Posts

Showing posts from February, 2020

இப்படி ஒரு படமா? | பார்த்துச் சொல்லுங்கள்!

Image
”மலருடன்தான் விரிகிறதே உலகம் தினந்தினமே! புது விடியல் தினம் வருவதெலாம் முதலில் மலரிடமே! காற்றோடு அசைந்திடும் மலரே நேற்றோடு உனக்கில்லை உறவே நான் புதிதாகவே  பிறந்தாகணும் உனைப் போலவே! மறையாது நீகொண்ட சிரிப்பு மாறாது உன் ஒளித் தெறிப்பு ஓர் நாளாகினும்  உன் வாழ்க்கையும்  பொன்வாழ்க்கையே!!” அவ்வளவுதான் பாடல் என்று காகிதத்தை நீட்டினேன். இது நடந்து பல மாதங்கள் ஆகிவிட்டன.  நண்பன் இரவி சரஸ் ஒரு குறும்படம் இயக்க ஆசை கொண்டு என்னிடம் சொன்னான். சரி அதில் நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு நீங்கள்தான் எல்லாமே என்றும் சொன்னான். முதலில் விளங்கவில்லை. பின்னர் தெரியவந்தது என்னுடைய எழுத்துகளுக்குப் புதிய களம் கொடுக்க முயற்சிக்கிறான் இரவி என்பது. சரி என்று ஒப்புக் கொண்டேன்.  “நீங்கள் ஒரு பாட்டும்! படத்தின் பின்னணி வசனங்களும் எழுதித் தர வேண்டும்” என்றான்.  “சரி! இந்தா பாடல்!” மேலுள்ள பாட்டை மட்டும் முதலில் எழுதிக் கொடுத்தேன். ”இவ்வளவுதான் பாட்டா” என்றான்.  "ஆம்! பின்னால் படத்தை முடித்துக்கொடு, பின்னணி வசனங்களைக் காட்சிகளைப் பார்த்து எழு

இசைக்கவி ரமணனின் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா.

Image
சென்னை பாரதிய வித்யா பவனில் இசைக்கவி ரமணனின் ஐந்து நூல்கள் வெளியாயின. எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராத, திரைத்துறைக்குள் இல்லாத ஒரு கவிஞருக்கு இப்படிப்பட்டதொரு விழா இக்காலத்தில் எடுக்கப் படுவதும், அதில் அரங்கம் நிறைய மக்கள் வந்து கலந்து கொள்வதும் பெருவியப்பு. இதில் எனக்குக் கிடைத்த பேறு, இந்த நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கும் பாக்கியம். தமக்கு இதுவொரு முக்கியமான நிகழ்வாக இருந்தாலும், “உன் இஷ்டம்! நீ புகுந்து விளையாடு” என்று எனக்கு எல்லாவித உரிமையும் தந்த இசைக்கவிக்கும், தம்முடைய வரவேற்புரையில்,”எங்கள் வீட்டுப் பிள்ளை விவேக்” என்று அன்பு செலுத்திய அவர் மனைவி அனு அம்மாவுக்கும் எத்தனை நன்றி சொல்வது. நான் நினைப்பதெல்லாம் ஒன்றுதான்! எத்தனை ஆழ்ந்த அறிவார்ந்த சமூகத்தில் என்னைப் பராசக்தி இணைத்திருக்கிறாள் என்பதேயாகும். விழாவில் முன்னிலை வகித்து எனக்கு ஆசிகளை வழங்கிய அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், பொற்றாமரை இலக்கிய அமைப்பின் தலைவர் திரு. இல.கணேசன், நடிகர் சிவக்குமார், வானதி பதிப்பகம் டாக்டர் ராமநாதன், கட்டித் தழுவிக் கொண்ட இலக்கியவீதி இனியவன் ஆகியோருக்கும் என் பணிவான வந்த

தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு

Image
தஞ்சை பெருவுடையார் கோயிலைச் சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. குடமுழுக்கு ஏற்பாடுகள் நிகழ்ந்து கொண்டிருந்தன. ஊரே சலவை செய்து வெளுக்க வைத்த வண்ணமாய் தஞ்சை மின்னிக் கொண்டிருந்தது. உலக மக்களின் மனங்களில் நீங்காத ஆச்சர்யத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கும் தமிழரின் அற்புதங்களில் ஒன்றான பெரியகோயில் கும்பாபிஷேக விழா, தஞ்சா வூர் மொத்தத்தையும் திருவிழாக் கோலம் ஆக்கி யிருந்தது. இத்தனை என்று எண்ணமுடியாத அளவு பலகட்ட பாதுகாப்புகள் காவல் துறையினரால் அமைக்கப்பட்டிருந்தது.  பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நிறுவப்பட்ட கோபுரங்கள் மீண்டும் பளிச்சிடப்பட்டு, செம்மை நிறத்தில் தகதகவென ஜொலித்தன. கோயிலுக்குள் நுழையும்போதே ஆண்கள், பெண்கள் என்று இரண்டு பிரிவிலும் சோதனைகள் நிகழ்த்தப்பட்டன. வாயிலைக் கடந்து உள்ளே  நுழைந்ததும் வலதுபுறம், ஆளுயரத்துக்குப் பெரிய கோயிலின் மாதிரி வடிவமைப்பு பச்சைப் பசும்புற்களின் பின்னணியில் பிரம்மாண்டத்தின் டிரெய்லரைக் காட்டியது.  அதையும் தாண்டி நுழைந்ததில், வேத கோஷங்களும், தமிழ்த் திருமுறைகளும் ஒலித்தன. வலது பக்கம் யாகசாலை. நேராக கோயிலுக்குள் நந்தி சந்நிதிக்குக் கீழே பச

கூடல் நாதன்

Image
ஆடல் நாதனை ஆன்றமெய் ஞானியர்  தேடும் நாதனைத் தீந்தமிழ்ப் பாடல்கள் பாடும் நாதனைப் பார்புகழ் நாதனைக் கூடல் நாதனைக் கும்பிட மோட்சமே! சிக்கல் நாதனைத் தாமரை வைத்ததோர் மக்கள் நாதனை மாதுப ராசக்தி பக்க நாதனைப் பத்தரின் நாதனைச் சொக்க நாதனைச் சூழ்ந்திட மோட்சமே! -விவேக்பாரதி 22.02.202 0

கனல் மணக்கும் பூக்கள்

Image
சந்த வசந்தம் கூகுள் குழுவின் கவியரங்கில் வாசித்த கவிதை. புனல்மணக்கும் பூக்களெனில் தாய்மைப் பார்வை     புகழ்மணக்கும் பூக்களவை கலைஞன் பார்வை  கனவுமணக் கும்பூக்கள் சிறுவர் பார்வை     கடமைமணக் கும்பூக்கள் உழவர் பார்வை  தினம்நடக்கும் திருட்டாலும் லஞ்சத் தாலும்     திரிகின்ற மானுடத்தின் வன்மத் தாலும்  கனல்மணக்கும் பூக்களவை கவிஞர் பார்வை     காலத்தைக் கவனிக்கும் இளைஞர் பார்வை! கொஞ்சநஞ்ச மாவுலகில் திருட்டுக் கொள்ளை     கோடிகோடி யாய்ப்பணத்தைப் பதுக்கினாலும்  பஞ்சமது வந்ததுபோல் இன்னும் இன்னும்     பாய்போலே சுருட்டுகிறார்! இல்லா ஏழை  நெஞ்சுடைந்து வீடிழந்து நலமி ழந்து     நடுத்தெருவில் ஏங்குகிறார்! நடக்கு மிந்த  வஞ்சகத்தைத் தீய்த்திடவே பெருகும் பார்வை     வருகின்ற தலைமுறையின் கனலின் பார்வை!  பெண்மனத்தில் ஆசைகளை விதைத்து விட்டுப்     பெரும்போகப் பொருளாகச் சுகித்து விட்டு மண்ணிலொரு குப்பையென வீசும் கூட்டம்,    மழலையையும் கூசாமல் தொட்டுப் பார்க்கும்!  எண்ணத்தால் மிருகங்கள் ஏதோ தோற்றம்     எடுத்ததிலே மனிதர்கள்! இவரை எல்லாம்  திண்ணத்தால் பொசுக்கவரும்

