Posts

Showing posts from 2020

பாரதி ஒரு புயல்

Image
- இலக்கியச் சாரல் அமைப்பின் இணைவழிக் கவியரங்கில் படைக்கப்பட்ட கவிதை -    சத்தமே இன்றி தவழ்கின்ற மாக்கடல் சீரும் – கரை மீறும் சட்டச் சடசட என்றுடன் காற்றுவந் தாடும் – அலை யோடும் மொத்த மரங்களும் சூறையில் சிக்கிட மோதும் – வலி ஓதும் மூளும் புயல்வர இத்தனையும் நிஜ மாகும் – பொது வாகும்   அதுபோல், கண்ணில் தீப்பொறி நெஞ்சில் தவவெறி கவிதைத் தமிழின் சாரதி – இந்த மண்ணில் புதுநெறி வகுக்கப் பிறந்தவன் மாபெரும் புயலே பாரதி!   தேசம் முழுவதும் நாசம் நடைபெற தேய்ந்து கிடந்திடு பொழுதினில் – ஒரு ஓசை இன்றியே அடிமைத் தளைநமை ஒடித்து வளைத்த வேளையில், நேசம் எனுமொரு அமுதைத் தாங்கியே நேரில் பூமியில் வந்தவன் – தன் ஆசை அனைத்தையும் யாரும் ரசித்திடும் அருங்கவி யாகவே தந்தவன்   எதிலும் துள்ளல்கள் எங்கும் பாய்ச்சல்கள் எல்லா வேளையும் கர்ஜனை – சிறைக் கதவுகள் இடிபட விலங்குகள் பொடிபட   கனல்கள் தெறிக்கும் சிந்தனை நதியாய் அன்பினில் மழையாய்க் கருணையில் ஞானத்தில் பெரும் கடலவன் – பகை உதிக்கும் பொழுதினில் உடனே எழுந்ததை உருவில தாக்கும் புயலவன்   கண்ணில் தீப்பொறி நெஞ்சில் தவவெறி கவிதைத் தமிழின் சாரதி – இந்த மண்ணில் புதுநெறி வகுக்கப் ப

ஏசுவை வரவேற்போம்

Image
யூத நிலத்தினில் காத லரும்பிட      உத்தமன் தோன்றுகிறான் – திரு மாதவள் மேரியின் மேனியில் தெய்வத      மாமணி தோன்றுகிறான் பெத்தல கேமெனும் முத்தொளிர் பூமியில்      பேரிறை தோன்றுகிறான் – ஒரு சித்திரம் போலரும் மட்டுத் தொழுவினில்      சிரிப்புடன் தோன்றுகிறான்   உலகவர் யாத்ரிகர் ஆகிடவே அவன்      ஒளியுடன் தோன்றுகிறான் – பெரும் உண்மையின் தூதுவன் மக்களை உய்த்திடும்      உறுதியில் தோன்றுகிறான் மலரினும் மெல்லிய உள்ளம் படைத்தவன்      மண்ணிதில் தோன்றுகிறான் – அருள் மாரி வழங்கிட ஏசு வெனும்கரு      மாமுகில் தோன்றுகிறான்   அன்பெனும் மந்திரம் உச்சரிக்க சிறு      ஆண்டவன் தோன்றுகிறான் – தன் அற்புத சக்தியில் அறிவு புகட்டிட      அதிசயன் தோன்றுகிறான் துன்பங்கள் தாங்கியும் ஆசிகள் சேர்த்திட      தூதுவன் தோன்றுகிறான் – சிறு தொழுவினில் வைக்கோல் வெளியினில் புதிதொரு      சூரியன் தோன்றுகிறான்   தேவதை யாவரும் பூமழை தூவிட      தேவனே தோன்றுகிறான் – நம் தேவைகள் யாவையும் தானெனச் செய்திடும்      செய்கைகள் தோன்றுகிறான் நாவுள மனிதர்கள் யாவரும் வாழ்த்திட      நல்லவன் தோன்றுகிறான் – இந்த நானிலம் முழுவதும் புனிதம் அடைந்திட     

