உண்மையைத் தேடி...


நான்யார் நான்யார்
யார்யார் நான்தான் யார்?

பார்ப்பதில் எல்லாம் உண்மையைத் தேடும்
   பத்திரிகை யாளனா? - தினம்
பார்ப்பதை உண்மை என்று முகிழ்ந்து
   பாடிடும் கவிஞனா?

உணர்வுத் தளத்தில் உயரே பறக்கும்
   உன்னதப் பிறவியா? - சக
மணங்களோடே சேர்ந்து மணக்கும்
   மலர்களின் ஜாதியா?

அறிவைக் கேட்டு வேலை செய்யும்
   அதிகாரத்தவனா? மனம்
பறக்கச் சொல்லும் வார்த்தை நம்பிப்
   பறவை ஆனவனா?

அடுத்தவர் சொல்லை அப்படியே நான்
   ஆற்றும் எந்திரமா? - அட
தடுப்பவர் இல்லை என்ற நினைப்பில்
   தளங்கள் செய்பவனா?

அதிசயம் அற்ற தினத்தில் புதைந்து
   அழுகை மறந்தவனா? - நான்
துதிக்கும் தெய்வம் துணைவர என்றே
   தொல்லை செய்பவனா?

எனக்குள் புதிதாய் எப்படி எல்லாம்
   எரிமலை வெடிக்கிறது? - அது
கனக்கும் சுமையைக் கழற்றி வைக்கக்
   கவிதை பிறக்கிறது!

நான்யார் என்னும் கேள்வி இருக்க
   நாளும் நகர்கிறது - அது
வான்போல் விரிந்து தெரியும் நாளில்
   வாழ்க்கை புரிகிறது!!

-விவேக்பாரதி
07.08.2019

Comments

Popular Posts