சிவராஜ பாதம்

Image
#மஹாசிவராத்திரி2020 இமயத்தின் வழியெங்கும் நடைகண்ட பாதம்    இறைநேசர் புகழ்காண மண்வந்த பாதம்  உமையம்மைக் கொருபாதி மணிகொண்ட பாதம்      உலகத்து முனிவர்க்கு நடுவான பாதம்  சமர்கண்டு ராக்கதரை மிதிக்கின்ற பாதம்      சாமகாணம்கேட்டு நடிக்கின்ற பாதம்  தமிழ்தந்த உயர்த்தெய்வம் சிவராஜ பாதம்      சரணமது சரணமெனும் தருணமது போதும்!  அழுதேங்கும் அடியார்க்குத் தாயாகும் பாதம்     ஆறுகரை மூடிவிட மண்தொட்ட பாதம்  மழுவோடும் மானோடும் அமர்கின்ற பாதம்     மழைபோன்ற கருணையினைத் தருமன்புப் பாதம்  நிழலாகத் தொடர்கின்ற நிஜமான பாதம்     நீண்டுவரும் பிறவிகளை நீக்குகிற பாதம்  தழலாகும் புனலாகும் சிவராஜ பாதம்      சரணமது சரணமெனும் தருணமது போதும்!   விடம்கண்டு பாற்கடலில் நடையிட்ட பாதம்     விளையாடல் பலசெய்ய விழைகின்ற பாதம்  இடமெங்கும் களியாட்டம் இடுகின்ற பாதம்     இல்லாமை போக்கிவிட அருள்கின்ற பாதம்  தடங்கண்ட அருளாளர் தொடர்கின்ற பாதம்     சருக்கிவிழும் மலமூன்ற நொறுக்கிவிடும் பாதம்  சடைராஜன் மகராஜன் சிவராஜ பாதம்      சரணமது சரணமெனும் தருணமது போதும்!  நந்திக்கு ம

சத்குரு பஞ்சகம்

Image
விசாகப்பட்டிணத்தில் இருக்கும் பீமுனிப்பட்டிணம் என்ற கிராமத்தில் சத்குரு சிவனந்த மூர்த்தி அவர்களது ஆசிரமத்தைத் தரிசிக்கும் பாக்கியம் இன்று காலை கிட்டியது! அங்கே உதிர்ந்த #சத்குரு_பஞ்சகம் குருவின் குருவே குவலயமே! தெய்வத் திருவின் வடிவே திறமே! பொருளே தவனாந்த மென்னும் தழலுருவே! எங்கள் சிவானந்த மூர்த்தீம் சரண்! சரணெய்தி னார்க்கில்லை சஞ்சலம்! மண்ணில் மரணம் பிறப்பென்னும் மாற்றம்! தருணத்தைக் கண்டு குருவின் கழல்களைப் பாற்றுவார்க் குண்டு நிஜத்தில் உயர்வு! உயர்வி லிமயமலை உள்ளத்தால் ஆழி அயர்வுக்குத் தென்றல் அமிர்தம்! பயத்தை விரட்டிடும் தாயுருவம்! வித்தைக் கரசன்! அரட்டும் மிகத்தூய அன்பு! அன்பே அவன்மார்க்கம் ஆற்றல் வளர்சிந்தை இன்பம் குருவின் இயல்புநிலை! முன்பைச் சுருக்கிடும் கைகள் சுகமவன் பேச்சு கருக்கலில் தோன்றும் கதிர்! கதிரவன் தூமதி கண்கள்! அவனே நதித்தலை கொண்ட நடிகன்! விதித்தலைப் பட்டுழலும் மாந்தர் பவம்போக்க மோதிரத்தால் குட்டுவைக்கும் கைகள் குரு!! இந்தப் பேரும்பேற்றை ஏற்படுத்திக் கொடுத்த இசைக்கவி ரமணன் ஐயாவுக்கு நன்றி! -விவேக்பாரதி 16.02.2020

