காலத்தின் எழுத்துருவம்


நண்பர் தாமல் கோ. சரவணனுடன் பேசிக் கொண்டிருந்தபோது கனன்ற கவிதை!
என் கவிதை என்னெனக் கேட்கின்றாய்! அது காலத்துக்கோர் எழுத்துருவம்! என் கண்ணில் பிறந்து காற்றில் தவழ்ந்துன் காதில் சொட்டும் தேனமுதம்! விண்ணகத்திலோர் மந்திரத் தொணி மீட்டி எடுத்தால் அதுகவிதை! - ஒரு வீணை நரம்பென இதய வரம்பினை விரல்கள் உரசப் புதிய இசை! எண்ணகத்திலோர் எரிமலைத் தழல் எடுக்கும் பொழுதில் மலரினங்கள் - இது எத்தனை முறைகள் வெட்ட வெளிக்குள் எட்டிப் பார்க்கும் அற்புதங்கள்! என் கவிதை என்னெனக் கேட்கின்றாய்! அது காலத்துக்கோர் எழுத்துருவம்! என் கண்ணில் பிறந்து காற்றில் தவழ்ந்துன் காதில் சொட்டும் தேனமுதம்! தனிமையில் மனம் அந்தரங்கத்தைத் தான் மறந்தொரு தரையினிலே - வெறும் தாளும் கோலுமாய் முணுமுணுப்பதும் சரிந்து புரள்வதும் பார்த்தவுடன், தினந்தினம் வரும் தென்றல் தமிழெனும் தெய்விகத்துடன் உரசுகையில் - பொறி சீறி எழுந்திடும் அந்தக் கணத்தினில் தெய்வங்கள் என்றன் வார்த்தைகளே! என் கவிதை என்னெனக் கேட்கின்றாய்! அது காலத்துக்கோர் எழுத்துருவம்! என் கண்ணில் பிறந்து காற்றில் தவழ்ந்துன் காதில் சொட்டும் தேனமுதம்! பூமி முழுவதும் எங்கும் ஓரிசை புத்தம் புதிதாய்ப் பூத்திருக்கும்! அது புரிந்த நெஞ்சகம் உனக்குணர்த்திடப் புயலின் சாயலில் சொல்லடுக்கும்! ஆமிதற்கெலாம் சக்தி காரணம் அவள் நினைப்பு என் கவிதைகளாம்! சிறு அற்பன் சொற்களில் அண்ட துண்டங்கள் ஆட்டம் அவளது சலங்கைகளாம்! என் கவிதை என்னெனக் கேட்கின்றாய்! அது காலத்துக்கோர் எழுத்துருவம்! என் கண்ணில் பிறந்து காற்றில் தவழ்ந்துன் காதில் சொட்டும் தேனமுதம்!! -விவேக்பாரதி 07.01.2020

Comments

Popular Posts