மாதங்களில் அவள் மார்கழி - 2

Image
( அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)   மணக்கும் துளசி மாடத்து   மண்ணில் உதித்த மாமணியே அணைக்கும் பெருமாள் தோள்தழுவும் அலங்கல் தரித்த மாதரசே கணைக்கும் குதிரை யானையொடு கனவில் மாலைக் கண்டவளே நினைக்கும் செய்கை நிகழுமென நிஜத்தில் சொன்ன புதியவளே (11)   புதுமை உன்றன் பாட்டுநடை புலவர் மெச்சும் ராஜநடை! பதுமை நெஞ்சின் ஆசையெலாம் பதித்து வைத்த தேவகதை! முதுமைத் தந்தை மொழிவழியே முகிந்த கண்ணன் ராகமெலாம் எதுகை மோனை இயைபுகளாய் எழுந்து வந்த கவிதைவிதை! (12)   விதைத்தாய் காதல் பக்தியிலே விதந்தாய் காமம் காதலிலே கதைத்தாய் கண்ணன் பெண்மனத்தில் காட்டும் ஜாலம் அத்தனையும் எதைத்தான் முன்னாள் பெண்ணினமே ஏந்தி மறைத்துக் காத்ததுவோ அதைநீ கொஞ்சும் மொழிகளிலே அமைத்தப் போட்டாய் பாதையொன்றே! (13)   ஒன்றும் மனத்தின் எண்ணமெலாம் ஒழுக்கம் மிகுந்த வகையினிலே அன்று கொடுத்த தனைத்தையும் ஆழ்ந்து படித்தால் காதல்வரும் தென்றல் வந்து தொட்டணைக்க தேகம் சிலிர்க்கும் தன்மையதாய் மன்றில் சொன்ன கவிதைகளை மனதில் படிக்கப் பரவசமே (14)   பரவ சத்தில் எழுதியதா? பார்த்துச் சுகித்துச் சொல்லியதா? உரசி ஆசை ஒவ்வொன்றும் உயர்த்திப் பார்த்துப் பேசியதா? மு

மாதங்களில் அவள் மார்கழி

Image
  அரங்கனையே வேண்டி அகத்திருத்திப் பாட்டுச் சுரங்களையே தந்த சுடரே - வரங்களைப்போய் யாமெங்கே தேட எமக்கெதிரில் ஆண்டாளாய்ப் பூமகளே நின்றிருக்கும் போது ! ( 1)   போது புலர்ந்ததும் பொன்னான உன்குரலில் மாதை எழுப்பும் மகிமையளே - மாதவனின் தேமார்பை அல்லாது தீண்டேன் பிறவெனும் பாமாலை காதல் படிப்பு ! (2)   படித்தவ ருண்டு பரிமளமுன் வாழ்க்கை பிடித்தவ ருண்டடி பின்னும் - நடிப்பெதற்கு காதல் கவித்துவத்தை காளையர்க்குக் கற்பித்த மாதர் விளக்கே மகிழ்வு ! (3)   மகிழ்வுடன் துக்கம் மனக்கலக்கம் வந்தால் அகந்தேடும் உன்றன் அரும்பா - ஜெகன்னாதன் கண்சிரிக்கும் காட்சிதனைக் கண்டாலும் என்கண்ணின் முன்சிரிக்கும் உன்றன் முருகு ! (4)   முருகிளம் தேனுனக்கு முத்தமிழ்ச் சொல்லில் உருகிவிழும் உள்ளம் உரைத்து - மருகி படித்தவரைப் பெண்ணாக்கி பாழ்காதல் நோய்தான் பிடித்தவராய் செய்தல் பிழைப்பு ! (5)   புகலுவது காதலிடை பூணுவது பக்தி அகிலுடைய வாச அரும்பே - நகிலிணைகள் மாதவனைத் தீண்டுமுன் வந்திதழைத் தீண்டியதே சீதமிகு பாடல்களோ செப்பு ! (6)   செப்பு மொழிகவிதை செய்த மயக்கம்போல்