சென்னையில் விவேகானந்தர் - வந்தால் இன்று

Image
இராமகிருஷ்ணர் போற்றி காளிக்கொரு செல்லப் பிள்ளை கனல்கொண்ட துளசித் தீர்த்தம் வேளைதவ றாமால் வேத விளக்கத்தில் நாட்டம் கொண்டு, நாளெல்லாம் யோகம் செய்த நமதுகுரு ராம க்ருஷ்ணர் தாளிரண்டை நெஞ்சில் பற்றித் தமிழ்க்கவிதை தொடங்கு கின்றேன்! இத்தனை நாளாய் நீயும் எங்கிருந் தாயென் செல்வ! உத்தமி காளி என்னை உனக்கெனப் படைத்தா ளென்று மெத்தநம் குரும கிழ்ந்து மெச்சிய விவேகா னந்தர் சத்தியத் தாள்கள் போற்றி சருகுநான் பேசு கின்றேன்! தலைமை வணக்கம் குருவாக வந்தென்னைக் குவலயத்தோர் வாழ்த்தக்             குன்றின்மேல் வைத்த தவமே குறையோ டிருந்தவெனைக் குறியோ டியங்கிவரக் கூர்மை கொடுத்த தயவே! உருவாகி என்னைநான் வடிவாக்க வானத்தின்             உமையாள் அளித்த படியே உண்மையே உள்ளத்தின் வெண்மையே! நெஞ்சத்தில்             உறுதியைத் தந்த துணையே! வரியாய் இருந்தவெனைக் வளமான பாடலாய்             வாழ்விக்க வந்த கவியே வள்ளலே மிகவாழ்ந்த உள்ளமே! என்சொல்லில்             வளமை பயந்த தமிழே பரிவோடு நான்செல்லும் பாதைக்கு முதல்போட்ட             பாவலர் போற்றும் மணியே பாடலே வாழ்க்

அழுதாலும் நான் கலைஞன்

Image
யாருக்கேனும் கேட்கட்டும்! நான் யாழை மீட்டுகிறேன்! மனப் போரில் கிடைத்த வலிகள் தடவிப் போதனை பேசுகிறேன்! யாரேனும் இதைப் பார்க்கட்டும்! நான் ஓவியம் தீட்டுகிறேன்! அதில் உள்ள நிறங்கள் என் உணர்ச்சிகள் உருக்கிப் பூசுகிறேன்! நீருக்குள்ளே மீன்போலே, சிலர் நிஜத்தில் அழுவதுண்டு! அவர் நினைவினில் எல்லாம் ஆயிரம் கனவு நித்தம் வளர்வதுண்டு! காரணமில்லா அழுகையில்தான் பல காயம் வலிப்பதுண்டு! அது காட்டிச் செல்லும் ஞாபகம் வழியே கவிதை பிறப்பதுண்டு! இருவிழி வழிவரும் அழுகைக்கே, இவ் இரவு நனைகிறதே! இன்னும் எத்தனை எத்தனை அழுகைகள் உண்டு எல்லாம் தாங்கிடுமோ? ஒருவரின் இசைக்கே இவ்வுலகம், கண் உறங்கிக் கிடக்கிறதே! மனம் உண்மையில் எழுப்பும் இசைகேட்டால் இந்த உலகம் என்படுமோ? அழுதாலும் நான் கலைஞன்தான் - என் அழுகை கலைத்துளிகள்! அட முழுதும் அழுதிட வில்லையென் றாலும் மூழ்கும் மழைத்துளிகள்! என்னவோ யாருக்கேனும் கேட்கட்டும்! நான் யாழை மீட்டுகிறேன்! மனப் போரில் கிடைத்த வலிகள் தடவிப் போதனை பேசுகிறேன்!! -விவேக்பாரதி 11.02.2020

இரவு... இன்னும் கொஞ்சம் கழித்து...

