறுதி காண்க
   புதிராம் வாழ்க்கை புதுமை காண்க
நியதிகள் எல்லாம் நிலைமை காண்க
   நித்தமும் சத்தியம் நிறைவைக் காண்க
முயற்சி அனைத்தும் முனைப்பைக் காண்க
   முற்றும் லட்சியம் வெற்றியைக் காண்க

ஏமாற் றங்கள் இனிமறை யட்டும்
   ஏகாந் தங்கள் இனிநிறை யட்டும்
நாமாய் உழைக்கும் நலம்வள ரட்டும்
   நம்முரி மைகளை நாடறி யட்டும்
ஓமெனும் தத்துவம் உள்ளுறை யட்டும்
   ஒவ்வொரு கணமும் களியிருக் கட்டும்
ஆமிவை எல்லாம் இனியமை யட்டும்
   ஆண்டுகள் நிலையிலை அகமுண ரட்டும்!!

-விவேக்பாரதி 
01.01.2020
Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

கவிதை ஆண்டாள் - 1

மாதங்களில் அவள் மார்கழி