கருநிறக் கூந்தலும் மருளும் கண்களும்

Image
பாலாடைக் கட்டியடி – உன்னுடல்       பஞ்சணை மெத்தையடி  நூலாடை மூடிடினும் – நீயொரு       நெய்ரவைப் பொங்கலடி கருநிறக் கூந்தலடி – அவைபுது       கார்த்திகை வானமடி  மருகிடும் கண்களடி – அவையந்த       வானத்து மீன்களடி  ஆடைகள் மேகமடி – நீயொரு       அற்புத பானமடி  ஜாடைகள் வேதமடி – உனக்குள      சாயல்கள் தெய்வமடி புன்னகை முத்துகளாம் – இதழதை        புதுக்கிடும் சிப்பியடி  மென்னகை ஒன்றிருந்தால் – பிறகெந்த       மேன்மையும் தேவையில்லை  பார்வை படும்தொலைவில் – விரல்கள்       பட்டிடும் தூரத்தில்நாம்  சேர்ந்திருந்தால் போதும் – அதிலென்       ஜீவன் அடங்குமடி!! அன்பு நண்பர் ஷ்யாம் சங்கரின் ஓவியத்துக்கு நன்றி.  #மௌனமடி நீயெனக்கு -விவேக்பாரதி 11.12.2021

கார்த்திகைக் களிப்பு

Image
  -அலுவலகம் விட்டு வீடு திரும்புகையில் வீதி விளக்குகளைக் கண்டு மனம் வியந்தபோது- வார்த்திடும் நெய்யில் வளர்ந்திடும் ஜோதி, வடிவங்களாய் ஆர்த்திடும் வானத்(து) அழகுவேடிக்கை, அளவுடனே வேர்த்திடும் மேகம், விளையும் ஒளிமயம் வீதியெல்லாம் கார்த்திகை வந்ததைக் காட்டிட நெஞ்சம் களித்ததின்றே !! -விவேக்பாரதி 29.11.2020

ஆடிப்பாவை

Image
– குமுதம் இதழ் நடத்திய கதைப்போட்டிக்கு அனுப்பப்பட்ட கதை – ”என்ன விட்டுப்போ! யூ டோண்ட் டிசர்வ் மி” இதுதான் சீமா என்னைப் பிரிகையில் சொன்ன வார்த்தைகள். சாராவைப் பார்க்கச் சென்ற மாலையிலும் அந்த வார்த்தைகள்தான் என் காதுக்குள். “எனக்குத் தகுதி இல்லன்னு சீமா எப்டி சொல்ல முடியும்?” எனக்குள் வெகுநாட்களாய் அரித்துக் கொண்டிருந்த கேள்விக்குத்தான் சாரா விடையாக வந்தாள். சாரா! ஊட்டி கான்வெண்டிலிருந்தே என்னுடன் படிக்கும் தோழி. எங்கள்  அப்பாக்கள் க்ளப்பில் சேர்ந்து சீட்டாடுவார்கள். ஓரிரு முறை பேசியிருக்கிறேன்  அவ்வளவுதான்! அந்தப் பரிச்சயத்தை மட்டுமே கொண்டு அவளை அழைத்திருந்தேன். எனக்கு அவள் உதவச் சம்மதித்தால், அந்தக் காரியத்தை முடித்துவிட்டு நான் இந்த நாட்டைவிட்டே பறந்துவிடத் தயாராயிருந்தேன்.  முகமெல்லாம் புன்னகையாய் வெண்ணிறச் சுடிதாரில் ஒரு புள்ளிமான் போல் நடந்து வந்தாள் சாரா. என் எதிரே அமர்ந்தாள். நான் கையசைக்க. அவளுக்கும் சுடச்சுட காஃபி வந்தது. பதட்டம் தாங்காமல் சூடான காஃபியை விழுங்கி நாக்கைப் பொசுக்கிக் கொண்டாள். அவளது பதட்டம் எனக்குப் பிடித்திருந்தது. பழைய கதைகள் கொஞ்சம் பேசினோம். ஆனால், என் கேள்வி

