அதுவரை தாங்க மாட்டேன்
![]() |
Artist KULDEEP SINGH Paintings |
வந்திருக்க வேண்டும்!
பிரிவாய் என்றால் இந்தக் கணமே
பிரிந்து போக வேண்டும்!
சரிவாய் என்றால் இந்நொடி யேநீ
தாழ்ந்து வீழ வேண்டும்!
பெரிதாய் வளர்வாய் என்றால் உடனே
பெரிய தாக வேண்டும்!
மலர்நீ என்றால் உன்னைச் சுற்றும்
வண்டு போலென்னை வை
மலைநீ என்றால் உன்மேல் தூறும்
மழையின் முகிலாகச் செய்
சிலைநீ என்றால் உன்னை மூடும்
சிறிய துணியாகிறேன்!
வலையானாலும் உன்னோ டுரசும்
வாலை மீனாகிறேன்!
எதுவானாலும் உடனே உடனே
எடுத்த செய்கை முடி!
அதுவரை தாங்க மாட்டேன் கனவே
அழுது மடிவேனடி!
மூச்சைப் பிடித்து மூழ்கிக் குளித்து
முனைந்து பார்த்த போது
நீச்சல் முடிந்த கணத்தில் நானோர்
நீண்ட கரையில் தனியாய்!
ஆச்சர் யந்தான் கனவே அங்கே
ஆட்கள் யாரும் இல்லை
பேச்சுக் கல்ல ஏச்சுக் கேனும்
மனிதர் எவரும் இல்லை
தவித்தேன் துடித்தேன் தனியாய்ச் சிரித்தேன்
தமிழில் கூட அழுதேன்!
கவித்தேன் சுவைக்க ஒருத்தர் இல்லை
கண்ணில் நீரை உகுத்தேன்
அவத்தை தீரத் துடித்தேன் வியர்த்தேன்
அடுத்த கணம் உணர்ந்தேன்
குவித்தேன் உன்முன் விழித்தேன் கனவே
கூத்து கண்டு ரசித்தேன்
எதுவானாலும் உடனே உடனே
எடுத்த செய்கை முடி!
அதுவரை தாங்க மாட்டேன் கனவே
அழுது மடிவேனடி!
உள்ளே பேசிக் கிடப்பாய்! என்னை
ஊமையாக வைப்பாய்!
கள்ளைக் குடித்துக் கொண்டே அதனைக்
கருத நஞ்சு என்பாய்
வெள்ளை ஆடை உடுத்தச் சொல்லி
வெட்டிக் கொலைகள் செய்வாய்
துள்ளிக் கொண்டே இருப்பாய்! என்னைத்
தூங்க வைத்தி ருப்பாய்!
இத்தனை லீலை ஏனோ கனவே
இனியும் தாங்க மாட்டேன்
பொத்தென வீழ்ந்தால் பின்னால் எந்தப்
போதும் விழிக்க மாட்டேன்!
வித்தைகள் காட்டிப் பந்தா டுவதை
விரைவில் நிறுத்தி வைப்பாய்!
குத்தகை எடுக்க நிலமா இடமா?
கூடவே இருப்பாய்!
ஆம்!
எதுவானாலும் உடனே உடனே
எடுத்த செய்கை முடி!
அதுவரை தாங்க மாட்டேன் கனவே
அழுது மடிவேனடி!
-விவேக்பாரதி
07.01.2020
Comments
Post a Comment