Image
இந்த இரவு  இன்னும் கொஞ்சம் கழித்து  சூழ்ந்திருக்கக் கூடாதா? அடியிமைகளில் கனம் இறங்க,  ஆழ் மனத்தில் இசை மயங்க  வடிவழகு மேனியை நீ  வலையாய் விரித்துப்  பஞ்சணை அடைந்து  உறங்கத் தொடங்குகிறாயே!  ச்ச! இந்த இரவு  இன்னும் கொஞ்சம் கழித்து  சூழ்ந்திருக்கக் கூடாதா? ஏனென்று கேட்பதற்கு  ஆள்யாரும் இல்லாத  வானொன்றில் நான் மட்டும்  வார்த்தை விண்மீன் பொறுக்கி,  மின்னல் நார்கோத்து புதுமாலை கட்டுகிறேன்!  சூடிக் கொள்ளக்கூட எழுந்திருக்காமல்  சுருண்டு தூங்கச் செல்கிறாயே!  அட! இந்த இரவு  இன்னும் கொஞ்சம் கழித்து  சூழ்ந்திருக்கக் கூடாதா? காதலிலே காத்திருந்து  கால்களெல்லாம் புல் முளைத்துப்  பேதலித்து மனம் வலித்துப்  பேரை மட்டும் உச்சரித்து  நானிருந்த பகல் ரணத்தை  உன் செவிச் சிமிழில் கொட்டிவிட  நினைத்திருக்கும் நேரம்,  நீ  கனவில் என்னுடன் காதலிக்கக்  கண்கள் மூடித் தூங்குகிறாயே!  ப்ச்! இந்த இரவு  இன்னும் கொஞ்சம் கழித்து  சூழ்ந்திருக்கக் கூடாதா? போகட்டும்,  குறைந்த பட்சம்  இந்தக் கவிதை கேட்க மட்டும்  அரைமயக்கத் தூக்கத்தில்  சில “ம்ம்ம்ம்”களை உதிர்த்துவிடு!  இனி  என் வார்த்தையெல்லாம் உனக்கு மட்டும்   வாழ்க்கையைப்போல

அறமே அவன் உரு - சொல்லறச் செல்வன்

Image
காப்பு வில்வாக் குடைய வியனரசைத், தந்துணையாய்ச்   செல்வாக் குடையஸ்ரீ ராமனைச் - சொல்வாக்கால்  ஏத்தும் கவியிதற் கேற்றநற் காப்புமலர் சாத்தும் கலைவாணி தாள்!  அறமே அவன் உரு – சொல்லறச் செல்வன் சிலதினங்கள் முன்னால்நான் சிந்தை களிப்படைய உலகமகா கதைகளினுள் ஒன்றைப் படித்திருந்தேன்! தேரெழுந்தூர்த் தச்சன் தமிழ்க்கவியில் அற்புதமாய்  நேரெழுந்த ஸ்ரீராமன் அயணத்தைச் சுவைத்திருந்தேன்! அந்தக் கதையினையும், அதனுள் கவிக்கம்பன்  தந்த சுவைகளையும், தமிழின் அழகினையும்,  ஆழ அசைபோட் டமர்ந்திருக்கப், புத்தகத்தில்  வாழும் சொற்களெல்லாம் வளர்வது போல்கண்டேன்! முன்னே எழுந்துவந்த முழுச்சொற்கள், புத்தகத்துள்  என்னை இழுத்தன! எங்கோ ஓரிடத்தில்  பொத்தென்று வீழ்ந்தேன் போதையிலே மயங்கிவிட்டேன்!  புத்தி தெளிந்த பொழுதில் பார்க்கையிலே  முன்பக்கம் சரயுநதி, முத்துப்போல் தண்ணீர்!  என்பக்கம் கம்பன், எதிர்ப்பக்கம் அடர்க்காடு,  கத்தும் பறவைகள், காலாற நடந்தபடி  சுற்றும் விலங்குகள், சுகபோக வாழ்க்கையென்  றெல்லாச் சுகங்களிலும் கிறங்கிப் பின்தெளிந்து  சொல்லால் கம்பனைத் துதிக்கின்றேன்! “