நம்பிக்கை நாயகி

Image
நம்பிக்கை என்னும் அமிழ்த மகளையே     நானிந்த வேளையில் தேடுகிறேன்... நாளை நகர்த்திட ஓடி உழைத்திட    நல்லதோர் கைப்பிடி நாடுகிறேன்! எம்பிக் குதித்திடும் என்றன் மனத்தினை    எப்படி தீர்ப்பது தெரியவில்லை, ஏனிந்த நாடகம் என்னில் நடக்குதென்(று)    என்றன் மனமும் அறியவில்லை! காலங்கள் தீர உழைத்திடுவேன்! என்    கடமைகள் யாவும் நடத்திடுவேன் கண்ணென நான்கொண்ட வேலையைப் பாவித்துக்    கவனங்களோடு முடித்திடுவேன் சாலப் பணிந்த சிறுவுளம் இன்னமும்    தாழ்ந்து படித்திட கூச்சமில்லை தாழும் கதிரே உயர்வடையும் எனும்    சத்தியம் கற்றேன் கவலையில்லை! சின்ன நுணுக்கங்கள் சொல்லிக் கொடுத்திடும்    செல்வியந் நம்பிக்கை என்பதனால் சோரும் பொழுதினில் தூண்டும் சுடர்க்கரம்    தொட்டு மலர்த்துவள் என்பதனால் என்றன் செயல்களில் உள்ள நலங்களை    எடுத்துச் சொல்பவள் என்பதனால் இந்தப் பொழுதினில் நம்பிக்கையாம் அந்த    இறைவி வரவினை நாடுகிறேன்... ஓடும் வரைமனம் ஓடும் அதிலொரு    ஓய்தலில்லை சிறு தேய்தலில்லை ஒவ்வொரு பாதையும் கற்கும் அனுபவம்    ஒருபொழுதும் இதை மறக்கவில்லை தேடும் ஒளிகொஞ்சம் நேரில் எதிர்ப்படின்    சேரும் வழியிலென் வலியினிக்கும் தெம்பு பி

கோணாமல் இருக்கும் பேனா

Image
சொற்கள் கணத்த நெஞ்சோடு – நான்    தொடுவேன் என்று நினைத்தபடி புற்கள் மீதொரு கால்கொண்டு – தவம்    புகழும் கொக்காய் என்பேனா... கற்பனை என்னும் ஆறொழிகி – என்    கையின் வழியே தாள்களிலே தொப்பென வீழும் நொடிபார்த்தே – என்    தோளை உரசும் என்பேனா காதல் நெஞ்சில் வழிவதனால் – என்    கண்ணில் அமிலம் சுடுவதனால் மோதல் இன்றி கவிதைகள் – என்    மூளை நிரம்பி வருடுவதால் சாதல் இல்லா வார்த்தைகளை – நான்    தாளில் நிறைத்துக் காதலிக்குத் தூது விடுப்பேன் எனநினைத்து – என்    தொடுதலுக் கேங்கும் என்பேனா பேனா கொள்ளும் காத்திருப்பு – என்    பிரியம் வேண்டித் தொடர்கிறது நானாய்த் தொடுவேன் எனநினைத்து – அது    நகர்ந்து நகர்ந்து வருகிறது. வானாய் இருக்கும் என்மனது – முகில்    வந்தால் தூறும்; அதுவரையில் கோணா திருக்கும் பேனாவை – கைக்    கோடுக்க வேண்டும் காலத்தே!! –விவேக்பாரதி  2.11.2020

தெம்பு நதி தேவை

Image
மாலைமரி யாதையெலாம் தேவையில்லை என்றிருந்தால்    மாலைவரும் நேரமொரு துள்ளலுமில்லை – அது    வாய்த்திடாத நேரமொரு துவளலுமில்லை – சுடர்க் காலைவரும் என்றிரவைக் கண்மூடிக் கழித்திருந்தால்    கண்களுக்குள் வட்டநிலா பூப்பதுமில்லை – உடன்    காதலிக்கும் நட்சத்திரம் பார்ப்பதுமில்லை!   வேளைவரும் என்றுமட்டும் நெஞ்சகத்தில் நம்பி,உடன்    வேலைசெயச் சென்றுவிடு நிம்மதியுண்டு  – அதில்    வெற்றிவரும் நேரம்பெரு சன்னிதியுண்டு  – உன் தோளைமட்டும் நம்பியின்று தொடங்குகிற காரியங்கள்    தோற்பதில்லை ஒருநாளில் வெகுமதியுண்டு  – உன்    தொடக்கத்தை நீநம்பி அதைமதிநன்று…   கட்டிவிட்ட பொய்மூட்டை கடைசியிலே போயவிழ்த்தால்    காற்றினிலே கரைந்துவிடும் பூளைகளாகும் – வெறும்    கனவுகளால் அமைவதுவே நாளைகளாகும் – இன்று எட்டுவைக்கும் பாதைக்கொரு ஏற்றமிகு துணிச்சலுண்டு    எப்பொழுதும் இன்றுமட்டும் நிலையெனவாகும் – நேற்று    ஏறிவந்து நுரைகிளப்பும் அலையெனவாகும்   ஐந்தறிவு விலங்குகளே ஆனந்த லஹரியிலே    அன்றாடம் ஆடுவதைக் கொண்டிருக்கையில் – அவை    அன்பில்மட்டும் பார்வைகொண்டு கண்டிருக்கையில் – மனம் சிந்திக்கிற வழி,அதனை சாதிக்கிற கரமிருந்தும்    சின்

நெஞ்சுக்கு வழி

Image
நஞ்சுண்ட நாதனே நலம்வாழ வழியினை      நல்கிய தவளே என்றால் செஞ்சுண்ட வினையுனைச் சூழாமல் வாழ்ந்திட     செ ம்மையாம் வழியும் அவளே... மஞ்சுண்ட கடலையே மழையென்று பிழிபவள்      மனமுனைப் பிழிந்தி டாளோ பஞ்சுண்ட தீயெனப் பவமிற்றுப் போவதைப்      பார்க்கவும் கூடும் மனமே!! -விவேக்பாரதி 29.10.2020

ஏன் எழுதவில்லை??

Image
ஏனெழுத வருகுதிலை இப்போ தென்றே       எண்ணுவதை நான்முழுதும் விட்டு விட்டேன்  வானழுதால் மண்சிரிக்கும், மெழுகு வர்த்தி       வடிவெரிந்தால் இருள்விலகும் என்பதைப்போல் நானழுத கண்ணீரெல் லாமென் பாட்டாய்       நாளுக்கு நாள்முளைக்கும் என்பதாலே  மீனழுத கண்ணீர்போல் நெஞ்சில் மட்டும்       மீட்டுகிறேன் தனிமையெனும் யாழை மெல்ல  பூபார்த்தால் கவிதைவரும் மின்னல் கொள்ளூம்       புயல்பார்த்தால் கவிதைவரும் சன்னிதிக்குள்  தீபார்த்தி பார்த்தாலும் கவிதை கொட்டும்       தென்றலெனைத் தொட்டாலும் கவிதை கொட்டும்  கோபார்த்த மாகசில சுள்ளி நெஞ்சில்       கொளுந்தைவிட் டெரிகையிலும் கவிதை உண்டாம்  தாபார்த்த மாய்த்தேகம் கொதிக்கும் போதும்       தனிக்கவிதை எழுதுவது குறைவ தில்லை  இதனாலே எழுதவென அமர்வ தில்லை       இருக்கையிலே அமர்ந்தாலும் வருவ தில்லை  எதனாலே எவ்விடத்தில் பூகம்பங்கள்       எதிரொலிக்கும் என்றறியா நிலத்தைப் போல  பொதுவாக மனக்கதவை திறந்து வைத்து       போவதுவும் வருவதுமாய் வாழு கின்றேன்  அதுவாகக் கவிதைவரும் அனுப விப்பேன்       அண்டிவரா நேரத்தில் காத்தி ருப்பேன்!! -விவேக்பாரதி  27.10.2020

நான் பறக்கும்போது

Image
நிச்சயம் ஒருநாள் வான       நினைவெனைக் கொண்டு போகும்  அச்சம யத்தில் என்னை       அடக்கவே முடியா தம்மா  கச்சிதம் என்று வானைக்       கவிதையாம் சிறகினாலே  துச்சமாய் எண்ணி, மேலே       சூவெனப் பறப்பேன் நானே!  அடர்த்தியாய்ப் போர்த்தி யுள்ள       அழகிய மேக மூட்டை  கடந்துநான் பாயும் போது       கடவுளின் உருவம் தோன்றும்!  படர்கிற சூரியன்றன்       பட்டொளி என்மேல் பட்டு  உடையெலாம் மின்னும், இன்னும்       உயரநான் சென்றி ருப்பேன் பறவைகள் என்னைக் கண்டு       பாடங்கள் பயிலும், விண்மீன்  நிறையவென் மேலே ஒட்டி,       நிரந்தர அணிகள் ஆகும்.  சிறகினை அசைக்கும் போது       சிலிர்க்கிற தென்றல் காற்றென்  நறுமணம் அள்ளிக் கொண்டு       நாடெலாம் சேதி சொல்லும்  தேவர்கள் வியந்து கண்கள்       சடசட வென இமைப்பார்  கூவிடும் சேவல் பார்த்துக்       குழம்பிட நான் ஜொலிப்பேன் வாவென உலகை மொத்தம்       மகிழ்ச்சியில் அழைத்து மேலே  தாவிடும் வேகம் பார்த்துத்       தரையெலாம் வாய் பிளக்கும்  சந்திர வளைவில் கொஞ்சம்       சறுக்கிய பின்பு, தேவ  இந்திர உலகில் கொஞ்சம்       இருதயம் தொலைத்த பின்பு  மந்திர வானை மோதி       மல்லிகை போல் பொடித்

வாணியம்மா கொச்சகக் கலி

Image
இரண்டு நாட்களுக்கு முன், இரவு மணி 2 மணிவரை கவிஞர் சுந்தராவோடு வாட்ஸாப்பில் நடந்த உரையாடலில் கம்பனை வியந்து பாடத் தொடங்கி, கம்பனை ஆட்கொண்ட கலைவாணி எங்களையும் ஆட்கொள்ள பேச்சுத் தமிழிலேயே அந்தப் பேச்சியம்மாவுக்குப் பக்திப் பாட்டு அரங்கேறியது. விவேக்பாரதி: எங்கிருந்து கொண்டுவந்து கொட்டுனதோ? கம்பனுக்கே அங்கிருந்து யாரள்ளி விட்டதுவோ? புரியலையே! நெஞ்சவொரு சொல்லுக்குள்ள நெலாத்தூரம் அர்த்தம்வெச்சு செஞ்சுப்புட்ட மகராசன் தேர்ந்ததெங்க? தெரியலையே! சுந்தரராசன்: கொட்டிக் கெழங்குவித்த கோமகளக் கூப்புடுவோம்! அட்டியில்லா மவராசி, அவனுக்குக் கொடுத்ததெல்லாம் எட்டநிக்கும் எங்களுக்கும் எறிஞ்சுவுடு; பொறுக்கியதத் தட்டுவச்சுத் தின்னபடி தமிழ்குடிச்சு பொளப்போமே! விவேக்பாரதி: ஆமாண்ணே நெசந்தானே அவளுக்கே அதுதெரியும் பூமேல நின்னவளும் புள்ளையத்தான் சோதிக்க வேவாத வெய்யிலில வேண்டியிவன் பாடினதும் பாவாம பையவந்தா பாரதிய கூப்புடுவோம்! சுந்தரராசன்: பாட்டம்மா; பாட்டனுக்கும் பேருவச்ச பாட்டியம்மா; ஏட்டம்மா; தலையிலதான் எளுதிவச்ச மவராசன் வூட்டம்மா; எங்களுக்கே ஒலகம்மா! பொலவனுங்க கூட்டம்மா; சீலையப்போல் கொணத்தம்மா வாராயோ! விவேக்பாரதி